முனைவர் அ. ஜ. ஹாஜா முகைதீன்
ஈரான் மீதான இஸ்ரேல்- அமெரிக்கா போர் முடிவடையாத நிலையில் பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு (ஒபெக்) மற்றும் "ஓபெக் பிளஸ்' கூட்டமைப்பிலிருந்து மூன்றாவது பெரிய உற்பத்தியாளரான அமீரகத்தின் வெளியேற்றம் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
1960-இல் இராக், ஈரான், குவைத், சவூதி அரேபியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இணைந்து பாக்தாதில் ஆரம்பித்த ஒபெக் அமைப்பில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 12 நாடுகள் உறுப்பினர்களாக இருந்தன.
ஒபெக் உருவாவதற்கு முன்பு உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, விநியோகம், விலை நிர்ணயம் ஆகிய எல்லாமே "செவன் சிஸ்டர்ஸ்' என்று அழைக்கப்பட்ட மேற்குலக நாடுகளின் ஏழு நிறுவனங்களின் வசம் இருந்தது.
"கல்ஃப் பிளஸ் சிஸ்டம்' என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரபு நாடுகளில் குறைந்த செலவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யை அமெரிக்காவில் அதிக செலவில் எடுக்கப்படும் எண்ணெய்யின் விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். 1950-களில் லாபத்தில் 10% மட்டுமே அரபு நாடுகளுக்கு கொடுக்கப்பட்டது. உற்பத்தி ஒதுக்கீடு (கோட்டா) நிர்ணயித்து செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கி விலையை உயர்த்தி வைத்திருந்தன. 1959-இல் "செவன் சிஸ்டர்ஸ்' நிறுவனங்கள் தன்னிச்சையாக எண்ணெய் விலையைக் குறைத்து அரபு நாடுகளின் வருமானத்தைப் பாதியாக்கிய கோபத்தில் உருவானதுதான் "ஒபெக்'. கச்சா எண்ணெய் தேவை அதிகமாக இருக்கும்போது உற்பத்தியை ஒபெக் குறைக்கும். விநியோகம் குறைவதால் விலை ஏறும், லாபம் அதிகமாகும். எண்ணெய் விலை அதிக அளவில் கீழே இறங்கும்போது உற்பத்தியைக் குறைக்கும். சந்தையில் எண்ணெய் பற்றாக்குறையை உருவாக்கும்.
விலை உயரும், லாபம் அதிகமாகும். விலை தாறுமாறாக ஏறி உலகப் பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டால் உற்பத்தியை கொஞ்சம் அதிகரித்து விலையை நிலைப்படுத்தும். ஆனால், லாபம் குறையாத வகையில் பார்த்துக் கொள்ளும்.
இதற்காக ஒவ்வோர் உறுப்பு நாடும் இவ்வளவுதான் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஒதுக்கீடு (கோட்டா) உற்பத்தி வரம்பையும் ஒபெக் தீர்மானிக்கிறது. இந்த ஒதுக்கீட்டு வரம்புகளைவிட கூடுதலாக உற்பத்தி செய்ய முடியாது. உறுப்பு நாடுகள் கச்சா எண்ணெய்யின் விலை சரியாமல் இருக்க உற்பத்தித் திறனைக் காட்டிலும் குறைவான அளவிலேயே எண்ணெய்யை உற்பத்தி செய்ய வேண்டும். உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 36.7% ஏற்றுமதியில் 60% ஒபெக்கின் பங்களிப்பாகும்.
2016-இல் ரஷியா உள்ளிட்ட பத்து நாடுகள் ஒபெக் அமைப்புடன் சேர்ந்து "ஒபெக் பிளஸ்' கூட்டமைப்பை உருவாக்கின.
உலகின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 45% பெட்ரோலிய வர்த்தகத்தில் 60% ஒபெக் பிளஸின் பங்களிப்பாகும்.
அமீரகத்தின் வெளியேற்ற முடிவுக்குப் பின்னால் ஒரு நீண்டகால பொருளாதாரத் திட்டம் இருக்கிறது. புதை படிம எரிபொருள்கள் பயன்பாட்டில் இருந்து பசுமை ஆற்றலை (சோலார், மின் வாகனங்கள் பயன்பாடு- நோக்கி எதிர்கால உலகம் மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துவரும் சூழ்நிலையில், எண்ணெய்க்கான தேவையும் முக்கியத்துவமும் குறையும் அபாயம் உள்ளது. ஆகவே, கச்சா எண்ணெய்யை அதிகமாக உற்பத்தி செய்து கிடைக்கிற வருமானத்தை முதலீடு செய்து தனது பொருளாதாரத்தை சுற்றுலா, தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாற்றுப் பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாக அமீரகத்தின் "விஷன் 2031' தெரிவிக்கிறது.
2027-ஆம் ஆண்டுக்குள் அமீரகம் தினசரி உற்பத்தித் திறனை 5 மில்லியன் பேரல்களாக உயர்த்தும் வகையில் 150 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. தினமும் 4.85 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அமீரகம் "ஒபெக்' விதிகளின்படி தினமும் 3.4 மில்லியன் பேரல்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். அதிக உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் தங்களிடம் இருக்கும்போது ஏன் சவூதியின் பேச்சைக் கேட்டு குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்கிற அதிருப்தியே அமீரகத்தின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
விலைகளை தொடர்ச்சியாக உயர்த்தி லாபம் பார்க்கும் ஒபெக் கலைக்கப்பட வேண்டும் என்றும் அமீரகத்தின் வெளியேற்றம் தனக்கு கிடைத்த வெற்றி என்று டிரம்ப் கருதுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஒபெக் நாடுகள் பெட்ரோலை டாலரில்தான் விற்க வேண்டும் என்பது விதி. பெட்ரோலை விற்று கிடைக்கும் டாலர் முழுவதும் அமெரிக்காவின் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. இதுதான் அமெரிக்காவின் கடன் வாங்கும் கொள்கையாகும்.
ஒபெக்கிலிருந்து வெளியேறியதால் அமீரகம் தனது பெட்ரோலை ரூபாய் மற்றும் யுவான் கரன்சிகளில் வர்த்தகம் செய்ய பேச்சுவார்த்தைகளும் ஏற்கெனவே தொடங்கி விட்டன. இது சாத்தியப்படும் நிலையில், வர்த்தகப் பயன்பாட்டில் டாலரின் தேவை குறையும்; அதன் மதிப்பு குறையும். உலக நாடுகள் டாலர் அல்லாத கரன்சிகள் மூலம் பெட்ரோலைப் பெறுவதால் அவர்கள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய டாலரின் அளவு குறைந்து டாலரின் மதிப்பு குறையும். வர்த்தகத்தில் டாலரின் பயன்பாட்டை குறைக்கும் (டி - டாலரைஷேசன்) பிரிக்ஸ் நாடுகளின் முயற்சி வலுப்பெறும்.
அமீரகமும் இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை தொழில்நுட்பங்களை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து விட்டது. தனது தேசிய நலன் கருதி அமெரிக்கா இஸ்ரேலுடன் தொடர்ந்து நல்லுறவைப் பேணுவதில் அமீரகம் விருப்பம் காட்டுகிறது. ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மூடல் பிரச்னைகள் தீரும்போது அமீரகம் உற்பத்தியை அதிகரித்தால் எண்ணெய் விலை குறையலாம். இதனால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவுகள் குறையலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







