அந்த நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வுகளின்படி, உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமானோர் மன நல பாதிப்புகளுடன் வாழ்கின்றனர். 2011-2021-ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளர்ச்சியைவிட மன நலப் பிரச்னைகளின் பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், 20-29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடையே மனநலப் பிரச்னை 1.8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
13 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 9 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு மன நலக் கவலைகள் இருப்பதாக மன நலன் குறித்த தேசிய அளவிலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 2023-இல் 1.7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 13,892 பேர், அதாவது 8.1 சதவீதத்தினர் மாணவர்களாவர். 2013-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பத்தாண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது 65% அதிகரித்துள்ளது. என்ஐடி, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் மன நலன் சார்ந்த பாடங்களைப் பயிற்றுவிப்பது தேவையான ஒன்றாகி வருகிறது. மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மன நலன் சார்ந்த கருத்தரங்கம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
பெற்றோருக்கும் கல்லூரிக்குமான தொடர்பு சேர்க்கை பெறுவதோடு முடிந்துவிடும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். பருவத் தேர்வுகளின்போது பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு நடத்தப்பட வேண்டும். கல்லூரிகளைப் பொருத்தவரை இது கடினமான ஒன்று என்றாலும், இதன்மூலம் மன நலன் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.