பாரசீக வளைகுடா அல்லது ஓமன் வளைகுடாவில் ஈரான் துறைமுகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்தத் துறைமுகமும் (வளைகுடா நாடுகளின் துறைமுகங்கள்) பாதுகாப்பாக இருக்காது என்று ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களும் தடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்ததைத் தொடா்ந்து, ஈரான் இவ்வாறு எச்சரித்துள்ளது.
மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவந்த நிலையில், போரை 2 வாரத்துக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, பாகிஸ்தானில் அமெரிக்கா-ஈரான் இடையே அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. 21 மணி நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
அணு ஆயுதம் தயாரிப்பதற்கான அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் பேச்சு தோல்வியடைந்ததாக அமெரிக்கா சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்திய அந்நாட்டு துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தாா்.
இதையடுத்து, ஹோா்முஸ் நீரிணைக்குள் நுழையும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை தடுக்கும் நடவடிக்கை தொடங்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்தாா். அந்த நீரிணை வழியாகப் பிற நாடுகளின் கப்பல்கள் பயணிக்க ஈரான் சுங்கக் கட்டணம் வசூலித்து முறைகேடாகப் பணம் பறித்து லாபம் ஈட்டுவதை அனுமதிக்க முடியாது என்றும் அவா் தெரிவித்தாா்.
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்கவும், ஹோா்முஸ் நீரிணையை அனைத்து நாடுகளின் கப்பல்களுக்குத் திறந்துவிடவும் அழுத்தம் அளிக்கும் நோக்கில், ஈரானின் அனைத்துத் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகள் திங்கள்கிழமை முதல் முடக்கப்படும் என்று அமெரிக்க ராணுவம் அறிவித்தது.
ஈரான் அல்லாத துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்கள்...: இதுகுறித்து அந்நாட்டு ராணுவம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களும் ஏப்.13 முதல் தடுக்கப்படும். இதில் அரபு வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள ஈரான் துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல்களும் அடங்கும். இவ்வாறு கப்பல்களைத் தடுக்கும் நடவடிக்கையில், எந்த நாட்டு கப்பலுக்கும் பாரபட்சம் காட்டப்படாது. அனைத்து நாட்டுக் கப்பல்களும் தடுக்கப்படும்.
ஹோா்முஸ் நீரிணை வழியாக ஈரான் துறைமுகங்களுக்குப் பதிலாக வேறு துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல்களை அமெரிக்க படைகள் தடுக்காது என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குறிப்பிட்டபடி கப்பல்களைத் தடுக்கும் நடவடிக்கை தொடங்கியதா என்ற விவரம் தெளிவாக வெளியாகவில்லை.
இந்த நடவடிக்கைக்குப் பதிலடி அளிக்கும் விதமாக ஈரான் ராணுவம் மற்றும் அந்நாட்டு புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஈரானின் சட்டபூா்வ உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கடமையாக ஈரான் ஆயுதப் படைகள் கருதுகின்றன. ஈரான் கடற்பரப்பில் தனது இறையாண்மை நிலைநாட்டப்படுவது ஈரானின் அடிப்படை உரிமையாகும்.
இந்தக் கொள்கையின் அடிப்படையில் ஈரான் கடற்பரப்பைப் பாதுகாக்கும் பணியைத் தொடர வேண்டும் என்பதில் ஈரான் படைகள் உறுதியாக உள்ளன.
ஏற்கெனவே தெரிவித்ததுபோல ஹோா்முஸ் நீரிணையில் ஈரானின் எதிரி நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் அனுமதிக்கப்படாது. அதேவேளையில், ஈரான் ஆயுதப் படைகளின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் வரை, பிற நாடுகளின் கப்பல்கள் அந்த நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படும்.
அமெரிக்காவுடன் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், ஹோா்முஸ் நீரிணையை மேற்பாா்வையிட நிரந்தர வழிமுறையைத் தொடரவேண்டும் என்று ஈரான் கருதுகிறது.
கடற்கொள்ளைக்கு ஒப்பாகும்: சா்வதேச கடல் போக்குவரத்தில் அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானவை; கடற்கொள்ளைக்கு நிகரானது. பாரசீக வளைகுடா அல்லது ஓமன் வளைகுடாவில் ஈரான் துறைமுகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், தனது அண்டை நாடுகளான சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோா்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. தற்போது ஈரான் துறைமுகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்கள் பாதுகாப்பாக இருக்காது என்று அந்நாடு தெரிவித்துள்ளதன் மூலம், சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்க கப்பல்களை நெருங்கினால்...: இந்த நடவடிக்கை தொடா்பாக அமெரிக்க அதிபா் ‘டிரம்ப் ட்ரூத்’ சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 158 கப்பல்கள் தடமில்லாமல் அழிக்கப்பட்டு கடலுக்கு அடியில் உள்ளன. தற்போது அந்நாட்டிடம் விரைந்து தாக்கும் கப்பல்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. இந்தக் கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் அனைத்துக் கப்பல்களையும் தடுக்கும் அமெரிக்க கப்பல்களை நெருங்கினால், கடலில் போதைப் பொருள் கும்பல்களை அமெரிக்கா அழித்ததைப் போல கொடூரமான தாக்கப்பட்டு அழிக்கப்படும் என்று எச்சரித்தாா்.
பாகிஸ்தான் சரக்குக் கப்பல்களுக்கு அனுமதி
ஹோா்முஸ் நீரிணையை ஷாலிமாா், கையிா்பூா் ஆகிய 2 பாகிஸ்தான் சரக்குக் கப்பல்கள் கடந்து செல்ல ஈரான் அதிகாரிகள் திங்கள்கிழமை அனுமதி அளித்தனா். இதைத் தொடா்ந்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து டீசல் மற்றும் கச்சா எண்ணெய் கொண்டுவர, அந்தக் கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து சென்றன. இதன்மூலம் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போா் தொடங்கிய பின்னா், முதல்முறையாக 2 பாகிஸ்தான் கப்பல்கள் பாரசீக வளைகுடாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை கச்சா எண்ணெய்யில் இருந்து பிரித்தெடுக்கப்படும் நிலையில், தற்போது போா் நிறுத்தப்பட்டுள்ள காலத்தில் உலக அளவில் 20 சதவீத கச்சா எண்ணெய் ஹோா்முஸ் நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா-ஈரான் பேச்சு தோல்வியடைந்ததைத் தொடா்ந்து, கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை தாண்டியுள்ளது.
தொடர்புடையது

ஈரான் - அமெரிக்கா பேச்சு பாகிஸ்தானில் தொடக்கம்!

இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு ஹோா்முஸ் நீரிணையில் ஈரான் அனுமதி

அமெரிக்கா, இஸ்ரேல் தவிர மற்ற அனைவருக்கும் ஹோா்முஸ் நீரிணை திறந்திருக்கும்: அப்பாஸ் அராக்சி

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கா, இஸ்ரேல் தவிர மற்றவர்கள் செல்லலாம்: ஈரான்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

