அறம் தவறிய அரசு வணிகம்!

தமிழ்நாட்டில் தற்போது எல்லாத் தளங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிற மட்டுமீறிய மது நுகர்வுக் கலாசாரம், நமது மாநிலத்தை மிகப் பெரிய பேரழிவுப் பள்ளத்தாக்குக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.

அரசின் பெருவணிகமாக வலுப்பெற்று, நிலைபெற்றுவிட்ட மதுவிற்பனைக்கு எதிராக, எதையுமே செய்ய முடியாத கையறு நிலையில், உண்மையிலேயே மதுவை எதிர்க்கிற பல அரசியல் கட்சிகளும், நீதி நிர்வாக அமைப்புகளும், ஆன்மிகப் பீடங்களும், சேவை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பரிதாபகரமான முறையில் தோற்றுப் போயுள்ளன என்பதே இன்றைய எதார்த்தமான நிலை!

மது என்கிற ஒரு மாபெரும் சமூகக் கேடு, குடும்பக் கேடு, உடல்நலக்கேடு முற்றாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்கிற நமது லட்சக்கணக்கான குடும்பப் பெண்களின் கண்ணீர்க் கோரிக்கை பின்னுக்குத் தள்ளப்பட்டு, அலட்சியப்படுத்தப்பட்டு, மதுவின் மீதான எதிர்ப்புணர்வுகளை முனை மழுங்கச் செய்யும் வகையில், அதன் மீதான விமர்சனங்கள் இப்போது திசைமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன!

தினமும் சராசரியாக 70 லட்சம் பேர் அரசிடமிருந்து மதுப் புட்டிகளை வாங்குகிறார்கள். மொத்த மது விற்பனையில், 60 % மதுப் புட்டிகள் 180 மில்லி (குவார்ட்டர்) மது புட்டிகளாகும். இது தனி மனிதர்கள் தங்களுக்காக மட்டுமே வாங்கிக் கொள்ளும் மதுவின் அளவாகும். 750 மில்லி கொண்ட முழுப் புட்டியை வாங்கி, குழுவாகச் சேர்ந்து குடிப்பவர்கள் தனிக் கணக்கினர் ஆவர்.

அரசு தனது குடிமக்களுக்கு தானே முன்வந்து விற்பனை செய்கிற மதுவின் அளவை, அதன் கடைகளை வேக வேகமாக மட்டுப்படுத்திக் குறைத்து, முற்றாக ஒழித்தாக வேண்டும். அரசு முனைப்போடு ஊக்கப்படுத்தாமல் இருந்தால், மக்களும் மது மீதான தங்களது வேட்கையைக் குறைத்துக் கொள்வார்கள் என்பதற்கு, கடந்த கரோனா காலகட்டமே ஒரு சிறந்த சான்றாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முகப்பு பக்கத்துக்கு...