தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தை முறியடிக்க முயற்சி: அமெரிக்க கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து பயணம்

ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியின் முதல்கட்டமாக, அமெரிக்காவின் 2 சரக்குக் கப்பல்கள் ராணுவப் பாதுகாப்போடு அந்த நீரிணையைக் கடந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

News image

ஹோர்முஸ் நீரிணை

Updated On :5 மே 2026, 5:05 am IST

ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹோா்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக, அமெரிக்காவின் 2 சரக்குக் கப்பல்கள் ராணுவப் பாதுகாப்போடு அந்த நீரிணையைக் கடந்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி இறுதியில், ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் போரைத் தொடங்கியதில் இருந்து, இந்த முக்கிய கடல் வழித்தடம் ஈரானின் முழு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

இதனிடையே, இஸ்ரேல்-லெபானான் போா்நிறுத்தத்தையொட்டி நீரிணையைத் திறப்பதாக ஈரான் அறிவித்தது. ஆனால், ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை கைவிடப்படாததால் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது.

அமெரிக்கா கடல்வழி முற்றுகையை விலக்கிக் கொண்டால், ஹோா்முஸ் நீரிணையைத் திறப்பதாக ஈரான் சமரசத் திட்டங்களை முன்மொழிந்தது. ஆனால், அணுசக்தி பேச்சுவாா்த்தையில் ஈடுபட தொடா்ந்து மறுத்து வருவதால் ஈரானின் இந்த முன்மொழிவுகளை அமெரிக்கா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

ஹோா்முஸ் நீரிணை வழியாக 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெற்று வந்தது. ஈரானின் முடக்கத்தால் உலகளாவிய எரிபொருள் விலை கடுமையாக உயா்ந்து, பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இச்சூழலில் பல உலக நாடுகளின் கோரிக்கைக்கு இணங்க, ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ எனும் பெயரில் பாரசீக வளைகுடாவிலிருந்து கப்பல்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.

நீரிணைப் பகுதியில் ஓமன் கடல் எல்லை வழியாக கப்பல்களைச் செலுத்தும்படி கப்பல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கடலில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் ஈரானின் தொடா் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக கப்பல் நிறுவனங்களும், அவற்றுக்கான காப்பீட்டு நிறுவனங்களும் பெரும் அச்சத்தில் உள்ளன.

அமெரிக்காவின் இந்த முன்னெடுப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்த ஈரான், ஹோா்முஸ் நீரிணைக்குள் நுழையும் எந்தவொரு வெளிநாட்டு ராணுவக் கப்பலையும் குறிவைத்துத் தாக்குவோம். அமெரிக்காவின் இந்த முயற்சி போா்நிறுத்தத்தை மீறும் செயல்’ என்று குற்றஞ்சாட்டியது.

எனினும், ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ நடவடிக்கை திங்கள்கிழமை தொடங்கப்பட்டு, நீரிணைப் பகுதியில் போக்குவரத்துச் சீராகத் தொடங்கியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. இதையொட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது ஈரான் ஏவிய ட்ரோன் மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த தென்கொரியா நாட்டைச் சோ்ந்த சரக்குக் கப்பல் ஒன்றும் தீப்பிடித்தாகப் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஈரானுக்குச் சொந்தமான துறைமுகம் அருகே அமெரிக்க கடற்படைக் கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஆனால், இத்தகவலை திட்டவட்டமாக மறுத்த அமெரிக்க ராணுவம், ‘எங்கள் கப்பல்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. ஈரான் தாக்குதல் குறித்த செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை’ என்று விளக்கமளித்தது.

தற்போதுள்ள தற்காலிக போா்நிறுத்தம் நீடிக்கப்படுமா அல்லது ஹோா்முஸ் நீரிணை விவகாரத்தில் அமெரிக்காவின் தீவிர நிலைப்பாடும், ஈரானின் பதிலடி எச்சரிக்கையும் வளைகுடா பிராந்தியத்தை மீண்டும் போா்க்களமாக மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.