தாமதமாக திருமணம், மாறிவரும் வாழ்க்கை முறையால் ஏற்படும் உடல் மற்றும் மனரீதியான மாற்றங்கள், குழந்தைப்பேறைத் தள்ளிப்போடுவது போன்ற காரணங்களால் இன்று கர்ப்பமாவது சற்று சிக்கலானதாக மாறியுள்ளது.
இதனாலே கருத்தரித்தல் மையங்களும் ஐவிஎஃப் எனும் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைகளும் அதிகரித்துவிட்டன. எனினும் மருத்துவ சிகிச்சைகள் ஒருவகையில் உதவியாகவும் இருக்கின்றன.
இந்நிலையில் கர்ப்ப கால சிக்கல்களுக்கு ரத்த சோகை, பிரசவத்திற்கு முந்தைய ரத்தப்போக்கு, நோய்த்தொற்று ஆகிய மூன்றும் மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
தாயின் இறப்பு மற்றும் தாயின் உடல்நலப் பாதிப்புகளுக்கு இந்த மூன்றும் காரணமாக இருப்பதால் தொடர்ச்சியாக பரிசோதனைகள் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
கருத்தரிப்புக்கு முன்னதாக நீரிழிவு, தைராய்டு குறிப்பாக ஹைப்பர் தைராய்டிசம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளனவா என பரிசோதித்து தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிகள், ஏழாவது மாதம் வரை - மாதத்திற்கு ஒரு முறையாவது மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.
7 மற்றும் 8-வது மாதங்களில் மாதத்திற்கு இரண்டு முறையும், 9-வது மாதத்தில் வாரந்தோறும் பரிசோதனை செய்வது அவசியம்.
மருத்துவரின் அறிவுரைப்படி அந்தந்த மாதங்களில் தேவையான ஸ்கேன் மற்றும் ரத்த பரிசோதனைகளை செய்துகொள்ள அறிவுறுத்துகிறார்கள்.