அமெரிக்கா தொடர்ச்சியான ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்ற பெயரிலும், இஸ்ரேல் 'ஆபரேஷன் ரோரிங் லயன்' என்ற பெயரிலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போர் உலகையே ஸ்தம்பித்து, நாடுகளின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும் நிலையை எட்டி வருகிறது.
கச்சா எண்ணெய், எரிவாயு தேவைகளுக்கு வளைகுடா நாடுகளை நம்பியிருக்கும் நாடுகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்தப் போரினால் உலகளாவிய எரிபொருள் சந்தைகளும், விநியோகச் சங்கிலிகளும் தற்போது சீர்குலைந்துள்ளன. உலகம் முழுவதிலுமுள்ள பல நாடுகள் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை சந்திக்கத் தயாராகி வருகின்றன. ரஷியாவும், சீனாவும் ஈரானுக்கு நட்பு நாடுகள் என்பதால், அந்நாடுகள் இந்தப் பிரச்னைகளிலிருந்து விலகியே இருக்கின்றன.
தென்கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகள் மத்திய கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவையே பெரிதும் நம்பியுள்ளன.
மேற்காசியாவில் தொடரும் போரால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் ஊதியம் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.
'ஓராண்டுக்கு எரிபொருள் விலையில் 10 சதவீதம் அதிகரிப்பு, உலகளாவிய பணவீக்கத்தில் 40 அடிப்படைப் புள்ளிகள் உயரும்' என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) எச்சரித்துள்ளது. கச்சா எண்ணெய் தொடர்பான பணவீக்கத்தால், கப்பல் காப்பீடு 4 முதல் 5 மடங்கு அதிகரித்துள்ளது.