அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவம்எல்லை மாநிலமான அஸ்ஸாமில் தனது செல்வாக்கை பாஜக தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருப்பதை அசிரத்தையாகக் கடந்து போக முடியாது.
அஸ்ஸாம் பாஜக தலைமையிலான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி 126 இடங்களில் 102 இடங்களைப் பெற்று சட்டப்பேரவையில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.காங்கிரஸ் கட்சி, தனது மதச்சார்பின்மையை இழந்து முஸ்லிம் சிறுபான்மையிருக்கான கட்சி என்கிற தோற்றம் ஏற்பட்டிருப்பது அதன் தோல்விக்கு முக்கியமான காரணம்.
அதிகரித்த கூலி, நிலப்பட்டா, ஆதிவாசிகளான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பழங்குடியினர் அந்தஸ்து உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் 15 ஆண்டுகளாக அஸ்ஸாமில் ஆட்சி செய்த தருண் கோகோய் அரசால் நிறைவேற்றப்படவில்லை. பாஜக அரசு முதல் இரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றி, பழங்குடியினர் அந்தஸ்தை வழங்குவதாக உறுதி அளித்திருப்பதுதான் அதன் செல்வாக்கு அதிகரித்திருப்பதற்குக் காரணம்.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 45 பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 43 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.
ஹிமந்த விஸ்வ சர்மா அரசின் "ஒருணோதாய்' (அருணோதயம்) மகளிர் உரிமைத் தொகைத் திட்டமும், நிலப்பட்டாக்களை எண்மப்படுத்தி நில உரிமையை உறுதிப்படுத்தும் "வசுந்தரா' திட்டமும் மிகப் பெரிய அளவில் பாஜக அரசின் செல்வாக்கை அதிகரித்திருக்கின்றன.
2016 முதல் பாஜகவின் காலம் தொடங்கியது. ஹிமந்த விஸ்வ சர்மாவின் தலைமையிலான பாஜகவின் ஆதிக்கத்தை அகற்றுவது எளிதாக இருக்கப் போவதில்லை.
பாஜகவின் அஸ்ஸாம் தொடர் வெற்றிக்கு இரட்டை என்ஜின் சர்க்கார், தொகுதி மறுசீரமைப்பு, வங்கதேசக் குடியேறிகளை அகற்றிய எஸ்ஐஆர் முன்னெடுப்பு மட்டுமல்லாமல், மத ரீதியான ஒருங்கிணைப்பும் மிக முக்கியமான காரணம்.