மணிப்பூருக்கு உடனடித் தேவை முழு அமைதி

குகி சமூக மக்கள் மற்றும் நாகா சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கும் சென்று அந்த மக்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முதல்வரும், புதிய அரசு நிர்வாகமும் முயல வேண்டும்.
மணிப்பூரில் பாதுகாப்புப் படை
மணிப்பூரில் பாதுகாப்புப் படைபடம் - பிடிஐ
Updated on
3 min read

இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டுகால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு முதல்வர் யும்நாம் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய அரசு அண்மையில் பதவியேற்றது. எனினும், மறுநாளே மாநிலத்தில் வன்முறை வெடித்தது. அந்த மாநிலத்தின் உக்ரூல் மாவட்டத்தில் ஏற்பட்ட அந்த வன்முறை மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வீடுகள் மட்டுமன்றி அரசுக் குடியிருப்புகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

வன்முறை காரணமாக மக்கள் அந்தப் பகுதியைவிட்டு வெளியேறினர். உக்ரூல் மாவட்டம், லிட்டன் பஜார் பகுதியில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த இரவு நேரத்தில் வன்முறை வெடித்தது. இதில் பல வீடுகளுக்கு வன்முறைக் கும்பல் தீ வைத்தது. அருகருகே உள்ள லிட்டன், மாங்கோட் கிராமங்களில் டாங்குல் நாகா மற்றும் குகி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 25 வீடுகளும், 4 அரசு குடியிருப்புகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

குகி சமூகத்தைச் சேர்ந்த சைக்கூல் எம்.எல்.ஏ. கிமினியோ காவ்கிப், டாங்குல் நாகா சமூகத்தைச் சேர்ந்த உக்ரூல் சட்டப்பேரவை உறுப்பினர் ராம் முய்வா ஆகிய இருவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். ஆனால், நிலைமையைக் கட்டுக்குள் அடக்க முடியவில்லை. ஏன் மீண்டும் மீண்டும் பற்றி எரிகிறது மணிப்பூர்? இணையதள சேவை ஏன் முடக்கப்படுகிறது? அமைதி திரும்பியது என்று நினைத்த சில மாதங்களிலேயே மணிப்பூர் மீண்டும் பதற்றத்தில் சிக்கி உள்ளது குறித்து அதன் பிரச்னைகளின் ஆழத்தை ஆராய வேண்டியது மத்திய அரசின் அவசர அதிமுக்கியம் வாய்ந்த கடமையாகும்.

உக்ரூல் மாவட்டத்தில் வெடித்துள்ள புதிய மோதல்களையடுத்து, வதந்திகளைப் பரப்புவதைத் தடுக்கும் வகையில் இணைய சேவைகள் முடக்கப்பட்டதாக அரசுத் தரப்பு சொல்கிறது. பாதுகாக்க வேண்டிய மாநில அரசும், மத்திய அரசும் இணைய சேவையை முடக்குகிறதே ஏன்? வன்முறை ஏற்படப்போவதை உளவுத் துறை கண்டறிந்து உடனடி நடவடிக்கையில் இறங்கி ஏன் அதை முற்றாகத் தடுக்கத் தவறியது என்கிற கேள்விகள் எழுகின்றன.

கடந்த சில நாள்களாகவே மலைப் பகுதிகளுக்கும், பள்ளத்தாக்கு பகுதிகளுக்கும் இடையே கசப்பான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன. இவற்றை இருதரப்புக்கான பிரச்னையாகக் கருதி பேசித் தீர்த்திருக்க வேண்டும். தீர்க்காத நிலையில்தான் உக்ரூல் மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வன்முறையாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக துப்பாக்கிச்சூடு, தீ வைப்புச் சம்பவங்கள் என்று நீண்டுவிட்டன.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர மத்திய உள்துறை அமைச்சகம் இணைய சேவையைத் துண்டித்தது. சமூகவலைதளங்கள் மூலம் பரப்பப்படும் பொய்ச் செய்திகள் மற்றும் வெறுப்புப் பேச்சுகள் கலவரத்தை மேலும் தூண்டிவிடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மைதேயி மற்றும் குகி இன மக்களுக்கு இடையிலான மோதல்கள்தான் மணிப்பூரில் பிரதான பிரச்னையாக இருக்கிறது. ஆனால், நாகா இன மக்கள் அதிகம் வசிக்கும் உக்ரூல் மாவட்டத்தில் பதற்றம் தொற்றி இருப்பது பிரச்னையின் வீரியம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

இணையசேவை முடக்கம் சாதாரண மக்களுக்குப் பெரும் தண்டனையாக மாறிவிட்டது. மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் முடங்கியுள்ளன. இணையம் இல்லாதது உயர் கல்வி மாணவர்களை அதிகம் பாதித்திருக்கிறது. இணையவழி வர்த்தகப் பரிவர்த்தனை முடங்கிவிட்டதால் கடைகள் மற்றும் சிறு தொழில்கள் ஸ்தம்பித்துவிட்டன. வெளியூர்களில் இருக்கும் உறவினர்களிடம் பேச முடியாமல் தொடர்பு துண்டித்தது உள்ளிட்ட பிரச்னைகள் அடித்தட்டு மக்களிடத்தில் ஆட்டிப்படைக்கிறது. மத்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர் உக்ரூல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

குகி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூவர் பாஜக தலைமையிலான அமைச்சரவையில் இணைந்திருக்கின்றனர். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து குகி அமைப்புகளின் முழு அடைப்பு போராட்டத்தால் சுராசந்த்பூர் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. பாதுகாப்புப் படையினருடன் மோதல் ஏற்பட்டு துய்புங் பகுதியில் போராட்டக்காரர்கள் கற்களை வீசினார்கள். பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினார்கள். அதன் பின்னர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அந்தப் பகுதியை "சீல்' செய்ய பாதுகாப்புப் படையினர் முயற்சி செய்த போது போராட்டக் காரர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

மைதேயி சமூகத்தைச் சேர்ந்த யும்நாம் கெம்சந்த் தலைமையிலான மணிப்பூர் புதிய அமைச்சரவையில் குகி சமூகத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை பெண் உறுப்பினர் நெம்சா கிப்ஜென் துணை முதல்வராகவும் பதவியேற்றார். குகி சமூகத்தைச் சேர்ந்த மேலும் இரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் துணை முதல்வராகிவிட்டார் என குகி சமூகத்தினர் பெருமைப்படுவதாக இல்லை. மாறாக, அரசில் பங்கேற்றதற்கு குகி-ஜோ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

குகி சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் சுராசந்த்பூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஆயுதம் தாங்கிய குகி கிராமத் தொண்டர்கள், தொண்டர்களின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் துணை முதல்வரைக் கொன்றால் ரூ.20 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனிதகுல வரலாற்றில் கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல் என்று ஹமுராபி கால வழக்கத்தைப் போல தற்போதைய ஜனநாயக நாட்டில் இதுபோன்று அறிவித்திருப்பது வெட்கக்கேடான ஒன்று. மனசாட்சியை விரும்புகிறவர்கள் ஒருபோதும் இதை ஏற்க மாட்டார்கள்.

குகி அமைப்புகளின் கூட்டமைப்பான "ஜாயின்ட் போரம் ஆஃப் 7' (ஜேஎஃப்7) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. குகி அமைப்புகளின் அதிகார அமைப்பாகிய குகி-ஜோ கவுன்சில் (கேஇசட்சி) துணை முதல்வர் நெம்சா கிப்ஜென் உள்ளிட்ட மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிராக சமூகப் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டது. அமைச்சரவையில் அங்கம் வகித்ததன்மூலம் இந்த மூவரும் அஸ்ஸாமின் குவாஹாட்டியில் ஜனவரி 13-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி உள்ளதாக அந்த கவுன்சில் அறிவித்துள்ளது. அரசமைப்புச் சட்டப்படி குகி சமூக மக்கள் வசிக்கும் பகுதியைப் பிரித்து சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாக அறிவிக்கும் தங்கள் கோரிக்கைக்கு எழுத்துபூர்வமாக மத்திய அரசு ஆதரவளித்தால் மணிப்பூர் அரசில் இணையத் தயார் என்பதே அந்தத் தீர்மானம்.

மணிப்பூரில் குகி, மைதேயி இரண்டு சமூகங்களுக்கு இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட மோதல் காரணமாக 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த முதல்வர் பிரேன் சிங் பதவி விலகியதால், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. இதன்பின்னர் கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பாஜக அரசு பதவியேற்ற நிலையில், தங்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறி மீண்டும் வன்முறையில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கக் கூடிய விஷயமாகும்.

மணிப்பூரில் உயர்நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி இன மக்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் முயற்சியில் மாநில அரசு 2023-இல் ஈடுபடத் தொடங்கியது. மைதேயி மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து கோரி போராட்டங்களில் ஈடுபட, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அப்போதுமுதல் ஏற்பட்ட தொடர் கலவரத்தில் 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளில் இருந்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை அவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

குகி இனத்தவர் தங்கள் பகுதிக்கு சுயாட்சி கேட்டு நடத்தும் போராட்டம், பெரும்பான்மையாக இருக்கும் மைதேயி இன மக்கள் தங்களைப் பழங்குடியினராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை கைவிடாதது என இருதரப்புக்குமான பிரச்னை மீண்டும் தொடக்கப்புள்ளி யிலேயே வந்து நிற்கிறது.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் 2023-இல் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டு வீடிழந்த மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர், அரசின் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். ஜிரிபாமில் உள்ள பள்ளியொன்றில் செயல்பட்டுவரும் நிவாரண முகாமுக்கு அண்மையில் சென்ற முதல்வர் கெம்சந்த் சிங், அங்கு தங்கியுள்ளவர்களுடன் கலந்துரையாடி,

அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். மாநிலத்தில் நிலையான அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டுமெனில், இருதரப்பினர் இடையே மீண்டும் நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதேபோன்று குகி சமூக மக்கள் மற்றும் நாகா சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கும் சென்று அந்த மக்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முதல்வரும், புதிய அரசு நிர்வாகமும் முயல வேண்டும். அமைதி தழைக்க வேண்டும் என்கிற ஒற்றைக் குரலோடு மணிப்பூரில் சமாதானக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இரு தரப்பினரையும் மத்திய அரசு தனது பங்குக்கு தில்லிக்கு அழைத்துப் பேசி பிரச்னை களைச் சிறப்பு வழக்காகக் கருதி தீர்த்து வைக்க முயற்சிக்க வேண்டும்.

கட்டுரையாளர்:

முன்னாள் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com