இயக்குநர் ஸ்ரீதர், தமிழ் சினிமாவில் பல புதுமைகளைச் செய்தவர். 1933, ஜூலை 22-ஆம் தேதி, செங்கல்பட்டு அருகே உள்ள சித்தாமூரில் விஜயராகவலு ரெட்டியாருக்கும் தாயாரம்மாளுக்கும் பிறந்தார்.
பள்ளிப்பருவத்திலேயே எழுத்து, நாடகம் என கலைகளின் மீது ஆர்வம் ஏற்பட, 19 வயதிலேயே 'ரத்த பாசம்' நாடகத்தை எழுதி, டி.கே. எஸ்.சகோதரர்களுக்குக் கொடுத்தார். அது வெற்றிபெற்று பலரது கவனத்தை ஈர்த்தது. ஆர்.எஸ். மணி இயக்க, அதுவே அவரது முதல் திரைப்படமாக டி.கே. எஸ். சகோதரர்களால் தயாரிக்கப்பட்டது.
பிறகு 'எதிர்பாராதது', 'உத்தமபுத்திரன்', தாகூரின் நாவல் 'மாதர் குல மாணிக்கம்' என்று வைரங்களுக்குப் பட்டைத் தீட்டினார். காதல் காவியங்களான 'கல்யாணப் பரிசு', 'நெஞ்சில் ஓர் ஆலயம்' , மறு ஜென்மக் கதை 'நெஞ்சம் மறப்பதில்லை' , அயல் நாட்டில் எடுத்த 'சிவந்த மண்' , மேக்கப் இல்லாமல் சிவாஜி, கே. ஆர். விஜயா நடித்த 'நெஞ்சிருக்கும் வரை' போன்ற படங்கள், ஹிந்தியில் 'தில் ஏக் மந்திர்' என்று கொடிகட்டிப் பறந்தார்.
படமெடுத்து பொருளாதார நெருக்கடி இவருக்கு வந்த போது சிவாஜி நடித்த 'அன்று சிந்திய ரத்தம்' பாதியிலேயே நிற்க, எம்.ஜி.ஆர். வலியச் சென்று நடித்துக் கொடுத்து 'உரிமைக் குரல்' என்ற பெயரில் அது படமாக, மீண்டும் நிமிர்ந்தார்.
என் முதல் படம் 'சொந்தம்'. 1972-இல் அதன் துவக்க விழாவின்போது பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று வாஹிணி ஸ்டூடியோவின் படப்பிடிப்புத் தளம் 12-க்கு வந்து, இயக்குநர் திருலோகசந்தரையும், அதில் நடித்த முத்துராமன், கே.ஆர். விஜயா போன்றவர்களைப் பாராட்டிச் சென்றார்கள். அப்போது ஒரே ஒருவர் ஓரமாக நின்றுகொண்டிருந்தார். அவர்தான் ஸ்ரீதர்.
சில நிமிடங்களில் படப்பிடிப்புத் தொடங்க, ஸ்ரீதர் என்னை வெளியே கூப்பிட்டார். 'நீங்கள்தான் காரைக்குடி நாராயணனா... 19 வயதிலேயே நீங்கள் மேடை நாடகம் எழுதி, அது மக்களிடம் பேசப்பட்டிருக்கிறதே...'' என்று பல கேள்விகளைக் கேட்டு என்னிடமிருந்த பேப்பரை வாங்கி, அவரே எழுதிக் கொண்டார்.
'நான் டி.கே.எஸ். சகோதரர்களுக்கு உங்கள் வயதில் 'ரத்த பாசம்' நாடகம் எழுதித்தான் சினிமாவுக்கு வந்தேன். உங்கள் பேட்டியை என் பத்திரிகை சித்ராலயாவில் போடுகிறேன்'' என்றார். என் மனதில் எங்கோ ஆலயமணி ஒலித்தது. என்னைச் சுற்றி வண்ணப் பறவைகள் பறந்தன. நான் வானத்தில் மிதந்தேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஏவி.எம்.மில் கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்த போது என்னிடம் வந்த சித்ராலயா கோபு, 'காரைக்குடி உன்னை ஸ்ரீதர் கூட்டிட்டு வரச் சொன்னார்'' என்று ஏவி.எம். கார்டனில் ஸ்ரீதர் 'தந்து விட்டேன் என்னை' படப்பிடிப்பில் இருந்தபோது கூட்டிச் சென்றார்.
ஸ்ரீதர் என்னை உட்காரச் சொன்னார். நான் உடனே, ' சார், உங்கள் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தை அரை டவுசர் போட்டுப் பார்த்து ரசித்தவன் நிற்கிறேன், ஒரு பள்ளி மாணவனாக'' என்றேன். என்னைக் கட்டாயப்படுத்தி உட்காரச் சொன்னார்.
'உங்கள் உதவியாளர் ராமராஜனை வைத்து ஒரு கிராமியப் படம் செய்ய எல்லா ஏற்பாடும் செய்து விட்டேன். ஒரு கதை சொல்லுங்கள்'' என்றார்.
'உங்களுக்கு நான் கதை சொல்லுவதா?'' என்றேன்.
'எனக்கு கிராமத்துக் கதை எல்லாம் சரியாக வராது. நீங்கள் ஒரு கதை சொல்லுங்கள்'' என்றார்.
நான் ஒரு வாரத்தில் கதையை தயார் செய்துகொண்டு போய் அவர் எதிரே உட்காரும் முன், ' என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை வீண் பண்ணிவிட்டேன். அந்தப் படத்தை விளம்பரப்படுத்தியும், வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்'' என்றார்.
நான் தயங்கியபடி அவரிடம் காரணம் கேட்டேன். 'அவமானப்பட வேண்டாம் என்று முடிவெடுத்தேன்'' என்றார்.
ஒரு மலை சரிந்து என் எதிரே மணல் மேடானதைக் கண்டேன். 'தூங்குறபோதும் காலாட்டிக்கிட்டே தூங்கு, இல்லாவிடில் செத்திட்டான்னு சினிமாவுல தூக்கிப் புதைச்சிடுவாங்க' என்று கலைவாணர் சொன்னது எத்தனை உண்மை.
எனக்கு நடிகர் சங்கத்தில் 'கலைச்செல்வம்' விருது கொடுத்தபோது என் பக்கத்தில் ஒரு வீல்சேரில் இருட்டில் ஒருவரைக் கூட்டி வந்து நிறுத்தினார்கள். 'இப்போது புதுமை இயக்குநர் ஸ்ரீதர் விருது பெறுகிறார். அவர் மேடைக்கு வரவேண்டாம். நாங்கள் அவரிடம் வருகிறோம்'' என்று விளக்கைப் போட்டார்கள்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. என் பக்கத்தில் உருக்குலைந்து வீல்சேரில் உட்கார்ந்திருந்தது திரையுலகின் இளைய யுகத்தைக் காதல் கதைகளால் கட்டிப் போட்ட இயக்குநர் ஸ்ரீதர். நான் உடனே அவர் கால்களைத் தொட்டுக் கும்பிட்டேன். அது எனக்குத் தெய்வ சந்நிதானமாகத் தெரிந்தது. ரஜினிகாந்த் அவர் படத்தில் வந்த லாபத்தை இவருக்குத் தந்து உதவ நினைத்தபோது தன்மானத்துடன் அதை வாங்க மறுத்தார். அன்பு மனைவி தேவசேனாவையும், அருமை மகனையும் 2008, அக்டோபர் 20-இல் பிரிந்து ஓர் ஊமைப் படமானார். இவருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாவித்திரி - நான் சந்தித்த பிரபலங்கள் - 53
விவசாயிதான் நாட்டின் கதாநாயகன்!
அசோகன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 51
பசித்தவனுக்கு ரொட்டியே கடவுள்!
வீடியோக்கள்

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

