நீட், எஃப்சிஆா்ஏ-வுக்கு எதிராக இன்று பேரவையில் தனித் தீா்மானம்!எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!ஆக. 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்புபழைய ஓய்வூதியத் திட்டம் பரிசீலனையில் இல்லை: மத்திய அரசு
/

காட்டின் மூலவரைக் காப்போம்

காடுகள் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் யானைகள் அவசியம்.

News image

காட்டின் மூலவரைக் காப்போம்... - பிரதிப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 5:07 am IST

இரா. பாண்டியராஜா

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலக யானைகள் விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யானைகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கம்.

2017-ஆம் ஆண்டு வனத் துறையின் யானைகள் எண்ணிக்கை கணக்கீட்டின்படி இந்தியா முழுவதும் 29,964 யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6,049 யானைகளும், அஸ்ஸôம் மாநிலத்தில் 5,719 யானைகளும், கேரளத்தில் 5,706 யானைகளும், தமிழ்நாட்டில் 2,761 யானைகளும் உள்ளதாக அந்தக் கணக்கீடு தெரிவிக்கிறது.

மேலும் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டலத்தில் 14,612 யானைகளும், அஸ்ஸôம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மண்டலத்தில் 10,139 யானைகள் இருப்பதாக வனத் துறை தகவல் தெரிவிக்கிறது.

2023-ஆம் ஆண்டு யானைகள் எண்ணிக்கை கணக்கிட்டின்படி தமிழ்நாட்டில் 2,961 யானைகள் உள்ளதாக வனத் துறை கணக்கீடு கூறுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் 1,858 யானைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலையில் 1,105 யானைகளும் இருப்பதாக அந்தக் கணக்கீடு கூறுகிறது. அதில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய அகத்தியர் யானைகள் காப்பகத்தில் 237 யானைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

வனத் துறை கணக்கீட்டின்படி 2017-ஆம் ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை 2,761 எனவும், 2023-ஆம் ஆண்டில் யானைகளின் எண்ணிக்கை 2,961 எனவும் தெரிவிக்கிறது. ஐந்து ஆண்டுகளில் 200 யானைகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கிறது அந்த அறிக்கை.

ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் சராசரியாக 75 யானைகள் சட்டத்துக்குப் புறம்பான மின்வேலிகள் மூலமாகவும், சராசரியாக 20 யானைகள் ரயில் மோதியும், 15-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடுவதன் மூலமாகவும், 20 யானைகள் விஷம் வைத்தும் என இந்தியா முழுவதும் ஓராண்டுக்கு சராசரியாக 130 யானைகள் மனிதரால் கொல்லப்பட்டு வருகின்றன.

'காட்டின் மூலவர்' என அழைக்கப்படும் யானைகள் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 200 அதிகரித்து இருக்கிறது என வனத் துறை கூறினாலும், யானைகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன.

காடுகள் செழிப்பாக இருக்க வேண்டும் என்றால் யானைகள் அவசியம். மனித உயிர்கள் உள்ளிட்ட பல்லுயிர்களுக்கும் காடுகள் மிக மிக அவசியம். அண்மைக் காலங்களாக கல்குவாரி, கிரஷர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் யானைகள் வாழ்விடங்களுக்கு அருகே அமைக்கப்படுவதாலும், சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மலை அடிவாரங்களில் பல்வேறு கட்டடங்கள் அமைப்பதாலும் யானைகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.

யானைகளின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதுடன் மட்டுமல்லாமல் யானைகள் வழித்தடமும் முற்றிலும் தடைபடுகிறது. யானைகள் விரும்பிச் சாப்பிடும் உணவான கரும்பு, வாழை, தென்னை போன்ற பயிர்களை யானைகளின் வாழ்விடங்களுக்கு அருகிலேயே பயிரிடுவதும், பின்னர் யானைகள் தோட்டத்தில் புகுந்து சேதப்படுத்துகின்றன என்று கூறி மின்சார வேலிகள் அமைத்து யானைகளின் உயிரைப் பறிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

போதாக்குறைக்கு அவுட்டு காய், கண்ணிவெடி, அன்னாசி பழத்தில் வெடி வைத்தல் ஆகியவற்றால் யானைகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றன. இது போதாதென்று தண்டவாளங்களைக் கடக்கும் போது, ரயிலில் அடிபட்டு இறக்கும் யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

பவானி உள்ளிட்ட ஆறுகளில் சாயக் கழிவுகள் அதிகம் கலந்து வருவதால், அந்தத் தண்ணீரை குடிக்கும் யானைகள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உட்பட்டு விரைவில் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளால் கொட்டப்படும் நெகிழிக் கழிவுகளை சாப்பிட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களை ஒட்டி உள்ள பகுதிகள் மற்றும் யானைகளின் வாழ்விடங்களின் குறிப்பிட்ட கி.மீ. தொலைவு வரை கிரஷர், குவாரிகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு முற்றிலும் தடை விதித்து கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.

மலையடிவாரங்களுக்கு அருகே உள்ள உள்ளாட்சி அமைப்புகள் குப்பைக் கிடங்குகளை இடமாற்றம் செய்து யானைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அமைக்க வேண்டும். யானைகளின் வாழ்விடம் மற்றும் வழித்தடங்களுக்கு அருகே என்ன மாதிரியான பயிர்கள் பயிரிடப்பட வேண்டும் என்று வனத் துறையிடம் கலந்து ஆலோசித்து விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்.

வனத் துறையுடன் சேர்ந்து இயற்கையான முள் வேலிகளை அமைக்க விவசாயிகள் முன்வர வேண்டும். தேவைப்படும் நிலையில் வனத் துறை அனுமதியுடன் சட்டத்துக்கு உட்பட்டு குறிப்பிட்ட அளவு மின்சாரத்துடன் இயங்கும் யானைகளைப் பாதிக்காத வகையில் சோலார் மின் வேலிகளைப் பயன்படுத்த வேண்டும்.

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தடுக்க வாளையார் மற்றும் மதுக்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு தெர்மல் உணர்திறன் கேமராக்களைப்போல இந்தியா முழுவதும் அமைத்து யானைகள் அதிகம் கடக்கும் மற்றும் யானைகள் அதிகம் உயிரிழக்கும் ரயில் வழித்தடங்கள் கண்காணிக்கப்பட்டு யானைகள் உயிரிழப்பு தடுக்கப்பட வேண்டும்.

வெடி உள்ளிட்ட பேராபத்துக்கள் ஏற்படுத்தி யானைகளை கொல்வோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.