பள்ளிக் கல்வி என்பது ஒருவரின் எதிர்காலம் சிறந்ததாக அமைவதற்கான அடிப்படை. அது தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதிலும் தரம் உயர்த்துவதிலும் அரசு, ஆசிரியர்கள், வட்டார மக்கள் குறிப்பாக பெற்றோர் ஆகியோருக்கு பொறுப்பு இருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை பள்ளியில் எல்லாமே இலவசம்; மாணவர்களை பெற்றோர் அனுப்பினால் போதும்; மாணவர்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி படித்தால் போதும் என்பதுதான் உண்மை. அரசு எவ்வளவு உதவிகள் செய்தாலும் அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்? மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவது ஏன் என்ற கேள்வி வருகிறது.
மக்களுக்கு அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை ஏன் வரவில்லை? இதற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுகிறது. இது உங்கள் பள்ளி. இந்த நம்பிக்கை பொதுமக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மீது வரவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஓர் உண்மை. இலவசக் கல்வி தரமாக இல்லாததால் நாட்டிலுள்ள சரிபாதி மக்கள் கல்விச் செலவால் மிகப் பெரிய பொருளாதார சுமைக்கு உள்ளாகியுள்ளனர். இது தமிழகத்துக்கும் பொருந்தும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்வழி பள்ளிக் கல்விதான் முதன்மையாக இருந்தது. இன்றைக்கு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்திலும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் தாய்மொழியான தமிழிலும் எழுதும்போது ஏராளமான எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் ஏற்படுவதை மறுக்க முடியாது.