யாரைக் குற்றம் சொல்வது? எவர் மீது புகார் அளிப்பது? அநியாயம் என்று வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கான நியாயத்தை மட்டும் பேசுகிறார்கள். ஆனாலும், இது ஒரு படுகொலை அல்லவா? எல்லோருடைய சம்மதத்தோடும் நடைபெறும் படுகொலை.
வாக்காளர்களின் வாக்குகள் விற்பனை கள்ளச் சந்தையில் வெற்றிகரமாக நடைபெறுகிறது. பிரெஞ்சு புரட்சிதான், மக்களாட்சியில் வசந்தத்தின் வரவுக்கான வாசலை வாழ்த்துக் கூறி, திறந்து வைத்தது. இதற்கு முன்னர் கிரேக்கத்தின் ஏதென்ஸ் மாநகரத்தில் வாக்களிக்கும் முறை இருந்தது. இதில் அடிமைகளுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை இல்லை. ஆழ்ந்து யோசித்தால் இவர்களை அடிமைப்படுத்தும், அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் மேட்டுக்குடி மக்களின் வாக்குரிமையாக அது இருந்தது.
தமிழ் மண் உள்ளிட்ட உலகின் மூத்த குடிகள் ஒவ்வொன்றிலும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆளுகைக்கு ஒப்புதல் அளிக்கும் முறைகள் இருந்துள்ளன. இதில் காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. தொழிற் புரட்சிக் காலத்தில் தொழிலாளர்களின் எழுச்சியால் மேலும் பல மாற்றங்கள் வந்து சேர்ந்தன. மேட்டிலிருந்த ஜனநாயகம் வெகுமக்களை நோக்கி வேகமெடுத்து பாயத் தொடங்கியது.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க இத்தனை விரிவான ஏற்பாடு வேறு எதிலும் இருந்ததில்லை. பின்னர், எப்படி வீடு தவறாமல் 'பணப்பட்டுவாடா' மட்டும் நடைபெற்றது?. இதுதான் உலக அதிசயங்களை விஞ்சிய அதிசயம். இத்தனைக்கும் நம் நாட்டில் வாக்குகளை விலைக்கு வாங்கினால் அதைத் தண்டிக்கும் சட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு எண் 171-பி தேர்தலில் பணம் கொடுப்பது வாங்குவது நிரூபிக்கப்பட்டால், அபராதம் அல்லது ஓராண்டு தண்டனை வழங்கலாம் என்று கூறுகிறது.
இன்றைய சட்டங்களை கையில் வைத்துக் கொண்டே தேர்தல் செலவுகளை சிவில் சமூகங்களால் தணிக்கை செய்ய முடியும். தேர்தல் ஆணையம் 'சி-விஜில்' என்னும் அமைப்பை தொடங்கியிருக்கிறது. இதை தேர்தல் ஆணையம் பெயரளவிலான அமைப்பாக வைத்திருக்கிறது. இதை தூசு தட்டி கையில் எடுத்து மக்கள் கண்காணிப்பு செயல்பாட்டுத் தளமாக மாற்ற வேண்டும்.
உலகின் பல நாடுகளில் வாக்குக்குப் பணம் என்பதை இதன் மூலம் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். விளைநிலத்தில் பார்த்தீனியம் செடியை நமது அமைப்புமுறை சாகுபடி செய்து கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் அடிக்கடி வந்து விடுகிறது. இதை மாற்றி அமைக்க வேண்டுமென்றால் தலைகீழ் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.
புதிய கட்டுமானங்களை உருவாக்க வேண்டும். புதிய பயிற்சித் தளங்களைக் கண்டறிய வேண்டும். திறன் கொண்ட தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு முதலில் இதை நிறைவேற்றும் இந்த தலைமுறையினர் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும். அவநம்பிக்கை இருந்தால் முதல் அடியைக் கூட எடுத்து வைக்க முடியாது.