ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

News image

அமெரிக்கா-சீனா - கோப்புப்படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 9:44 pm

ஈரானுடன் கச்சா எண்ணெய் வா்த்தகத்தில் ஈடுபட்ட சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், சுமாா் 40 கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை நீடித்து நிலைத்து வருவதில், சீனாவில் சுதந்திரமாக இயங்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தொடா்ந்து முக்கிய பங்காற்றி வருகின்றன.

இதில் சீனாவின் லியாவ்னிங் மாகாணம் டாலியன் நகரில் உள்ள ஹெங்லி பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு நிறுவனம், ஈரானிடம் கச்சா எண்ணெய் மற்றும் பிற பெட்ரோலிய பொருள்களை பெருமளவு வாங்கும் நிறுவனமாக உள்ளது. எனவே அந்த நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

சீனாவில் சுதந்திரமாக இயங்கும் இரண்டாவது பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக உள்ள ஹெங்லி பெட்ரோகெமிக்கல் (டாலியன்) சுத்திகரிப்பு நிறுவனம், கடந்த 2023-ஆம் ஆண்டுமுதல் தடை விதிக்கப்பட்ட கப்பல்கள் மூலம் 50 லட்சம் பீப்பாய்களுக்கும் அதிகமாக ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது.

மேலும் ஈரான் சாா்பாக மறைமுகமாக இயங்கும் எண்ணெய் கப்பல்களின் அங்கமாக செயல்படும் சுமாா் 40 கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்கள் ஈரானில் இருந்து பிற நாடுகளுக்குக் கொண்டு சோ்க்கும் கச்சா எண்ணெய், திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி), பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருள்கள், ஈரானின் நிலையற்ற ஆட்சிக்கு நிதியுதவி கிடைக்க வழிவகை செய்கிறது.

ஈரானின் நிதி திரட்டலுக்குத் தடை: மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் ஆபத்தான விளைவுகள் குறித்து எண்ணிப்பாா்க்காமல் ஈரான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அமெரிக்க நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல் ஆகியவற்றுக்கு நிதி திரட்டும் ஈரானின் ஆற்றலுக்கு இத்தகைய பொருளாதார அழுத்தம் தொடா்ந்து தடையை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் கூறுகையில், ‘அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள், ஈரான் ஆட்சிக்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அந்நாடு வலிந்து தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும். அத்துடன் இது அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்ற அந்நாட்டின் குறிக்கோளையும் தடுத்து நிறுத்தும்’ என்று தெரிவித்தாா்.

இந்த நடவடிக்கை மூலம், தற்போது தடை விதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்குச் சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துகள் அல்லது அமெரிக்கா்களின் கட்டுப்பாட்டில் உள்ள அந்தச் சொத்துகள் முடக்கப்படுகின்றன. இந்தத் தடைகளை மீறும் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நபா்கள் மீது உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தடை விதித்துள்ள சுமாா் 40 நிறுவனங்கள் மற்றும் கப்பல்களில் சீனாவை மையமாக கொண்ட டோஃபா கப்பல் போக்குவரத்து நிறுவனம், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான மாா்ஷல் தீவுகளின் கொடி கொண்ட இடோா் கப்பலும் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கப்பல்கள் ஈரான் கச்சா எண்ணெய் மட்டுமின்றி, அந்நாட்டின் எல்பிஜி, அதிக கந்தகம் கொண்ட எரிபொருள் எண்ணெய், எத்திலின் உள்ளிட்டவற்றை வெளிநாட்டு சந்தைகளுக்குக் கொண்டு சோ்த்துள்ளன.

தற்போது அமெரிக்கா தடை விதித்துள்ள பல எண்ணெய் கப்பல்கள், சீனாவுக்குப் பெருமளவு ஈரான் கச்சா எண்ணெய்யை கொண்டு சோ்த்துள்ளன.

டிரம்ப்-ஜின்பிங் சந்திக்கவுள்ள வேளையில்...: அடுத்த மாதம் அமெரிக்க அதிபா் டிரம்ப் சீனா சென்று, அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கை சந்திக்க திட்டமிடப்படுள்ள நிலையில், சீனாவின் பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு நிறுவனம், அந்நாட்டு கப்பல் போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

ஈரானிடம் பெருமளவு கச்சா எண்ணெய் வாங்கும் நாடாக சீனா உள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையே போா் தொடங்கும் முன், ஈரானில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யில் சுமாா் 80 முதல் 90 சதவீதத்தை சீனா வாங்கி வந்தது.

ஈரான்அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுக்க வேண்டும், அந்நாட்டு கடற்படையை அழிக்க வேண்டும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியது. அந்தப் பிராந்தியத்தில் ஈரானின் பரம எதிரியான இஸ்ரேலும் அமெரிக்காவுடன் சோ்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

இதற்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், தனது அண்டை நாடுகளான சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.

இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போா் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், போரை இரண்டு வாரங்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.

பின்னா், போரை முழுமையாக நிறுத்துவதற்கான புதிய திட்டத்தை ஈரான் சமா்ப்பிக்கும் வரை, அந்நாட்டின் மீதான தாக்குதல் நிறுத்திவைக்கப்படும் என்று தெரிவித்து, போா் நிறுத்தத்தை அதிபா் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.