காட்டின் மூலவரைக் காப்போம்
2017-ஆம் ஆண்டு வனத் துறையின் யானைகள் எண்ணிக்கை கணக்கீட்டின்படி இந்தியா முழுவதும் 29,964 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
'காட்டின் மூலவர்' என அழைக்கப்படும் யானைகள் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 200 அதிகரித்து இருக்கிறது என வனத் துறை கூறினாலும், யானைகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.
ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் சராசரியாக 75 யானைகள் சட்டத்துக்குப் புறம்பான மின்வேலிகள் மூலமாகவும், சராசரியாக 20 யானைகள் ரயில் மோதியும், 15-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடுவதன் மூலமாகவும், 20 யானைகள் விஷம் வைத்தும் என இந்தியா முழுவதும் ஓராண்டுக்கு சராசரியாக 130 யானைகள் மனிதரால் கொல்லப்பட்டு வருகின்றன.
காடுகள் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் யானைகள் அவசியம். மனித உயிர்கள் உள்ளிட்ட பல்லுயிர்களுக்கும் காடுகள் மிக மிக அவசியம்.
அண்மைக் காலங்களாக கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் யானைகள் வாழ்விடங்களுக்கு அருகே அமைக்கப்படுவதாலும், சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மலை அடிவாரங்களில் பல்வேறு கட்டடங்கள் அமைப்பதாலும் யானைகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளால் கொட்டப்படும் நெகிழிக் கழிவுகளை சாப்பிட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.
யானைகளின் வாழ்விடம் மற்றும் வழித்தடங்களுக்கு அருகே என்ன மாதிரியான பயிர்கள் பயிரிடப்பட வேண்டும் என்று வனத் துறையிடம் கலந்து ஆலோசித்து விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்.
வெடி உள்ளிட்ட பேராபத்துக்கள் ஏற்படுத்தி யானைகளை கொல்வோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.