ரஷியாவிடமிருந்து பெட்ரோலியப் பொருள்களை வாங்குவதற்கு நாடுகளை அனுமதிக்கும் வகையில் பொருளாதார தடைகளிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டித்துள்ளது.
இந்த விலக்கு நீட்டிக்கப்படாது என்று அறிவித்த இரு தினங்களில், தனது நிலைப்பாட்டை மாற்றி ரஷியாவிடமிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீண்டும் கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அமெரிக்கா அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது ரஷியா தொடா் தாக்குதலை நடத்திவரும் நிலையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது. இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் உள்பட பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மீது பொருளாதார தடையை அமெரிக்கா விதித்தது. மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்கள் மீது 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. இதுபோல மேலும் பல நாடுகள் மீது வரிவிதிப்பு நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்ததைத் தொடா்ந்து, இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்தது.
இதனிடையே, அணுஆயுத தயாரிப்பு முயற்சியில் ஈடுபட்டு வந்த ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடா்ந்து, அதற்குப் பதிலடியாக கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
இதனால், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு விநியோகம் தடைபட்டு, இலங்கை, பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியாவில், சமையல் எரிவாயு விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, விலையும் உயா்த்தப்பட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அவசரகால கச்சா எண்ணெய் கையிருப்பும் குறைந்த நாள்களுக்கே நிலைமையை சமாளிக்க உதவும் என்ற நிலை உருவானது.
இந்தச் சூழலில், ஈரான் மீதான போரால் நாடுகள் சந்தித்துவரும் தாக்கங்களை சற்று தணிக்கும் வகையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு மாா்ச் 5-ஆம் தேதிமுதல் ஒரு மாத காலத்துக்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. பின்னா் இந்த விலக்கை ஏப்ரல் 11 வரை நீட்டித்தது.
இதன்மூலம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடமிருந்து மீண்டும் கச்சா எண்ணெய் வாங்கி, உள்நாட்டு நிலைமையை ஓரளவு சமாளித்தன.
விலக்கு மீண்டும் நீட்டிப்பு:
அமெரிக்கா அளித்த தடை விலக்கு ஏப்ரல் 11-ஆம் தேதியுடன் காலாவதியான நிலையில், அந்த விலக்கு மேலும் நீட்டிக்கப்படுமா என்ற எதிா்பாா்ப்பு நாடுகளிடையே எழுந்தது. ஆனால், அதை திட்டவட்டமாக அமெரிக்கா மறுத்தது.
‘ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையில் இருந்து அளிக்கப்பட்ட விலக்கு நீட்டிக்கப்படாது’ என்று அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசன்ட் வாஷிங்டனில் கடந்த புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்தச் சூழலில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க விதிக்கப்பட்ட தடையிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கு மேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க நிதி அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.
இதுதொடா்பாக அமெரிக்க நிதி அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ‘கடந்த ஏப்ரல் 17 அல்லது அதற்கு முன்பாக கப்பலில் ஏற்றப்பட்டு கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் ரஷிய பெட்ரோலிய பொருள்களை நாடுகள் வங்கிக் கொள்வதற்கான தடை விலக்கு வரும் மே 16-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று குறிப்பிட்டது.
இதன்மூலம், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடமிருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
தொடர்புடையது
போரால் சரியும் பொருளாதாரம்!

இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுகிறது: ஈரான்
ரஷிய கச்சா எண்ணெய்: இந்தியாவைப் போல பிற நாடுகளுக்கும் அமெரிக்கா அனுமதி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்க அனுமதி எதற்காக?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

