கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

போரால் சரியும் பொருளாதாரம்!

போரினால் உலகளாவிய எரிபொருள் சந்தைகளும், விநியோகச் சங்கிலிகளும் தற்போது சீர்குலைந்துள்ளதைப் பற்றி...

News image
Updated On :22 மார்ச் 2026, 9:40 pm

பாறப்புறத் ராதாகிருஷ்ணன்

அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல், ஈரான் மீது குற்றஞ்சாட்டி வருகிறது. 'அணுசக்தி' என்பது ஈரானின் உரிமை, அதை நாட்டு மக்களின் நலனுக்காகப் பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வந்தது.

அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாகவும், இது மத்திய கிழக்கிலுள்ள மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் எனக் கூறி கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல். பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தியது; அந்தப் போர் 12 நாள்கள் நீடித்தது. கடைசி நாளில், அமெரிக்கா தன்னுடைய விமானப் படை மூலம் 'பி2 பாம்பர்கள்' எனப்படும் நிலத்தடி பதுங்கு குழிகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்த குண்டுகளை, நிலத்துக்கு அடியில் இயங்கும் ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்கள் மீது வீசித் தாக்கியது.

இதில் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதனிடையே, ஈரானில் ஆட்சியாளர்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் தீவிர போராட்டத்தை நடத்தி வந்தார்கள். போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசுப் படைகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டன. மக்கள் போராட்டத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய டிரம்ப், ஈரான் போராட்டக்காரர்களுக்கு வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்தார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்கப் படைகள் களத்தில் இறங்கும் என எச்சரித்தார்.

இதற்கிடையில், மத்திய கிழக்கு நாடான ஓமன், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை ஜெனீவாவில் நடத்தியது. ஈரான் அணுசக்தி திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும், ஏவுகணைத் திட்டங்களை அமல்படுத்தக் கூடாது, மத்திய கிழக்கில் ஈரான் ஆதரித்துவரும் ஆயுதக் குழுக்களான ஹிஸ்புல்லா, ஹூதிக்கள், ஹமாஸ், சிரியாவின் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு கொடுப்பதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஈரானை வலியுறுத்தியது அமெரிக்கா. ஆனால், ஈரான் இதை முழுமையாக ஏற்கவில்லை.

அணுசக்தி திறனைக் குறைப்பது மட்டுமே சாத்தியம் எனத் தெரிவித்தது. மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தையிலும் தன் நிலைப்பாட்டை ஏற்க மறுத்ததால், அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப். 28- ஆம் தேதி ஈரான் மீது போரைத் தொடங்கின. ஈரானின் அணுசக்தி திட்டம், அதன் ராணுவ உள்கட்டமைப்பை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்கா தொடர்ச்சியான ஒருங்கிணைந்த வான்வழித் தாக்குதல்களை 'ஆபரேஷன் எபிக் ஃப்யூரி' என்ற பெயரிலும், இஸ்ரேல் 'ஆபரேஷன் ரோரிங் லயன்' என்ற பெயரிலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தப் போர் உலகையே ஸ்தம்பித்து, நாடுகளின் பொருளாதாரத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும் நிலையை எட்டி வருகிறது.

இதனால், கச்சா எண்ணெய், எரிவாயு தேவைகளுக்கு வளைகுடா நாடுகளை நம்பியிருக்கும் நாடுகள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. இந்தப் போரினால் உலகளாவிய எரிபொருள் சந்தைகளும், விநியோகச் சங்கிலிகளும் தற்போது சீர்குலைந்துள்ளன. உலகம் முழுவதிலுமுள்ள பல நாடுகள் கடுமையான பொருளாதாரச் சிக்கல்களை சந்திக்கத் தயாராகி வருகின்றன. ரஷியாவும், சீனாவும் ஈரானுக்கு நட்பு நாடுகள் என்பதால், அந்நாடுகள் இந்தப் பிரச்னைகளிலிருந்து விலகியே இருக்கின்றன.

தென்கிழக்கு ஆசியாவிலுள்ள நாடுகள் மத்திய கிழக்கிலிருந்து வரும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவையே பெரிதும் நம்பியுள்ளன. வியத்நாமில் போர் தொடங்கியதிலிருந்தே டீசலின் விலை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. கடும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, எரிபொருள் வரம்புகளை வங்கதேசம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்காசியாவில் தொடரும் போரால் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வைச் சமாளிக்க, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் அரசு ஊழியர்களின் ஊதியம் 30 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல், டீசல் ஒதுக்கீடு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் 60 சதவீத அரசு வாகனங்களைப் பயன்பாட்டிலிருந்து நீக்கவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் சமையல் எரிவாயு உருளைகளைப் பதுக்கி வைத்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் 'எஸ்மா' சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியிருப்பது இந்தப் பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு பாசுமதி அரிசி ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. போர்ப் பதற்றம் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 2,210 கோடி மதிப்பிலான மாம்பழக்கூழ், தொழிற்சாலைகளிலும், துறைமுகங்களிலும் தேக்கமடைந்துள்ளன.

வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவின் ஜவுளித் துறைக்கு முக்கிய மூலப்பொருளாகக் கருதப்படும் பாலியஸ்டர் ஃபைபர் எனும் பாலிஎத்திலீன் மூலப்பொருள்கள் இறக்குமதி முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளிகள் தேக்கம் உள்ளிட்ட காரணங்களால் கரூரில் ஜவுளித் தொழில் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல், அமெரிக்கா செய்த மற்றொரு செயலால் நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும்பகுதியைக் கையாளுகிறது கார்க் தீவு. இது 'ஈரானின் மகுடம்' என்று அழைக்கப்படுகிறது.

இங்கே உள்ள ராணுவத் தளங்கள் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய கிழக்கு வரலாற்றிலேயே மிக சக்தி வாய்ந்த குண்டு வீச்சு தாக்குதல் ஒன்றை அமெரிக்கா நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள், இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஈரான் மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதத்தை கார்க் தீவுதான் கையாள்கிறது. இந்தத் தீவின் எண்ணெய் கட்டமைப்புகள் பாதிக்கப்படும்போது உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாகவே கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும்.

இப்போது, டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கற்பனை செய்தபடி எதுவும் நடக்கவில்லை. 'ஆளும் அரசாங்கத்தை ஈரானியர்கள் கவிழ்த்து விடுவார்கள். ஆட்சி தானாகவே கவிழ்ந்து விடும்' என நினைத்த இந்த இருவரின் எண்ணமும் ஈடேறவில்லை. மாறாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியது. மற்ற வளைகுடா நாடுகளை ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அவர்களின் உயிர்நாடியான கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளையும் தாக்கி, அங்கு குடிநீர்ப் பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. இதனால், போரின் உத்தி கணக்கு அமெரிக்காவுக்கும் மற்ற நாடு

களுக்கும் எதிராகவே திரும்பியுள்ளது. ஈரானுடனான போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 200 டாலராக உயர்த்தப்படும் என ஈரான் தெரிவித்துள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய்யில் சுமார் 20 சதவீதம் கப்பல்கள் மூலம் ஹோர்முஸ் நீரிணையைத்தான் கடக்கின்றன.

இதில் ஒரு சதவீத விநியோகம் குறைந்தாலும் நான்கு சதவீதம் விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், வருங்காலத்தில் 80 சதவீத விலை உயர்வு சாத்தியம். தோராயமாக, 110 டாலர்கள் வரை விலை உயரும். இதனால், 'ஓராண்டுக்கு எரிபொருள் விலையில் 10 சதவீதம் அதிகரிப்பு, உலகளாவிய பணவீக்கத்தில் 40 அடிப்படைப் புள்ளிகள் உயரும்' என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) எச்சரித்துள்ளது. கச்சா எண்ணெய் தொடர்பான பணவீக்கத்தால், கப்பல் காப்பீடு 4 முதல் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

விமானங்களுக்கான எரிபொருள் கட்டணம் இரட்டிப்பாகியுள்ளது. ஹோர்முஸ் நீரிணையை மூடியதால், பயிர்கள் செழித்து வளர, உரங்களில் பயன்படும் யூரியா விநியோகத்தில் 30 சதவீதம் பாதிப்படைந்துள்ளது. இதனால், உலகளாவிய அளவில் உணவுப் பொருள்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான உள்ளீடுகளான கந்தகம், அலுமினியம் மற்றும் ஹீலியம் விநியோகமும் பாதிக்கப்படும்.

இதனால், தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும். உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபடுவதால், வளைகுடா நாடுகள் எண்ணெய்க் கிணறுகளை மூடி வருகின்றன. இதை மீண்டும் திறக்க இரண்டு அல்லது மூன்று வாரங்கள்கூட ஆகலாம். டிரம்ப்பை ஆதாரிக்கும் வளைகுடா நாடுகள், ஈரானின் குண்டுவீச்சுக்கு உள்ளாகி, பாதிப்புகளைச் சந்தித்து வருவதால், அந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி நிகழாண்டு 1.8 சதவீதத்தில் மட்டுமே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை நம்பியிருப்பது குறித்து, அந்த நாடுகள் மறுபரிசீலனை செய்து வருகின்றன. அமெரிக்கா தினமும் சுமார் 200 கோடி டாலர் மதிப்புள்ள வெடிமருந்துகளை எரித்து வருகிறது. இதனால், இந்தப் பகுதி

யில் அதன் 17 நிறுவல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எட்டு அமெரிக்க வீரர்கள் இறந்துள்ளனர்; 140 பேர் காயமடைந்துள்ளனர். இதெல்லாம், யாருக்காக என்று தெரியாமலேயே அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவது உலக நாடுகளை ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இந்தப் போரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைவில் 'எய்யும் அம்பின் நிழல் போலக் கழியும்' என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கட்டுரையாளர்: எழுத்தாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.