
எக்காலத்துக்கும் பொருந்தும் காந்தியம்
மகாத்மா காந்தி தனது வாழ்நாளில் 20 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்...

மகாத்மா காந்தி - கோப்புப்படம்.
மகாத்மா காந்தி தனது வாழ்நாளில் 20 முறை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இறுதியாக, அவர் தமிழகத்தில் தங்கி, தடம் பதித்தது 21.01.1946 முதல் 04.02.1946 வரையிலான 15 நாள்கள் பயணமே.
அந்தப் பயணத்தின்போதுதான் மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயிலுக்குச் சென்று (03.02.1946 காலை 7.30 மணி அளவில்) வழிபட்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். அன்றே இரவு எட்டு மணிக்கு பழனிக்குச் சென்று பழனியாண்டவரை வழிபட்டார்; மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைந்தார்.
இறை நம்பிக்கை அண்ணலின் உயிர்த்துடிப்பு! அது தனிமனிதனை நல்வழிப்படுத்தும்; சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். எண்ணிய லட்சியத்தை ஈடேற்றவும் வழிகாட்டும்! நாள்தோறும் அவர் நடத்திய பிரார்த்தனைக் கூட்டங்களே அதற்குச் சான்றாகும்.
காந்தியத்தின் முக்கிய அம்சமே இறை நம்பிக்கைதான்! அதைக் கடைப்பிடித்தால் உலகில் இன்று நிலவும் போரும், பகையும் மறையுமல்லவா? மனிதப் புனிதர் மகாத்மா கடைப்பிடித்த இறை நம்பிக்கை இன்றைய உலகுக்கும் பொருந்துமல்லவா!
சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள ஹிந்தி பிரசார சபா அரங்குக்கு வெளியே 30.01.1946 மகாத்மா காந்தி, உ.வே.சா. பங்கேற்ற பொதுக்கூட்டம். காந்தி மேடைக்கு வருகிறார். "மகாத்மா காந்திக்கு ஜே!” என்று ஒரே முழக்கம். அமைதி! அமைதி! என்று மூன்று முறை காந்தி சொன்னதும், அமைதி நிலவியது.
கூட்டத்தைக் கூட்டத் தெரிந்த தலைவர் மகாத்மாவுக்கு அதைக் கட்டுப்படுத்தவும் தெரிந்ததல்லவா? அதுதான் தலைமைப் பண்புக்கான தகுதி; அடையாளம். கூட்டத்தின் முடிவில் கேள்வி நேரம் வருகிறது! ஓர் இளைஞன் எழுகிறான்; காந்தியை நோக்கிக் கேட்கிறான். இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்? அவர் சிரித்துக் கொண்டே, நான் சாதாரண மனிதன்!, எதிர்காலம் என்ன என்பது எனக்கு எப்படித் தெரியும்! அது இறைவனுக்கு மட்டுமே தெரியும் தன்னை சாதாரண மனிதன் என்று கூறுகிறார்.
அவரது எண்ணமும், சொல்லும், செயலும், பேச்சும், எழுத்தும் மக்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்தியது! முழங்காலுக்கு மேல் மடித்துக்கட்டிய வெள்ளை கதர் வேட்டியும் போர்த்திக் கொண்ட நான்கு முழத்துண்டும் சொன்ன செய்தி - எளிமை. உடை சொன்ன செய்தி எளிமை என்றால், அவர் உண்ட உணவு சொன்ன செய்தி - புலனடக்கம். ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது; உழைப்பு! உழைக்காமல் உண்பவன் பிறர் உழைப்பைத் திருடுபவன் என்றார்.
வைஸ்ராய் ரீடிங் பிரபுவை சந்தித்தபோது, "என் மக்கள் 30 கோடி பேரும் ஒன்று சேர்ந்து, ஒற்றுமையாக உங்கள் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தால் நீங்கள் இந்தியாவை விட்டு வெளியேறித்தானே ஆகவேண்டும்” என்றார் காந்தி.
ஆறு நாள்கள் தொடர்ச்சியாக 13 மணி நேர உரையாடலுக்குப் பின்பு, வைஸ்ராய் ரீடிங் பிரபு தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் "காந்தி ஓர் அற்புதமான மனிதர்; அது நிச்சயம்” எனக் குறிப்பிட்டார். இப்படி மற்றவரிடம் மனமாற்றம் செய்யும் அற்புத சக்தி மகாத்மா காந்தியிடம் இருந்தது!
1915-ஆம் ஆண்டு காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்தார். காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஆனால், அன்றைய காங்கிரஸில் தீவிரவாதிகளும், மிதவாதிகளும் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட காந்தி கவலைப்பட்டார், அதைப் போக்க தானே ஒரு வழி கண்டார்.
"தீவிரவாதிகளின் கனவாகிய பூர்ண சுயராஜ்யத்தை, மிதவாதிகளின் வழியில் நிறைவேற்றிக் காட்டுவேன்” என்று சூளுரைத்தார். அதுவே இருபிரிவினரையும் ஒன்றுபட்டு செயல்பட வைத்தது.
தலித் சமுதாய மக்கள் அனுபவித்த கொடுமைகளைக் கண்டு மனம் வெதும்பினார். ஒடுக்கப்பட்ட அச்சமுதாய மக்களுக்கு நாம் சம உரிமை வழங்காதவரை, ஆங்கிலேயரிடமிருந்து சுய உரிமை நாம் கேட்பதில் பொருளே இல்லை என்றார். இந்திய சுதந்திரமும், தீண்டாமை ஒழிப்பும் எனது இரண்டு லட்சியங்கள் என்றார்.
மொத்த மக்கள்தொகையில் சரிபாதிப் பேர் மகளிர். அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைப் பொதுவாழ்க்கையில் ஈடுபடச் செய்த முதல் தேசியத்தலைவர் மகாத்மா காந்திதான்.
வார்தா ஆசிரமத்தில் தன் மண் குடிசையில் அமர்ந்து கைராட்டையில் நூல் நூற்றுக் கொண்டிருக்கிறார் காந்தி. அது சமயம் லூயி பிசர் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் மேலைநாட்டு மேதை, முதல் முறையாக அண்ணல் காந்தியை சந்திக்கிறார். அப்போது, அந்தக் குடிசையின் மண்சுவரில், காந்தியின் தலைக்குமேல் ஒரு படம் மாட்டப்பட்டிருக்கிறது. அது யேசுநாதரின் படம். அந்தப் படத்தின் கீழே "இவரே நமக்குச் சாந்தி அளிப்பவர்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
அதைக் கண்ட லூயி பிசர் காந்தியிடம், "நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?' என்று கேட்க, "ஆம், நான் ஒரு கிறிஸ்தவன்; நான் ஒரு ஹிந்து; நான் ஒரு முஸ்லிம்; நான் ஒரு பார்சி; நான் ஒரு சீக்கியன், நான் ஒரு யூதன்; எனக்கு எல்லா மதமும் ஒன்றே; மதங்களின் பெயர்கள் வேறுபடலாம்; அவற்றின் போதனைகள் அனைத்தும் ஒன்றே” என்றார் காந்தி. இந்தப் பதில் லூயி பிசரின் இதயத்தைத் தொட்டது.
எப்போதும் சமரசத்துக்குத் தயாராக இருத்தல், அணு ஆயுத சக்தியைவிட அன்பின் அரிய சக்தியை உணர்தல், எந்த முடிவானாலும் அதனால் நாம் கண்ட ஏழைக்குப் பலன் தருமா என்ற அளவுகோலைக் கையாளுதல். இதை ஒவ்வொரு தனி மனிதனும் சரி, ஆட்சிப் பீடத்தில் அமர்பவர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்! இதுவே அண்ணல் காந்தி இன்றைய நவீன உலகுக்கு விட்டுச் சென்ற செய்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






