பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மனநிலை மாற வேண்டும்!

ஒரு பொருள் படைக்கப்பட்டது அதன் முழுப் பயன்பாடு எய்தும்போதுதான் அது படைக்கப்பட்டதற்கான நோக்கம் முழுமை அடைந்ததாகக் கருதப்படும்.

News image

பிரதிப் படம்

Updated On :51 நிமிடங்கள் முன்பு

ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பொருள்களின் எண்ணிக்கையும், கலாசாரமும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதில் சாதகங்கள் என ஒருசில சொல்லப்பட்டாலும் பாதகங்கள் பல இருப்பதைப் பரிசீலிக்க வேண்டும். முன்பு பள்ளிகளில் மை நிரப்பி எழுதும் எழுதுகோல் ஆசிரியர்களால் பாராட்டப்பட்டது; அவர்களும் அன்று அதைத்தான் பயன்படுத்தினார்கள்.

எழுத்தை அழகாக, நிறுத்தி எழுதுவதற்கு மை நிரப்பும் எழுதுகோல்தான் உகந்தது என்று மாணவர்களை மை நிரப்பும் எழுதுகோலைப் பயன்படுத்த ஆசிரியர்களே உற்சாகப்படுத்தினர்; வற்புறுத்தினர்.

மாணவர்கள், சொந்தமாக மை குடுவை வாங்க இயலாமல் பத்து காசுக்கு பெட்டிக் கடைகளில் மை நிரப்பிச் சென்ற நாள்கள்தான் அதிகம். அவசர காலங்களில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவரிடம் கடனாக சில சொட்டுகள் மை இரவல் வாங்கி வகுப்பறையில் எழுதிய அனுபவமும் பலருக்கு உண்டு, பந்துமுனை எழுதுகோலைப் பயன்படுத்துவோரும் ஓர் எழுதுகோலை வாங்கி அதில் மை தீர்ந்துவிட்டால் எழுதுகோலை அப்படியே வைத்துக்கொண்டு, அதில் உள்ள மை நிரப்பிய நுண்குழாயை மட்டும் புதிதாக மாற்றி பயன்படுத்துவர்.

ஆனால், இன்று அதிக அளவில் மை குடுவைகள் கடைகளில் கிடைப்பதில்லை, பந்துமுனை எழுதுகோலுக்கு பயன்படும் மை நிரப்பிய நுண்குழாயும் கிடைப்பதில்லை. சராசரியாக 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் பந்துமுனை எழுதுகோல் ஒருமுறை பயன்படுத்திவிட்டு குப்பையில் தூக்கி எறியப்படுகிறது. ஏன் இந்த நிலை என்று கேட்டால் மக்களுக்கு நேரமில்லையாம்... மை நிரப்பி எழுதுகோலைப் பயன்படுத்த பொறுமையில்லையாம்...

கையிலே பையை எடுத்துக்கொண்டு கடைக்குப் போய் பொருள்கள் வாங்கிய காலம் மறைந்து வெறுங்கையுடன் சென்று பல நெகிழிப்பை கொத்துகளோடு வீடு வந்து சேரும் நிலை இன்று வந்துவிட்டது. வீட்டு வாசலுக்கே பொருள் அனுப்பும் நிறுவனங்களும் நெகிழிப் பையை விட்ட பாடில்லை.

சாதாரணமாக, 1,000 நபர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு சில வாரங்களில் ஒரு டன் நெகிழிக் குப்பைகள் சேர்வதாக சூழலியலாளர்கள் சொல்கின்றனர்.

மரங்களைக் கொண்டு செய்யப்பட்ட மேஜை, நாற்காலி, உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களும், மூங்கில் போன்ற பொருள்களால் செய்யப்படும் சாமான்களும் தலைமுறைகளைத் தாண்டி பல வீடுகளில் இருந்து உழைப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம். இருப்பினும், பிளாஸ்டிக் பொருள்கள் இலகுவாக, மலிவாகக் கிடைப்பதால் தேவை இருக்கிறதோ இல்லையோ, அவற்றை வீடு முழுவதும் வாங்கிக் குவிக்கிறோம்.

ஒருசில ஆண்டுகளில் அவை உடைந்து போனதும் நமக்குக் கவலை இல்லை. இருக்கவே இருக்கு குப்பைத் தொட்டி அல்லது ஊருக்கு வெளியே புறவழிச்சாலை, அங்கு சென்று வீசிவிடுவோம். அல்லது சாலையில் இரவுநேரத்தில் தூக்கி எறிந்து விட்டு ஏதும் அறியாதவர்போல இருந்து விடுவோம்.

ஒரு கைப்பேசியை வாங்கி அது எவ்வளவு உழைக்கிறதோ அதுவரைப் பயன்படுத்தி பழுது ஏற்பட்டால் அவற்றை பழுதுநீக்கம் செய்யக் கொடுத்து நீண்ட காலம் பயன்படுத்திய மக்கள் மாறிவிட்டனர். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, பண்டிகைக் காலங்கள் என்று வந்துவிட் டால் எப்படி புதுத்துணி வாங்குகிறார்களோ, அதுபோல கைப்பேசியையும் சிலர் புதிது புதிதாக வாங்கி பழையவற்றை தூக்கியெறிகின்றனர். இது தொலைக்காட்சி, மடிக்கணினி, கணினி உள்ளிட்ட அனைத்து மின்சாதனப் பொருள்களுக்கும், குளிர் சாதனப்பெட்டி, அரைவை இயந்திரம் உள்ளிட்ட அனைத்துக்கும் பொருந்தும்.

இப்போதெல்லாம் பழுது நீக்கும் கடைகளும் குறைந்து விட்டன. அப்படியே அங்கு தேடிச் சென்றாலும் அவர்கள் புதிதாக வாங்கிக் கொள்ளுமாறு நமக்கு அறிவுரை கூறுகின்றனர். உதிரி பாகங்களும் சில பொருள்களுக்கு உற்பத்தியாளர்கள் தருவதில்லை. புதிது புதிதாக மக்கள் வாங்கிக்கொண்டே இருந்தால் அரசுக்கு நிறைய வரி வருவாய் கிடைக்கும் என்று அவர்களும் இதைக் கண்டுகொள்வதில்லை. நுகர்வோர் தேவைக்கு அதிகமாக வாங்கிப் பணத்தை வீணடிப்பதற்கு வலிந்து திணிக்கப்படுகிறார்கள். கேட்டால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து விட்டது என்பார்கள்; தேவையில்லாமல் ஏன் வாங்கவேண்டும்?

கனிகளை உண்பவர்கள் அதன் விதைகளை மண்ணில் இடுவது அந்த கனிக்கும் அந்த வகை இனத்துக்கும் செய்யும் நன்றிக் கடன்.

அதுகூடப் புரியாமல் பழ விதைகளைக் குப்பையில் வீசுவோரும் இருக்கிறார்கள். ஏனெனில், நாம் எதையும் குப்பையில் வீசிப் பழக்கப்பட்டவர்கள்.

இப்படி எல்லாவற்றையும் தமக்குத் தேவையானவற்றை ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பின்புலம் நம் குடும்ப உறவுகளிலும், சுற்றத்தாரிடமும், நட்புகளிலும், அலுவலக சக பணியாளர்களிடம், அன்றாடம் சந்திக்கும் அனைத்து உயிர்களிடமும் காட்டத் துணிந்துவிட்ட ஓர் இறுக்கமான மனநிலைக்கு நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவருகிறது.

ஒரு பொருள் படைக்கப்பட்டது அதன் முழுப் பயன்பாடு எய்தும்போதுதான் அது படைக்கப்பட்டதற்கான நோக்கம் முழுமை அடைந்ததாகக் கருதப்படும்.

பூமியில் எந்த ஒன்றையும் மனிதனால் புதிதாக உருவாக்க முடியாது. ஒன்று இன்னொன்றாக மாறும் தத்துவத்தில்தான் உலகம் இயங்கி வருகிறது. இந்தத் தொடர் சங்கிலியை, சுழற்சக்கரத்தை மனிதன் உடைக்க நினைப்பது ஆபத்தானது.

மறுசுழற்சி, மீட்டுருவாக்கம் என்பவை இன்றைய அத்தியாவசியத் தேவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எதையும் தூக்கியெறியும் மனநிலையை மாற்றிக் கொள்வோம்; உரிய முறையில் பயன்படுத்துவோம்; உயிர்களையும் பொருள்களையும் நேசிப்போம்; மனிதத்தை சுவாசிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.