மகாத்மா காந்தி தனது வாழ்நாளில் 20 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இறுதியாக, அவர் தமிழகத்தில் தங்கி, தடம் பதித்தது 21.01.1946 முதல் 04.02.1946 வரையிலான 15 நாள்கள் பயணமே.அந்தப் பயணத்தின்போதுதான் மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்குச் சென்று (03.02.1946 காலை 7.30 மணி அளவில்) வழிபட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். அன்றே இரவு எட்டு மணிக்கு பழனிக்குச் சென்று பழனியாண்டவரை வழிபட்டார்; மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தார்.
இறை நம்பிக்கை அண்ணலின் உயிர்த்துடிப்பு! அது தனிமனிதனை நல்வழிப்படுத்தும்; சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். எண்ணிய லட்சியத்தை ஈடேற்றவும் வழிகாட்டும்! நாள்தோறும் அவர் நடத்திய பிரார்த்தனைக் கூட்டங்களே அதற்குச் சான்றாகும்.
காந்தியத்தின் முக்கிய அம்சமே இறை நம்பிக்கைதான்! அதைக் கடைப்பிடித்தால் உலகில் இன்று நிலவும் போரும், பகையும் மறையுமல்லவா? மனிதப் புனிதர் மகாத்மா கடைப்பிடித்த இறை நம்பிக்கை இன்றைய உலகுக்கும் பொருந்துமல்லவா!
அவரது எண்ணமும், சொல்லும், செயலும், பேச்சும், எழுத்தும் மக்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்தியது! முழங்காலுக்கு மேல் மடித்துக்கட்டிய வெள்ளை கதர் வேட்டியும் போர்த்திக் கொண்ட நான்கு முழத்துண்டும் சொன்ன செய்தி - எளிமை. உடை சொன்ன செய்தி எளிமை என்றால், அவர் உண்ட உணவு சொன்ன செய்தி - புலனடக்கம். ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது; உழைப்பு! உழைக்காமல் உண்பவன் பிறர் உழைப்பைத் திருடுபவன் என்றார்.
தலித் சமுதாய மக்கள் அனுபவித்த கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பினார். ஒடுக்கப்பட்ட அச்சமுதாய மக்களுக்கு நாம் சம உரிமை வழங்காதவரை, ஆங்கிலேயரிடமிருந்து சுய உரிமை நாம் கேட்பதில் பொருளே இல்லை என்றார். இந்திய சுதந்திரமும், தீண்டாமை ஒழிப்பும் எனது இரண்டு லட்சியங்கள் என்றார்.
மொத்த மக்கள்தொகையில் சரிபாதிப் பேர் மகளிர். அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைப் பொதுவாழ்க்கையில் ஈடுபடச் செய்த முதல் தேசியத்தலைவர் மகாத்மா காந்திதான்.
எப்போதும் சமரசத்துக்குத் தயாராக இருத்தல், அணு ஆயுத சக்தியைவிட அன்பின் அரிய சக்தியை உணர்தல், எந்த முடிவானாலும் அதனால் நாம் கண்ட ஏழைக்குப் பலன் தருமா என்ற அளவுகோலைக் கையாளுதல். இதை ஒவ்வொரு தனி மனிதனும் சரி, ஆட்சிப் பீடத்தில் அமர்பவர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்! இதுவே அண்ணல் காந்தி இன்றைய நவீன உலகுக்கு விட்டுச் சென்ற செய்தி!