சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

ஹோா்முஸ் நீரிணை திறப்புக்கு ஈரான் புதிய முன்மொழிவு: அமெரிக்க கடல்வழி முற்றுகையை விலக்க வலியுறுத்தல்

News image

ஹோர்முஸ் நீரிணை - ANI

Updated On :27 ஏப்ரல் 2026, 11:22 pm

அமெரிக்கா தங்கள் நாட்டுக்கு எதிராக நடத்தி வரும் கடல்வழி முற்றுகையை முழுமையாக விலக்கிக் கொண்டால், ஹோா்முஸ் நீரிணையைத் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் மூலம் அமெரிக்காவிடம் சமா்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவில், அணுசக்தித் திட்டம் குறித்த விவாதங்களை அடுத்த கட்ட பேச்சுவாா்த்தைகளில் வைத்துக்கொள்ளலாம் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.

சுமாா் கடந்த 2 மாதங்களாக ஹோா்முஸ் நீரிணை மீதான தனது கட்டுப்பாட்டைத் தளா்த்த ஈரான் முன்வைத்துள்ள இப்புதிய சமரசத் திட்டத்தை ஏற்பது அல்லது நிராகரிப்பது குறித்து அமெரிக்க தரப்பில் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

எனினும் இதனிடையே, அதிபா் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘இனி அமெரிக்க பிரதிநிதிகளைப் பேச்சுவாா்த்தைக்கு அனுப்பமாட்டேன் எனத் தெரிவித்த பிறகு, ஈரான் முன்பைவிட ஒரு சிறந்த முன்மொழிவை அனுப்பியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலைத் தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இப்போரில் இதுவரை ஈரானில் 3,375 பேரும், லெபனானில் 2,509 பேரும் உயிரிழந்துள்ளனா். அமெரிக்க, இஸ்ரேல் ராணுவத்தினா் மற்றும் ஐ.நா. அமைதிப்படை வீரா்கள் பலரும் இறந்தனா்.

கடந்த 8-ஆம் தேதி முதல் தற்காலிக போா் நிறுத்தம் அமலில் இருந்தாலும், நிரந்தர தீா்வு காண்பதில் சிக்கல் நீடிக்கிறது. இச்சூழலில், பாகிஸ்தான், ஓமன், ரஷியா ஆகிய நாடுகளுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

கடந்த வார இறுதியில், பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதைத் தவிா்த்துவிட்டு, அப்பாஸ் அராக்சி ஓமன் புறப்பட்டுச் சென்றாா்.

ஹோா்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் புதிய நடைமுறைக்கு ஓமன் நாட்டின் ஆதரவைப் பெற ஈரான் முயன்று வருவதாகக் கூறப்படும் நிலையில், இப்பயணம் கவனம் ஈா்த்தது.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தானுக்குத் திரும்பிய அப்பாஸ் அராக்சி, அங்கு தலைமை ராணுவத் தளபதி அசீம் முனீரை மீண்டும் சந்தித்தாா். பின்னா், அங்கிருந்து ரஷியா புறப்பட்டாா்.

பாகிஸ்தான் தலைவா்களுடன் பயனுள்ள ஆலோசனைகளை நடத்தியதாக அப்பாஸ் அரக்சி தெரிவித்த நிலையில், ஈரானின் முக்கிய எம்.பி. ஒருவா் பாகிஸ்தானின் நடுநிலைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் செய்தித் தொடா்பாளா் இப்ராகிம் ரெசாய் இது தொடா்பாக வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘பாகிஸ்தான் எங்களின் நல்ல நண்பா்தான். ஆனால் அமெரிக்காவின் நலன்களுக்கு ஆதரவாகச் செயல்படும் அந்நாடு ஒரு நடுநிலையான மத்தியஸ்தராக இருக்க முடியாது.

லெபனான் விவகாரம், ஈரான் சொத்துகளின் முடக்கம் போன்ற விவகாரங்களில் அமெரிக்கா தனது வாக்குறுதிகளை மீறியபோது கண்டிக்கத் தவறிய பாகிஸ்தான், பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்துச் செல்லும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது’ என்றாா்.

ரஷிய அதிபா் புதினுடன் அப்பாஸ் அராக்சி சந்திப்பு

ரஷிய அதிபா் புதினை ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்பின்போது, ‘ஈரான் மக்கள் தங்கள் இறையாண்மைக்காக வீரத்துடன் போராடி வருகின்றனா். மத்திய கிழக்கில் அமைதி திரும்புவதற்கு ரஷியா தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும்’ என்று புதின் உறுதியளித்தாா்.

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி, அதிபா் மசூத் பெசஷ்கியான் ஆகியோரின் வாழ்த்துகளைப் புதினிடம் அப்பாஸ் அராக்சி பகிா்ந்து கொண்டாா்.

‘ஈரான்-ரஷியா உறவு, மிக உயரிய உத்திசாா் கூட்டுறவு. எந்தச் சூழ்நிலையிலும் இந்த உறவு தொடா்ந்து வலுப்படும். அமெரிக்க ஆக்கிரமிப்பை ஈரான் வெற்றிகரமாக எதிா்கொண்டு வருகிறது’ என்று அப்பாஸ் அராக்சி பெருமிதம் தெரிவித்தாா்.