மானாவாரியில் மகத்தான மகசூல் பெற ராகி பயிர் சாகுபடி

மானாவாரியில் ராகி பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மகத்தான மகசூல்
மானாவாரியில் மகத்தான மகசூல் பெற ராகி பயிர் சாகுபடி

கிருஷ்ணகிரி: மானாவாரியில் ராகி பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மகத்தான மகசூல் பெறலாம் என்கிறார் கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் ரமேஷ் ஓய்.நர்குந்த்.
 கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ராகி பயிரானது சுமார் ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறை சார்பில் சிறு தானியங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், சிறு தானியங்களின் மகத்துவத்தை மக்கள் உணர வேண்டும் என்ற நோக்கிலும், ராகி செயல்விளக்கத் திடல் அமைக்க விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் வீதம் தேவையான இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன.  இத்தகைய நிலையில், ராகு சாகுபடி தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் அதிக மகசூலைப் பெற முடியும்.
தொழில்நுட்பங்கள்: ராகி பயிரானது ஜூன், ஜூலை, செப்டம்பர், அக்டோபர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும். மேலும், கோ 14, ஜிபியூ 28, ஜிபியூ 48 என்ற ரகங்கள் பயிரிட ஏதுவானவை. 22.5 செ.மீ.  வரிசைக்கு வரிசை இடைவெளியில் 10 செ.மீ இடைவெளியில் நாற்றுக்கு நாற்று நடவு செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ விதை போதுமானது.
விதை நேர்த்தி: வறட்சியைத் தாங்க பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து 10 கிலோ விதையை 6 மணி நேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். மேலும், 2 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 2 பாக்கெட் பாஸ்போபேக்டீரியா உயிர் உரத்தை போதிய அளவு ஆறிய கஞ்சியுடன் சேர்த்து உலர்த்தி விதைக்கவும்.
இடைவெளிவிட்டு நாற்று நடுவதால் ஏற்படும் நன்மைகள்: நேரடி விதைப்பை விட 10 நாள்கள் வயது குறையும். பூச்சி மற்றும் நோய் தாக்கிய நாற்றுகளை எளிதில் அகற்றலாம். பயிர் எண்ணிக்கையை சரியாகப் பராமரிக்கலாம். மேலும், தரமான நாற்றுகளை உற்பத்தி செய்யலாம்.
மேட்டு பாத்தி: 2 மீ. நீளம், 1.5 மீ. அகலம் கொண்ட மேட்டு பாத்திகள் 12.5 சென்ட் பரப்பில் பாத்திகளை அமைத்து 30 செ.மீ. இடைவெளியில் அமைத்து வாய்க்கால் விட வேண்டும். மேட்டுப் பாத்தியில் கை விரல் அல்லது குச்சி கொண்டு ஒரு செ.மீ. அளவுக்கு மண்ணில் கோடுகள் கிழித்து 10 கிலோ விதைகளைச் சீராகத் தூவ வேண்டும். பின்பு, பொடியாக்கப்பட்ட 500 கிலோ தொழு உரத்தை கொண்டு விதைகளை மூடி, பூவாளியால் நீரைத் தெளிக்க வேண்டும்.
எரு மற்றும் உயிர் உரமிடுதல்: நாற்றின் வயது 14 முதல் 18 நாள்கள் ஆன நிலையில், 12.5 மெ.டன் மக்கிய தொழு உரத்துடன் 10 பாக்கெட் அசோஸ்பேரில்லம், 10 பாக்கெட் பாஸ்போபேக்டீரியா கலந்து இட வேண்டும்.
பாத்தி அமைத்தல்:  10 அல்லது 20 சதுர மீட்டர் அளவில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
உர நீர்வாகம்: ஒரு ஹெக்டேருக்கு 60:30:30 கிலோ அளவில் இறவைக்கும், 16:8:0 கிலோ தழை: மணி: சாம்பல் சத்துகள் இட வேண்டும்.
நுண்ணூட்டச் சத்து: 12.5 கிலோ நுண்ணூட்டச் சக்தினை மணலுடன் கலந்து கடைசி உழவின்போது இட வேண்டும். துத்தநாதச் சத்து குறைபாடு இருந்தால், 25 கிலோ துத்தநாத சல்பேட்டை மணலுடன் கலந்து இட வேண்டும்.
களை நீர்வாகம்: அட்ரசீன் 500 கிராம் களைகொல்லியை 900 லிட்டர் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மேலும், ஊடு பயிராக பயறு வகைப் பயிர்களைப் பயிர் செய்தால் அட்ரசீன் உபயோகப்படுத்தக் கூடாது. மேலும், களை நிர்வாகம் தேவைப்படின், கைகளால் 35-ஆவது நாளில் களைகளை அகற்றலாம்.
நீர் நிர்வாகம்: 8 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை தேவைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.
பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்: ராகியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாக இருக்கும். பயிரில் மொசைக் பாதிப்புகள் காணப்பட்டால், அந்தச் செடிகளை உடனே அகற்ற வேண்டும்.
பயிர் அறுவடை: பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்போது வயது முதிர்ந்தது என்பதை உணரலாம். இந்த நிலையில், கதிர்களை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட கதிர்களை உடனடியாக காய வைக்க வேண்டும். மானாவாரியில் 2.5 முதல் 3 மெ. டன் வரையில் மகசூல் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com