முனைவா் வைகைச்செல்வன்
மணிப்பூரில் அருகருகே உள்ள லிட்டன், மாங்கோட் கிராமங்களில் டாங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 25 வீடுகளும், 4 அரசு குடியிருப்புகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
உக்ரூல் மாவட்டத்தில் வெடித்துள்ள புதிய மோதல்களையடுத்து, வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில் இணைய சேவைகள் முடக்கப்பட்டதாக அரசுத் தரப்பு சொல்கிறது.
பாதுகாக்க வேண்டிய மாநில அரசும், மத்திய அரசும் இணைய சேவையை முடக்குகிறதே ஏன்? வன்முறை ஏற்படப்போவதை உளவுத் துறை கண்டறிந்து உடனடி நடவடிக்கையில் இறங்கி ஏன் அதை முற்றாகத் தடுக்கத் தவறியது என்கிற கேள்விகள் எழுகின்றன.
வழக்கமாக மைதேயி மற்றும் குகி இன மக்களுக்கு இடையிலான மோதல்கள்தான் மணிப்பூரில் பிரதான பிரச்னையாக இருக்கிறது.
ஆனால், நாகா இன மக்கள் அதிகம் வசிக்கும் உக்ரூல் மாவட்டத்தில் பதற்றம் தொற்றி இருப்பது பிரச்னையின் வீரியம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
மைதேயி சமூகத்தைச் சேர்ந்த யும்நாம் கெம்சந்த் தலைமையிலான மணிப்பூர் புதிய அமைச்சரவையில் குகி சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை பெண் உறுப்பினர் நெம்சா கிப்ஜென் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் துணை முதல்வராகிவிட்டார் என குகி சமூகத்தினர் பெருமைப்படுவதாக இல்லை. மாறாக, அரசில் பங்கேற்றதற்கு குகி-ஜோ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆயுதம் தாங்கிய குகி கிராமத் தொண்டர்கள், தொண்டர்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் துணை முதல்வரைக் கொன்றால் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது.
குகி சமூக மக்கள் மற்றும் நாகா சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கும் சென்று அந்த மக்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முதல்வரும், புதிய அரசு நிர்வாகமும் முயல வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.