இந்தியா முழுவதும் மாணவர்கள் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் குறைந்து வருவதையும், தனியார் பள்ளிகளில் அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். அரசுப் பள்ளிகளில் ஈராசிரியர் பள்ளி, ஓராசிரியர் பள்ளி என்கிற நிலைக்குத் தள்ளப்படுவதையும் சில பள்ளிகள் மூடப்படுவதையும் காண்கிறோம். அதே வேளையில், மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மூடப்படும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவுதான்.
பள்ளிக் கல்வி என்பது ஒருவரின் எதிர்காலம் சிறந்ததாக அமைவதற்கான அடிப்படை. அது தரமானதாக இருக்க வேண்டியது அவசியம். அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பதிலும் தரம் உயர்த்துவதிலும் அரசு, ஆசிரியர்கள், வட்டார மக்கள் குறிப்பாக பெற்றோர் ஆகியோருக்கு பொறுப்பு இருக்கிறது.
தமிழகத்தைப் பொருத்தவரை பள்ளியில் எல்லாமே இலவசம்; மாணவர்களை பெற்றோர் அனுப்பினால் போதும்; மாணவர்கள் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி படித்தால் போதும் என்பதுதான் உண்மை. அரசு எவ்வளவு உதவிகள் செய்தாலும் அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது ஏன்? மாணவர் சேர்க்கை இல்லாததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுவது ஏன் என்ற கேள்வி வருகிறது.
மக்களுக்கு அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை ஏன் வரவில்லை? இதற்கு யார் காரணம் என்ற கேள்வி எழுகிறது. இது உங்கள் பள்ளி. இந்த நம்பிக்கை பொதுமக்களுக்கு அரசுப் பள்ளிகளின் மீது வரவில்லை என்பது வருத்தப்பட வேண்டிய ஓர் உண்மை. இலவசக் கல்வி தரமாக இல்லாததால் நாட்டிலுள்ள சரிபாதி மக்கள் கல்விச் செலவால் மிகப் பெரிய பொருளாதார சுமைக்கு உள்ளாகியுள்ளனர். இது தமிழகத்துக்கும் பொருந்தும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்வழி பள்ளிக் கல்விதான் முதன்மையாக இருந்தது. இன்றைக்கு தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்திலும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் தாய்மொழியான தமிழிலும் எழுதும்போது ஏராளமான எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் ஏற்படுவதை மறுக்க முடியாது.
ஆங்கில வழிக் கல்வி பெருகிவிட்டதால், மாணவர்கள் மத்தியில் தமிழின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. கல்வியில் மொழி சம்பந்தப்பட்டிருந்தாலும் கல்விக் கொள்கை வேறு, மொழிக் கொள்கை வேறாக இருப்பதே மாணவர்களுக்கு நல்லது. கொள்கை எதுவானாலும் தனியார் பள்ளி, அரசுப் பள்ளி என்ற வேறுபாடும் அதில் கூடாது.
உண்மையில் ஆங்கில மொழியை ஒரு கருவியாகக் கொண்டே இந்தியாவில் நல்ல நிர்வாக அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். தனியார் நிறுவனங்களின் மேலாண்மையில் ஹிந்தி பயன்படுத்தப்படுகிறதா அல்லது ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறதா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.
இரு மொழிக் கொள்கை என்ற ஒரு தனித்துவ தன்மையுடன் விளங்குகிறது தமிழ்நாடு. ஹிந்தி பேசாத மாநிலங்களுக்கான பாதுகாப்புக் கவசம் ஆங்கிலம்தான். அரசுப் பள்ளிகள் ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவதில் தவறு இல்லை. தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் ஜப்பான், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள்கூட தாய்மொழிக்கு அடுத்து மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.
அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் ஆங்கிலம் மட்டுமே ஆட்சி மொழியாக உள்ளது. இந்திய மாநிலங்களில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தாய்மொழியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக உள்ளது. அரசுப் பள்ளிகள் தாய்மொழிக்கு தரும் அதே முக்கியத்துவத்தை ஆங்கிலத்துக்கும் தந்தால் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
நாடு முழுவதும் 89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஆனால், இது ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறவில்லை. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 37,000, மாணவர்கள் எண்ணிக்கை 52 லட்சம். தனியார் பள்ளிகள் எண்ணிக்கை 12,000, மாணவர்கள் எண்ணிக்கை 57 லட்சம். அரசில் ஊதியம் பெறுபவர்கள் பெரும்பாலானோர் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதில்லை. அரசுப் பள்ளியின் தரம் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் இயங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் 2025-26-ஆம் கல்வியாண்டில் 210 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன. 2024-25-இல் 1,204 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லை. இதற்கான காரணங்களை அரசு கண்டறிந்து முறையாக ஆய்வு செய்து, இந்தக் குறைகளைச் சரி செய்ய வேண்டும். பள்ளிகளைப் பொருத்தவரை அரசுப் பள்ளிகளில் போதிய கட்டட வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, மேஜை, நாற்காலி, மின்சார வசதி, மின்விசிறிகள், கழிப்பறை இப்படி நிறைய வசதிகள் குறைவு என்பதுதான் மாணவர் சேர்க்கை போதிய அளவு இல்லாததற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது பள்ளிகளில் வேலை நேரம் போதுமானதாக இல்லை. தாய்லாந்தில் ஒரு நாளைக்கு ஒன்பதரை மணி நேரம், கம்போடியாவில் எட்டு மணி நேரம் 45 நிமிஷங்கள், மியான்மர் மற்றும் தைவானில் எட்டு மணி 30 நிமிஷங்கள். உலகத்திலேயே அதிக நேரம் ஒரு நாளைக்கு பள்ளி இயங்குவது என்று கணக்கிட்டுப் பார்த்தால் சீனாவில் 12 மணி முதல் 16 மணி நேரம்; தென் கொரியாவில் 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் பள்ளிகளில் பாடம் நடத்துகிறார்கள்.
தென் கொரியாவில் ஒருகட்டத்தில் இரவு 10 மணி வரை பள்ளிகள் இயங்கியதைப் பார்த்து பள்ளிகள் பத்து மணிக்குமேல் இயங்கக்கூடாது என்று உத்தரவு போடும் அளவுக்கு அந்த நாட்டில் பள்ளிகள் இயங்கின. தமிழ்நாட்டிலும் பள்ளிகள் நேரம் கண்டிப்பாக அதிகரிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளிகளின் வேலை நாள்கள் 200. ஆனால், சீனாவில் 240 நாள்கள்; தென் கொரியாவில் 220 நாள்கள் என்று ஓராண்டுக்கு பள்ளியின் வேலைநாள்களாக இருக்கின்றன.
தரமான கல்வி என்றால், ஆசியாவில் தென் கொரியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். ஐரோப்பாவில் பின்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். வட அமெரிக்காவில் தரமான கல்விக்கு கனடா நாட்டைக் குறிப்பிடலாம். உலக அளவில் தரமான கல்வி என்ற அளவுகோலில் தென் கொரியாவும், பின்லாந்தும் குறிப்பிடப்படுகின்றன.
கற்றலில் பின்தங்குவோரைக் கண்டறிந்து, அவர்களின் திறனை வளர்க்க ஆசிரியர்கள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். எல்லா அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். குறிப்பாக, நிரந்தர ஆசிரியர்கள் நியமித்தால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை பல மடங்கு உயர்வது நிச்சயம்.
நாம் கல்விக்காக செலவு செய்யும் தொகை மிக மிகக் குறைவு. சீனா ஆண்டுக்கு ஒரு மாணவருக்கு 17,000 டாலர்கள் செலவு செய்கிறது. வங்கதேசம் 2,600 டாலர் செலவு செய்கிறது. இந்தியா 260 டாலர் மட்டுமே செலவு செய்கிறது. தென் கொரியாவைப் பொருத்தவரை அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், பெற்றோர் என்று எல்லோருக்கும் தாராளமாக நிதி உதவி செய்கிறது. நமது நிதி நிலை அறிக்கையில் கல்விக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லை.
ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் தரம் இன்றளவும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இதையும் அரசு கவனிக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகள் அறவே இல்லாமல் செய்து தடுக்க வேண்டும்.
பள்ளிக் கல்வியை மனதில் கொண்டு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி அரசுப் பள்ளிகளை மேம்பட வைக்க முயற்சி செய்கிறது. அரசுப் பள்ளிகள் என்றால் கல்வித் தரம் மோசமாக இருக்குமோ என ஏழை பெற்றோர்களிடம் இருக்கும் தயக்கத்தை நீக்க அரசு எல்லா முயற்சிகளையும் செய்கிறது. நன்றாகப் படித்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் உலகளாவிய உயர் கல்வி நிலையங்களுக்குச் செல்ல முடியும் என்பது சாத்தியமே.
உண்மையான சமூக நீதி "கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்பதே. நாம் இதை அரசியல் முழக்கமாக பார்க்காமல் "ஓர் உயர்ந்த லட்சியம்' என்று பார்க்க வேண்டும். அரசுப் பள்ளியில் படித்த அப்துல் கலாம் முதல் சுந்தர் பிச்சை வரை முன்னேற்றத்தை நோக்கி போய்க்கொண்டே இருந்திருக்கிறார்கள். நான்கூட (கட்டுரையாளர்) அரசுப் பள்ளியில் படித்த மாணவர்தான். நன்றாகப் படிக்க வேண்டும் என்பதுதான் இலக்காக இருக்க வேண்டும். அந்த இலக்கை மாணவர் தொட ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கற்பித்தலை கடமையாகச் செய்ய வேண்டும். இவையெல்லாம்தான் அரசுப் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்.
பொருளாதார ஆய்வு அறிக்கையில் தமிழக அரசின் கல்வித் துறை நடவடிக்கைகள் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வியைப் பொருத்தவரை கேரளம் முதன்மை மாநிலமாகவும், இரண்டாவதாக தமிழகமும் சிறந்து விளங்குகின்றன. முதன்மை மாநிலமாக தமிழகம் முன்னேற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
மாநிலத்தின் பாடத்திட்டம் என்பது ஒரு மாநிலத்தின் மொழி, வரலாறு, பண்பாடு, ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பது, பாதுகாப்பது, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது என்பதாக இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை தொடர்ந்து அளிக்க வேண்டும். அதன்மூலம் அவர்களின் கற்பித்தல் திறன் மேம்படும்.
இனி வரும் காலத்தில் எல்லா வகையிலும் அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளமாக இருக்கும்படி அரசின் நடவடிக்கைகள் வேகமெடுக்க வேண்டும்.
கட்டுரையாளர்:
வேந்தர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிகள் திறப்புக்கான முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுக்கு கல்வித் துறை உத்தரவு

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
வெற்றியின் முதல்படி- பள்ளிக் கல்வி!

பள்ளிகளில் கோடைகால நோய்கள் குறித்த விழிப்புணா்வு: பள்ளிக் கல்வி இயக்குநரகம் நடவடிக்கை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

