போரை விரும்பும் வல்லரசுகள்!
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்டது.

படம்: AP

படம்: AP
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் அமைதியை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அதன் எச்சரிக்கையை எந்த நாடும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. "போரே வேண்டாம்' என்பது மக்கள் கோரிக்கையாக இருந்தாலும் அது இன்று வரை செயல்பாட்டுக்கு வரவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் போர் ஓசை கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஈரான்-இஸ்ரேல் போரால் அங்கிருந்து வரும் எரிபொருள் தடைபட்டுள்ளது.
நமது நாட்டின் மொத்த திரவ எரிவாயு (எல்பிஜி) தேவையில் சுமார் 60 % அளவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.
கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மிகப் பெரிய எண்ணெய்க் கப்பல்கள் மூலம் ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுகிறது. தற்போது போர் மூண்டுள்ளதால் ஹோர்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நீரிணை வழியாக இயக்கப்படும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் என ஈரான் எச்சரிக்கை செய்துள்ளதால் இந்தக் கப்பல்கள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் நுகர்வு கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் எல்பிஜி பயன்பாடு 10 ஆண்டுகளில் 43 % அதிகரித்துள்ளது.
ஈரானால் ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தமது எரிபொருள் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 40 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளது. மேலும், எண்ணெய் இறக்குமதியில் சுமார் 75 % மாற்று வழித்தடங்கள் மூலம் வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரசீக வளைகுடாவுக்கும், ஓமன் வளைகுடாவுக்கும் இடையிலான குறுகிய கப்பல் பாதையே ஹோர்முஸ் நீரிணையாகும். உலகளாவிய எரிபொருள் விநியோகத்துக்கு மிகவும் முக்கியமானது. இந்த நீரிணை உலகளாவிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் குறைந்தது 20 % இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்கத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பிற வழிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் கொள்முதலை மத்திய அரசு 55 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தியுள்ளதாகவும் கூறியுள்ளது.
மத்திய அரசின் தரவுகளின்படி அல்ஜீரியா, அங்கோலா, ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், புரூனே, கனடா, கொலம்பியா, எகிப்து, கிரீஸ், இராக், இஸ்ரேல், தென் கொரியா, குவைத், லியோ, மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நைஜீரியா, நார்வே, ஓமன், பனாமா, கத்தார், சவூதி அரபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், அமெரிக்கா, வெனிசுலா உள்ளிட்ட 40 நாடுகளிலிருந்து எண்ணெய் மற்றும் எரிபொருள் வளங்களை இந்தியா இறக்குமதி செய்கிறது.
ரஷியாவில் இருந்தும் இந்தியா தமது கொள்முதலைத் தொடர்கிறது. நாட்டின் முதன்மை இடத்தில் ரஷியா இருந்து வருகிறது. கடந்த மாதம் தினமும் 0.04 மில்லியன் பீப்பாய்கள் வாங்கப்பட்டன. இது நமது விநியோகத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதமாகும்.
அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட மறுத்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்துள்ளன. இதில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி உள்பட 1500-க்கும் மேற்பட்டேர் உயிரிழந்தனர். இதையடுத்து இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடுகளிலிருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரிக்கை செய்துள்ளது. இந்த ஹோர்முஸ் நீரிணை எண்ணெய்க் கப்பல் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியப் பாதையாக உள்ளது.
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கடல் கண்ணி வெடிகளை வைக்கும் பணியிலும் ஈரான் ஈடுபட்டது. இதனால், ஈரான் போர்க் கப்பல்கள் மற்றும் கண்ணி வெடி வைக்கும் பணியில் ஈடுபட்ட கப்பல்களைத் தாக்கி மூழ்கடித்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
இந்தப் பதற்றமான சூழ்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கலிபா துறைமுகத்திலிருந்து தாய்லாந்தைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பல் மூலம் இந்தியாவுக்கு 30,000 டன்கள் கச்சா எண்ணெய் அனுப்பப்பட்டது. இந்தக் கப்பல் மர்மமான முறையில் தாக்கப்பட்டதால் தீப்பற்றி எரிந்தது.
அரபிக் கடலில் பாரசீக வளைகுடாவையும், ஓமன் வளைகுடாவையும் ஹோர்முஸ் நீரிணை இணைக்கிறது. இது 167 கி.மீ. நீளம், 50 கி.மீ. அகலம் கொண்டதாகும். இந்த நீரிணையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் 33 கி.மீ. அகலம் மட்டுமே உள்ளது. அதிலும் கடல் ஆழமாக உள்ள 3 கி.மீ. அகலம் கொண்ட பகுதி வழியாகவே சரக்குக் கப்பல் போக்குவரத்து நடைபெறுகிறது.
இது ஈரான் எல்லையை ஒட்டியே அமைந்திருக்கிறது. தற்போது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் படைகள் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால், இந்த நீரிணையில் சரக்குக் கப்பல் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கியுள்ளது. எனவே, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கச்சா எண்ணெய்க்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் சுதந்திரமான சரக்குக் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக அந்தப் பகுதியில் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. ஈரான் கடற்படையில் 60 கப்பல்கள் மற்றும் ஏராளமான படகுகளை அமெரிக்க ராணுவம் குண்டு வீசி அழித்ததாகக் கூறுகிறது.
இந்தச் சூழலில் ஏராளமான கண்ணி வெடிகளை ஈரான் ராணுவம் வீசியிருக்கிறது. கடலுக்கு அடியில் மூழ்கியிருக்கும் இந்தக் கண்ணி வெடிகளை "ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்க முடியும். எதிரிகளின் போர்க் கப்பல்கள், சரக்குக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு வரும்போது கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து, கப்பல்களைத் தகர்ப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரானின் சட்டபூர்வ உரிமைகளை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். தற்போதைய போரால் ஈரானுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் ஈரான் மீது எந்தவொரு ஆக்கிரமிப்பும் அல்லது தாக்குதலும் நடத்தக் கூடாது என்பதற்கு போதிய உத்தரவாதங்கள் அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் வசமுள்ள தீவுகள் ஆக்கிரமிக்கப்பட்டால், ஆக்கிரமிப்பாளர்களின் ரத்தத்தால் பாரசீக வளைகுடா சிவக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான பாரசீக வளைகுடாவில் உள்ள கார்க் தீவை அமெரிக்கா தாக்கக்கூடும் என்ற யூகங்களும் எழுந்துள்ளன. ஆனால், ஈரான் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறது. ஒரு சில நாள்களில் போர் நின்று விடும் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை.
மத்திய கிழக்குப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் மார்ச் மாதத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 80 லட்சம் பீப்பாய் வரை குறையும் என சர்வதேச எரிசக்தி முகமை (ஐஇஏ) எச்சரித்துள்ளது. இது உலக வரலாற்றிலேயே கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பாதிப்பு.
ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி வான்வழித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்ற- இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இதைச் சமாளிக்கும் விதமாக சர்வதேச எரிசக்தி முகமையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒன்றிணைந்து தங்களின் அவசரகால இருப்பிலிருந்து 40 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யைச் சந்தையில் விடுவிக்க ஒப்புக் கொண்டுள்ளன.
உள்நாட்டுச் சேமிப்புக் கிடங்குகள் நிரம்பி வருவதாலும், கப்பல்கள் சரக்குகளை ஏற்றிச் செல்ல முன்வராததாலும் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும்.
எரிபொருள் தேவையில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது பெரும் சவாலாக அமையும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. போரை அமெரிக்கா போன்ற வல்லரசுகள் விரும்பலாம்; அமைதியை விரும்பும் மக்கள் அதை எப்போதும் விரும்புவது இல்லை. ஈரான் போரும் அப்படித்தான்!
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...