இன்று அதிக அளவில் மை குடுவைகள் கடைகளில் கிடைப்பதில்லை, பந்துமுனை எழுதுகோலுக்கு பயன்படும் மை நிரப்பிய நுண்குழாயும் கிடைப்பதில்லை.
ஏன் இந்த நிலை என்று கேட்டால் மக்களுக்கு நேரமில்லையாம்... மை நிரப்பி எழுதுகோலைப் பயன்படுத்த பொறுமையில்லையாம்...
கையிலே பையை எடுத்துக்கொண்டு கடைக்குப் போய் பொருள்கள் வாங்கிய காலம் மறைந்து வெறுங்கையுடன் சென்று பல நெகிழிப்பை கொத்துகளோடு வீடு வந்து சேரும் நிலை இன்று வந்துவிட்டது.
ஒரு கைப்பேசியை வாங்கி அது எவ்வளவு உழைக்கிறதோ அதுவரைப் பயன்படுத்தி பழுது ஏற்பட்டால் அவற்றை பழுதுநீக்கம் செய்யக் கொடுத்து நீண்ட காலம் பயன்படுத்திய மக்கள் மாறிவிட்டனர்.
இப்போதெல்லாம் பழுது நீக்கும் கடைகளும் குறைந்து விட்டன. அப்படியே அங்கு தேடிச் சென்றாலும் அவர்கள் புதிதாக வாங்கிக் கொள்ளுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றனர்.
கனிகளை உண்பவர்கள் அதன் விதைகளை மண்ணில் இடுவது அந்த கனிக்கும் அந்த வகை இனத்துக்கும் செய்யும் நன்றிக் கடன்.அதுகூடப் புரியாமல் பழ விதைகளைக் குப்பையில் வீசுவோரும் இருக்கிறார்கள். ஏனெனில், நாம் எதையும் குப்பையில் வீசிப் பழக்கப்பட்டவர்கள்.
எதையும் தூக்கியெறியும் மனநிலையை மாற்றிக் கொள்வோம்; உரிய முறையில் பயன்படுத்துவோம்; உயிர்களையும் பொருள்களையும் நேசிப்போம்; மனிதத்தை சுவாசிப்போம்.