யாரைக் குற்றம் சொல்வது? எவர் மீது புகார் அளிப்பது? அநியாயம் என்று வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கான நியாயத்தை மட்டும் பேசுகிறார்கள். ஆனாலும், இது ஒரு படுகொலை அல்லவா? எல்லோருடைய சம்மதத்தோடும் நடைபெறும் படுகொலை.
வாக்காளர்களின் வாக்குகள் விற்பனை கள்ளச் சந்தையில் வெற்றிகரமாக நடைபெறுகிறது. பிரெஞ்சு புரட்சிதான், மக்களாட்சியில் வசந்தத்தின் வரவுக்கான வாசலை வாழ்த்துக் கூறி, திறந்து வைத்தது. இதற்கு முன்னர் கிரேக்கத்தின் ஏதென்ஸ் மாநகரத்தில் வாக்களிக்கும் முறை இருந்தது. இதில் அடிமைகளுக்கும் பெண்களுக்கும் வாக்குரிமை இல்லை. ஆழ்ந்து யோசித்தால் இவர்களை அடிமைப்படுத்தும், அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும் மேட்டுக்குடி மக்களின் வாக்குரிமையாக அது இருந்தது.
தமிழ் மண் உள்ளிட்ட உலகின் மூத்த குடிகள் ஒவ்வொன்றிலும் மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஆளுகைக்கு ஒப்புதல் அளிக்கும் முறைகள் இருந்துள்ளன. இதில் காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன. தொழிற் புரட்சிக் காலத்தில் தொழிலாளர்களின் எழுச்சியால் மேலும் பல மாற்றங்கள் வந்து சேர்ந்தன. மேட்டிலிருந்த ஜனநாயகம் வெகுமக்களை நோக்கி வேகமெடுத்து பாயத் தொடங்கியது. அமெரிக்கப் புரட்சி தனித்துவம் கொண்ட ஜனநாயகப் புரட்சி என்பதை நாம் அறிவோம். பிரிட்டனின் காலனியாக இருந்த அமெரிக்கா 'எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும். விடுதலை வேண்டும்' என்று குரல் எழுப்பி, வரி கொடுக்க முடியாது என்று, யுத்த அறிவிப்பை வெளியிட்டது.
இதைப் போலவே, பிரிட்டனில் தோன்றிய சார்டிஸ்டு இயக்கத்தை கோரிக்கை இயக்கம் என்று அழைத்தார்கள். அதன் முதல் கோரிக்கை அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்பது. பெண்களுக்கான வாக்குரிமை, எரிமலை ஒன்றின் வீரிய வெளிப்பாட்டுடன் பிரிட்டனில் வெடித்தது. மனித அடக்குமுறையின் உச்சம் அந்தத் தருணத்தில்தான் உருவாக்கப்பட்டது. போராடியவர்களை அடைத்து வைக்க பிரிட்டனில் சிறைகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. தங்கள் அதிகாரத்தில் இருந்த ஆஸ்திரேலிய கண்டத்தையே தங்களின் சிறையாக மாற்றிக் கொண்டது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். பிரிட்டிஷாரின் ஆவணக் கோப்புகளில் இந்த உண்மை இன்னமும் பாதுகாப்பாக இருக்கிறது.
அனைவருக்கும் வாக்குரிமை வேண்டும் என்று போராடியவர்கள் மீது பல்வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். 1787-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி 11 கப்பல்கள் ஒரு குழுவாக, இவர்களை ஏற்றிச் சென்றது; மொத்தம் 6,000 கைதிகள்; இவர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று சேர்வதற்கு மொத்தம் 260 நாள்கள் தேவைப்பட்டன; இதில் கணிசமான எண்ணிக்கை நோய்வாய்பட்டு பாதி வழியிலேயே இறந்து போனார்கள். எஞ்சியவர்கள் எலும்பும் தோலுமாக ஆஸ்திரேலிய கடற்கரைக்குப் போய் சேர்ந்தார்கள். வாக்குரிமை பெறுவதற்கு இப்படிப்பட்ட போராட்டம் ஒன்று நடந்திருப்பதை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. மனித வாழ்வில் மிகவும் கொடுமையான பக்கங்கள் இவை.
இந்திய மக்கள் அனைவருக்குமான வாக்குரிமையும் எளிதாக கிடைத்து விடவில்லை. அதற்கான தியாகங்கள் நம் வரலாற்றுப் பக்கங்களில் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டிருக்கிறது. 1919, 1935-ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டம் சொத்துள்ளவர்களுக்கும், கல்வி கற்ற மேட்டுக்குடி மக்களுக்கும் மட்டுமே வாக்குரிமை வழங்கியது. அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், 1945-ஆம் ஆண்டு நடைபெற்றது.
அப்போது பி. வெங்கடேசன் என்பார் கூறிய தகவல் ஒன்று. இவர் வெங்கடேச சோழகர் என்றே எல்லோராலும் அறியப்பட்டிருந்தார். இவர் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை சொந்தமாகக் கொண்ட குன்னூர் சாம்பசிவ ஐயரை தோற்கடித்தார். அவர் குறிப்பிட்டுச் சொன்ன தகவல் ஒன்று: 'சுதந்திரத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல். குறிப்பிட்ட அளவுக்கு சொத்து படைத்தவர்கள், வருமான வரி செலுத்தக் கூடியவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை. அவர்கள் ரூ. 30 வரி செலுத்தியிருக்க வேண்டும்.
இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 15 சதவீதம் மட்டுமே இருந்தனர். மேலும், அவர் தகவல்களைத் தொடர்கிறார். காவிரி டெல்டாவில், கம்யூனிஸ்ட் கட்சி வளரத் தொடங்கியிருந்த காலம். சாட்டையடி, சாணிப் பால் தடை செய்யும் போராட்டம் கிளர்ச்சியாக மாறியிருந்தது.
அந்தத் தருணத்தில் அந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. அடக்குமுறை குறித்து கவலை கொள்ளாமல் தாரை, தப்பட்டை முழங்க ஒரு பெரிய ஊர்வலம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஐந்து பேருக்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. இவர்களை அழைத்துச் சென்று வாக்களிப்பதற்குத்தான் இந்த ஊர்வலம். இதுதான் அன்றைய வாக்குரிமை நிலை.
இந்தியர் அனைவருக்குமான வாக்குரிமை போராட்டத்துக்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு. 1928-ஆம் ஆண்டிலேயே இது தொடங்கப்பட்டு விட்டது. மோதிலால் நேரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அது செயல்பாட்டில் இருந்தது. கம்யூனிஸ்ட் கட்சி, லோகியாவின் சோஷலிஸ்ட் கட்சி போன்றவை தொடர்ந்து இதற்கான போராட்டங்களை நடத்தின. பெரியார் ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கத்துக்கும் இதில் பங்குண்டு.
இது குறித்து அரசியல் நிர்ணய சபையில் நடைபெற்ற விவாதங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. தங்களுக்கு சமமாக கீழ் ஜாதிக்காரனுக்கு வாக்குரிமையா என்ற ஆதிக்க உணர்வை அவர்கள் பேச்சில் பார்க்க முடிந்தது. நீண்ட காலம் கடுமையாக நடத்திய போராட்டத்தின் விளைவாக இதன் பின்னர்தான் அரசியல் சட்டத்தின் 326-ஆவது பிரிவு, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமையை வழங்கியது. வாக்குரிமை கிடைத்த பின்னர், அதில் எத்தனை வகையான பித்தலாட்டங்கள். இன்றைய தேர்தல் உலகம் குரூரம் நிறைந்த உலகம். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்று, சூழ்ச்சி, ஏமாற்று வேலை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட உலகம். இது சூதாட்டக் களமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
எதைச் செய்தாவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இவர்கள் புனைந்து கொண்ட புனித வேஷங்கள்தான் சகித்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க எத்தனை பாதுகாப்பு வளையங்கள். இதில் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்கு 24 மணி நேரமும் கண்காணிக்கும் பறக்கும் படை. சுமார் ஒரு லட்சம் காவல் துறையினரும், 23 ஆயிரம் துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்க இத்தனை விரிவான ஏற்பாடு வேறு எதிலும் இருந்ததில்லை. பின்னர், எப்படி வீடு தவறாமல் 'பணப்பட்டுவாடா' மட்டும் நடைபெற்றது?. இதுதான் உலக அதிசயங்களை விஞ்சிய அதிசயம். இத்தனைக்கும் நம் நாட்டில் வாக்குகளை விலைக்கு வாங்கினால் அதைத் தண்டிக்கும் சட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு எண் 171-பி தேர்தலில் பணம் கொடுப்பது வாங்குவது நிரூபிக்கப்பட்டால், அபராதம் அல்லது ஓராண்டு தண்டனை வழங்கலாம் என்று கூறுகிறது. இதைப் போலவே
1951-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123, வேட்பாளர் பணம் கொடுப்பது கண்டறியப்பட்டால், அவர் பெற்ற வெற்றி ரத்து செய்யப்படும் என்றும், மேலும் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் கூறுகிறது. இதைத் தவிர, தூய்மையான தேர்தலுக்கான முயற்சிகள், உலகம் முழுமையிலும் செயல்பட்டு வருவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஐ.நா. சபையால் உலக நாடுகளின் கூட்டு ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே தேர்தலில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான ஓர் அமைப்பை ஐரோப்பிய நாடுகள் 'வெனிஸ் ஒப்பந்தம்' என்ற பெயரில் உருவாக்கியுள்ளன. சில நாடுகள் தேர்தலில் எதிர்கொள்ளும் ஊழலை அகற்றுவதை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றியுள்ளன.
இதற்கு ஆப்பிரிக்க கண்டத்தின் கினியா நாடு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்த அனுபவங்களிலிருந்து, தேர்தல் குற்றங்கள் அகற்றப்பட வேண்டுமெனில், அதற்கு விழிப்புணர்வு கொண்ட மக்கள் இயக்கங்கள் தேவைப்படுகின்றன. அரசின் ஆட்சி நிர்வாகம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் நம்பிக்கை வைப்பதில் எந்தப் பயனும் இல்லை.
இன்றைய சட்டங்களை கையில் வைத்துக் கொண்டே தேர்தல் செலவுகளை சிவில் சமூகங்களால் தணிக்கை செய்ய முடியும். தேர்தல் ஆணையம் 'சி-விஜில்' என்னும் அமைப்பை தொடங்கியிருக்கிறது. இதை தேர்தல் ஆணையம் பெயரளவிலான அமைப்பாக வைத்திருக்கிறது. இதை தூசு தட்டி கையில் எடுத்து மக்கள் கண்காணிப்பு செயல்பாட்டுத் தளமாக மாற்ற வேண்டும். உலகின் பல நாடுகளில் வாக்குக்குப் பணம் என்பதை இதன் மூலம் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
விளைநிலத்தில் பார்த்தீனியம் செடியை நமது அமைப்புமுறை சாகுபடி செய்து கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் அடிக்கடி வந்து விடுகிறது. இதை மாற்றி அமைக்க வேண்டுமென்றால் தலைகீழ் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. புதிய கட்டுமானங்களை உருவாக்க வேண்டும்.
புதிய பயிற்சித் தளங்களைக் கண்டறிய வேண்டும். திறன் கொண்ட தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும். இதற்கு முதலில் இதை நிறைவேற்றும் இந்த தலைமுறையினர் சமூகத்தில் இருக்கிறார்கள் என்பதில் நம்பிக்கை வைக்க வேண்டும். அவநம்பிக்கை இருந்தால் முதல் அடியைக் கூட எடுத்து வைக்க முடியாது.
கட்டுரையாளர்: மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

கோவை அருகே விற்பனைக்கு இருந்த 5,102 மதுபுட்டிகள் பறிமுதல்

வாக்குப்பதிவு - ஜனநாயகக் கடமை!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


