மனபலமே வெற்றிக்கு வழி!
வளர்ந்துவரும் புதிய துறைகளுக்கேற்ப தகவல்களைச் சேகரிக்கவும், கற்றுக்கொள்ளவும் வேண்டிய கட்டாயம் அதிகரித்து வருகிறது.


இன்றைய இளைஞர்கள் புரிந்து கொள்ள முடியாத வேகத்தில் பயணிக்கும் உலகில் வாழ்ந்து வருகின்றனர். வளர்ந்துவரும் புதிய துறைகளுக்கேற்ப தகவல்களைச் சேகரிக்கவும், கற்றுக்கொள்ளவும் வேண்டிய கட்டாயம் அதிகரித்து வருகிறது.
தேர்வு செய்வதற்கும், பணிபுரிவதற்கும், வேண்டிய தகவல்களைப் பெற இணையதளம் எனப் பல்வேறு சாதகமான அம்சங்கள் இருந்தும், இன்றைய மாணவப் பருவத்தினர் மன அழுத்தத்துக்கு உள்ளாகும் போக்கு அதிகரித்து வருகிறது.
மன நலன் தொடர்பாக வெளியாகும் ஆய்வு முடிவுகள், புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 10 முதல் 20 சதவீத குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் மன நல பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பிரச்னைகள் குறித்துப் பேசவோ, தீர்வு காணவோ யாருடைய உதவியையும் நாடுவதில்லை எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வுகளின்படி, உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமானோர் மன நல பாதிப்புகளுடன் வாழ்கின்றனர். 2011-2021-ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக மக்கள்தொகை வளர்ச்சியைவிட மன நலப் பிரச்னைகளின் பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், 20-29 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடையே மனநலப் பிரச்னை 1.8 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பண்பாட்டின் அடையாளமாக இருந்த கூட்டுக் குடும்ப முறை சிதைந்து போனதும் காரணமாகும். தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தப்பா, சித்தி என்றெல்லாம் பல்வேறு உறவுகளுடன் இருந்த குடும்பம், இன்று மூவரும், நால்வருமாக வாழும் நிலைக்கு மாறிவிட்டது.
பொதுவாக, மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர்களில், 50 சதவீதம் பேருக்கு 14 வயதிலேயே அத்தகைய பாதிப்பு தொடங்குவதாகவும், இந்த நிலை கவனிக்கப்படாமல் தொடர்ந்தால் 15 வயது முதல் 19 வயதாகும்போது அவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
13 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 9 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு மன நலக் கவலைகள் இருப்பதாக மன நலன் குறித்த தேசிய அளவிலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேர்வுக்கும், தேர்வு முடிவுக்குமான பயம், காதல் தோல்வி போன்றவற்றால் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளுதல், இத்தகைய வயதில்தான் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 2023-இல் 1.7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 13,892 பேர், அதாவது 8.1 சதவீதத்தினர் மாணவர்களாவர். 2013-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பத்தாண்டுகளில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது 65% அதிகரித்துள்ளது. என்ஐடி, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவிடம் பல்வேறு காரணிகள் தங்களை மன ரீதியாகப் பாதிப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 65 % உயர் கல்வி நிறுவனங்களில் மனநல ஆலோசகர்கள் இல்லை என்பது ஆய்வின்போது தெரியவந்தது.
உயர் கல்வி நிலையங்களில் நிலவும் இந்நிலைக்கு இன்றைய இளைய தலைமுறையினரிடம் மனவலிமை இல்லாததே முக்கிய காரணமாகும். இதனால், சிறிய அளவிலான பிரச்னைக்குக்கூட தீர்வு காண முடியாததுடன் எல்லாவற்றுக்கும் தற்கொலை செய்து கொள்வதே தீர்வு என்றும் எண்ணுகின்றனர். அண்மைக்காலமாக இணையதள விளையாட்டுகளின் பிடியிலிருந்து வெளிவர முடியாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
பொதுவாக நமது சிந்திக்கும் திறன், உணரும் திறன், செயல்படும் திறன் போன்றவை மன வலிமையுடன் இணைந்து செயல்படும் காரணிகளாக உள்ளன. மன வலிமை இருக்கும்போது விரும்பத்தகாத, சிக்கலான நிகழ்வுகளை எதிர்கொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் தேவையான சக்தியை அது நமக்கு அளிக்கும்.
இன்றைய இளைஞர்கள் குறிப்பாக மாணவப் பருவத்தினர் கவனம் சிதறிப் போயிருக்கின்றனர். நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும், அதுவும் சுலபமாகக் கிடைக்க வேண்டும், எதற்கும் தாமதம் கூடாது, எந்த பிரச்னையும் எழக்கூடாது என்கிற எண்ணத்தில் வாழ்பவர்களாக உள்ளனர். இவற்றுள் ஏதேனும் ஒன்று எதிர்மறையாக நிகழும்போது மனமுடைந்து விடுகின்றனர்.
கவலைகள், எண்ணங்கள், நோக்கங்கள் என்பதெல்லாம் எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஆனால், அதன்மேல் ஒரு பிடிப்பை உண்டாக்கிக்கொண்டு கவலையடைந்து அதனால் ஏற்படும் மனநலப் பாதிப்புகளிலிருந்து வெளியேறி சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின்னர் அது குறித்து நினைக்கும்போது அவை தேவையற்றவை, அர்த்தமற்றவை என்கிற உண்மை தெரிய வரும்.
அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் மன நலன் சார்ந்த பாடங்களைப் பயிற்றுவிப்பது தேவையான ஒன்றாகி வருகிறது. மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மன நலன் சார்ந்த கருத்தரங்கம் போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அதைத் தொடர்ந்து நடத்துவதும், கண்காணிப்பதும் தேவையான ஒன்றாகும்.
மேலும், பெற்றோருக்கும் கல்லூரிக்குமான தொடர்பு சேர்க்கை பெறுவதோடு முடிந்துவிடும் நிலை தவிர்க்கப்பட வேண்டும். பருவத் தேர்வுகளின்போது பெற்றோர்- ஆசிரியர் சந்திப்பு நடத்தப்பட வேண்டும். கல்லூரிகளைப் பொருத்தவரை இது கடினமான ஒன்று என்றாலும், இதன்மூலம் மன நலன் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மாணவர்களை மனவலிமை உள்ளவர்களாக மாற்ற வேண்டியது கட்டாயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...