சுயநல வல்லரசுகள்!

சீனாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் கடந்த வாரத்தில் உலகின் கவனத்தை ஈர்த்த அம்சங்களில் முக்கிய இடம்பெற்றது.

இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில், உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்குக் காரணமாக உள்ள மேற்காசிய போர்ச்சூழல் முக்கிய இடம்பெற்றது. அதற்கு அடுத்தபடியாக பேச்சுவார்த்தையில் முக்கிய இடத்தைப் பிடித்தது தைவான் விவகாரம்.

தைவானுக்கான அமெரிக்காவின் ஆதரவு குறித்து டிரம்ப்பிடம் நேரடியாகக் குறிப்பிட்ட ஜின்பிங், "சீனா-அமெரிக்கா உறவில் தைவான் விவகாரமே மிகவும் முக்கியமானது. இதைச் சரியாகக் கையாண்டால் மட்டுமே இருதரப்பு உறவில் நிலைத்தன்மை நீடிக்கும். தவறும் சூழலில், கடுமையான மோதல்கள் வெடிக்கக்கூடும். அது ஒட்டுமொத்த சர்வதேச அமைதியையும் பாதிக்கும்' என்று வெளிப்படையாகவே சுட்டிக்காட்டினார்.

தைவானுக்கு 11 பில்லியன் டாலர் அளவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்யப்போவதாக கடந்த டிசம்பரில் அமெரிக்கா அறிவித்தது. இப்போது ஜின்பிங்கின் நேரடி எச்சரிக்கையைத் தொடர்ந்து, "தைவானுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்வது தொடர்பான விவகாரத்தில், அமெரிக்கா இன்னும் உறுதியான இறுதி முடிவை எடுக்கவில்லை' என்று டிரம்ப் தெரிவித்திருப்பதன்மூலம் தைவானுக்கான நம்பிக்கையை டிரம்ப் குலைத்துவிட்டதாகவே பார்க்க முடிகிறது.

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற இடைக்கால தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்வதும் டிரம்ப்பின் சீன பயணத்துக்கான மற்றொரு நோக்கம். வல்லரசான அமெரிக்காவே தனது உறவை நாடுகிறது என்கிற தோற்றத்தை ஏற்படுத்தி, உள்கட்சிக் குழப்பங்களையும், தனக்கு எதிரான மனநிலையையும் மாற்ற முனைந்த அளவில் அதிபர் ஜின்பிங்குக்கு வெற்றி. அமெரிக்காவின்பலவீனத்தைப் பயன்படுத்தி, தைவானை பலவீனப்படுத்தும் தனது கொள்கையையும் உறுதிப்படுத்தியிருக்கிறது சீனா!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேலும் செய்திகளுக்கு...