பஞ்சாங்கம்

ஞாயிற்றுக்கிழமை

20

ஹேவிளம்பி வருடம், ஆவணி 4-ம் தேதி.

நல்ல நேரம்

காலை 7.30 - 8.30   மாலை 3.30 - 4.30

ராகு காலம்

4.30 - 6.00

எம கண்டம்

12.00 - 1.30

குளிகை

3.00 - 4.30

திதி

சதுர்த்தி

நட்சத்திரம்

பூசம்

சந்திராஷ்டமம்

மூலம், பூராடம்

இன்றைய ராசிபலன்

மேஷம் - கவனம்
ரிஷபம் - கீர்த்தி
மிதுனம் - நிம்மதி
கடகம் - கவலை
சிம்மம் - வீண்செலவு
கன்னி - இரக்கம்
துலாம் - வரவு
விருச்சிகம் - தெளிவு
தனுசு - பாராட்டு
மகரம் - வேதனை
கும்பம் - சோர்வு
மீனம் - நன்மை

யோகம்: சித்த யோகம்

சூலம்: மேற்கு

பரிகாரம்: வெல்லம்

விசேஷம்: மாத சிவராத்திரி. சோழசிம்மபுரம் லெட்சுமி நரஸிம்மப் பெருமாள் திருப் பவிரத்ர உற்ஸவாரபம். திருமெய்யம் சத்திய மூர்த்தி புறப்பாடு. 

கேள்வி - பதில்
 • எனக்கு வயது 50. எனக்கு சரியான தொழில் மற்றும் வருமானம் அமையவில்லை. தொழில், பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமா? பித்ரு தோஷம் உள்ளதா? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?  
  - வாசகர், சேலம்

 • உங்களுக்கு சிம்ம லக்னம். மேஷ ராசி. தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் தசை நடக்கிறது. குருபகவான் உச்சம் பெற்று களத்திர நட்பு ஸ்தானாதிபதியைப் பார்வை செய்கிறார். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து உங்கள் தொழிலில் வளர்ச்சி உண்டாகும். தொழில் ஸ்தானாதிபதியும் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருப்பதால் பிற்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சி தொடரும். பித்ரு தோஷம் இல்லை. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.


   

 • பி.இ. படித்துள்ள என் மகள் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அதே வேலையில் நீடிக்கலாமா? மேற்கொண்டு படிக்கலாமா? திருமண யோகம் எவ்வாறு உள்ளது? எத்தகைய வரன் அமையும்? மூலம் நட்சத்திரமாக இருப்பதால்  சற்று பயப்படுகிறோம். என்ன பரிகாரம் செய்யவேண்டும்? 
  - வாசகர், முகப்பேர்

 • உங்கள் மகளுக்கு துலா லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி லக்னத்திலும் பூர்வபுண்ணியாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் பாக்கிய அயன ஸ்தானாதிபதி அயன ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்.  மூன்று திரிகோணாதிபதிகளும் ஆட்சி ,உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதியும் பாக்கிய ஸ்தானத்தில்  அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் ஆட்சி பெறுகிறார். தற்சமயம் லக்னாதிபதியின் தசையில் இறுதிப்பகுதி நடப்பதால் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி மூலநட்சத்திரத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்று பலமுறை எழுதியிருக்கிறோம். அவருக்கு தற்சமயம் மேற்படிப்பு வேண்டாம்.  பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும்  வழிபட்டு வரவும்.

 • எனது சகோதரர் ஜாதகம் செவ்வாய் தோஷம் கொண்டது  என்றும் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான பெண்ணைதான் மணம் முடிக்க வேண்டும் என்றும் கூறினார். இது சரியா? எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய பெண் அமையும்? சொந்தத் தொழில் அமையுமா? 
  - வாசகி, கோயம்புத்தூர்

 • உங்கள் சகோதரருக்கு கன்னி லக்னம். அவருக்கு செவ்வாய்தோஷம் இல்லை. மற்றபடி அவருக்கு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு அவருக்கு தெற்குத் திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். மற்றபடி பெரியதாக கவலைப்பட எதுவுமில்லை. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • நான் அரசுப்பணியில் இருந்தும் இதுவரை சொந்த வீடு வாங்க முடியவில்லை. ராகு தசை ஆரம்பித்தது முதல் நிறைய அவமானங்கள் பிரச்னைகளைஅடைந்தேன்.  குறிப்பாக, பெண்களால் இத்தகைய பிரச்னைகள் ஏற்பட்டன. அடுத்து ஆறாவதாக வரும் குரு தசை மாரகத்தை கொடுக்கும் என்கிறார்களே.. இது உண்மையா? சொந்த வீடு அமையும் பட்சத்தில்  எனது மனைவி பெயரில் வாங்கலாமா? 
  - வாசகர், வேலூர்

 • உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வலுவான ஜாதகமாகவே அமைகிறது. உங்களுக்கு இன்னும் மூன்றாண்டுகள் வரை ராகு மஹாதசை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் இடம் வாங்கும் யோகம் உண்டாகும். தொடரும் குருமஹா தசையில்  வீடு கட்டி குடிப்போவீர்கள். உங்கள் இருவரின் பெயரிலும் நிலம் வாங்கலாம். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • எனது மகன் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து சிறிய விபத்தால் முதுகுத்தண்டில் பிரச்னை ஏற்பட்டு வேலையை இழந்தார். வைத்தியச்செலவும் நிறைய ஆனது. பின்னர் சுயதொழில் வைத்துக்கொடுத்து  அதிலும்  நிறைய கடனும் ஏற்பட்டு விட்டது. உடல்நிலை எப்போது பூரணமாக குணமாகும்? ஏதாவது தொழில் அல்லது உத்தியோகம் கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? சொந்தவீடு அமையுமா?
  - வாசகர், நகரி

 • உங்கள் மகனுக்கு துலா லக்னம், தனுசு ராசி. தற்சமயம் ஆறாம் வீட்டில் சுப பலத்துடன் அமர்ந்திருக்கும் ராகு பகவானின் தசை நடக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானமும் ஓரளவுக்கு வரும். தகுதிக்கேற்ற உத்தியோகமும் கிடைக்கும். திருமணம் அமைதியான குடும்பம் ஆகியவை உண்டாகும். சொந்த வீடு பாக்கியமும் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

 • எனது மகனுக்கு 33 வயதாகிறது.  அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். தற்போது குருபலன் உண்டா? எப்போது திருமணம் நடைபெறும்? எத்திசையில் மணமகள் அமைவார்? ஜாதகத்தில் தோஷங்கள் உள்ளதா? பரிகாரங்கள் எதுவும் செய்ய வேண்டுமா?
  - வாசகி, சோளிங்கர்

 • உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மகர ராசி. லக்னத்தில் லக்னாதிபதி ஆட்சிப்பெற்று ருசக யோகத்தைக் கொடுக்கிறார். லக்னத்தில் பூர்வபுண்ணியாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திருப்பதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி அவருக்கு படித்த பெண் தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். 

 • எனது மற்றும் எனது மனைவியின் ஜாதகத்தில் ஏதேனும் தோஷங்கள் உள்ளனவா? எந்தத் தொழில் செய்யலாம்? எனது மனைவி, மகளின் உடல்நலம் எவ்வாறு இருக்கும்? சொந்த வீடுகட்டும் வாய்ப்புண்டா?
  - வாசகர், ஈரோடு

 • உங்களுக்கு மகர லக்னம், கன்னி ராசி. தற்சமயம் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருமஹா தசையில் இறுதிப்பகுதி நடக்கிறது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு தொடங்கும் லக்னாதிபதியான சனிபகவானின் தசையில் செய்தொழிலில் ஏற்றம், பொருளாதார வளர்ச்சி ஆகியவை நல்லபடியாக அமையும். நீங்கள் செய்து வரும் மார்க்கெட்டிங் துறையே ஏற்றதாகும். உங்கள் மனைவிக்கு கடக லக்னம், துலாம் ராசி. தற்சமயம் பாக்கிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்ற தைரிய ஸ்தானாதிபதியின் தசை நடக்கிறது. இதில் 2019 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு நன்மைகள் கூடத்தொடங்கும். ஆரோக்கிய ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து சுக ஸ்தானத்திலுள்ள லக்னாதிபதியை பார்வை செய்வதால் முழுமையான கஜகேசரி யோகம் உண்டாகிறது. அதனால் ஆரோக்கியம் இறுதிவரை சீராக இருக்கும். உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், ரிஷப ராசி. தற்சமயம் சந்திர மஹாதசை 2019 வரை நடக்கும். அதற்குப்பிறகு நடக்கும் லாபாதிபதியின்தசையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். அதனால் உங்கள் குடும்பத்தில் வளர்ச்சி சீராகவே இருக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

 • நான் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி பணியாளர்.  நான் நிதி அல்லது கல்வி நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாமா? உடல் நலம் எவ்வாறு இருக்கும்? சொந்த ஊரில் இடம் வாங்கி வீடு கட்டலாமா? 
  - வாசகர், அறந்தாங்கி

 • தற்சமயம் ஏழரை நாட்டுச் சனி முடியும் தருவாயில் உள்ளது. அதோடு பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிர பகவானின் தசையும் நடக்கிறது. குருபகவானின் பார்வையும் சுக்கிரபகவானின் மீது படிவதால் இந்த தசையில் படிப்படியாக முன்னேற்றமடைந்து நல்ல நிலையை எட்டி விடுவீர்கள். உங்களுக்கு ஹம்ஸ யோகம், சந்திர மங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. நிதி அல்லது கல்வி நிறுவனங்களில் வேலைக்குச் செல்லலாம். உடல் ஆரோக்கியமும் சீராகவே இருக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இடம் விற்பனையாகும். சொந்த ஊரில் வீடு கட்டி வாழலாம். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானை வழிபட்டு வரவும்.

 • எனக்கு திருமணம் முடிந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. எப்பொழுது குழந்தை பாக்கியம் கிடைக்கும்? என் கணவருக்கு  பதவி உயர்வு கிடைக்குமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? 
  - வாசகி, விழுப்புரம்

 • உங்களுக்கு சிம்ம லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். தற்சமயம் சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி குருபகவான் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்து லக்னாதிபதியைப் பார்வை செய்கிறார். அதோடு தற்சமயம் சுக பாக்கியாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலைபாக்கியம் உண்டாகும். மற்றபடி களத்திர ஸ்தானாதிபதி சுப பலத்துடன் இருப்பதால் உங்கள் கணவரின் உத்தியோகம் மேன்மையாக இருக்கும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • எனது மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பெற்றோர் பார்த்து செய்யும் திருமணமாக அமையுமா? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 
  - வாசகர், புதுதில்லி

 • உங்கள் மகளுக்கு மிதுன லக்னம், லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கும் களத்திர மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதிகளான புதன் மற்றும் குருபகவான்கள் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று சுப பலத்துடன் இருக்கிறார்கள்.  சிவராஜ யோகம், குருசந்திர யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளன. மேலும் தற்சமயம் பூர்வபுண்ணியாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடைபெறுவதால் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படித்த நல்ல உத்தியோகத்திலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பெற்றோர் நிச்சயித்த திருமணமே கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

 • என் மகனுக்கு முதல் திருமணம் விவாகரத்தாகிவிட்டது. எப்போது மறுமணம் நடைபெறும்? 
  - வாசகர், முசிறி

 • உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் பூர்வபுண்ணியாதிபதி, தைரிய ஸ்தானாதிபதி மற்றும் ராகுபகவான்களுடன் இணைந்திருக்கிறார். களத்திர, நட்பு, தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியான சூரியபகவானுடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இணைந்து சிறப்பான தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது.  களத்திர ஸ்தானத்தில் ஆறாமதிபதியான சுக்கிரபகவான் அமர்ந்திருக்கிறார். தற்சமயம் குருமஹா தசையில் பாக்கியாதிபதியான சூரியபுக்தி நடைபெறுகின்றது. சூரியபகவானை குருபகவான் ஒன்பதாம் பார்வையாகப் பார்வை செய்வது சிறப்பு. அதனால் அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் களத்திர ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷமுள்ள பெண் அமைந்து மறுமணம் கைகூடும். பிரதி புதன்மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • எனக்கு நிரந்தர வருமானம் தரும் வேலையோ அல்லது தொழிலோ எப்போது அமையும்? அரசியலில் வெற்றி பெறுவேனா? திடீர்அதிர்ஷ்டம் கிடைக்குமா? எனக்குள்ள வயிறு சம்பந்தப்பட்ட நோய்  எப்போது குணமாகும்?
  - வாசகர், அரியலூர்

 • உங்களுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி. லக்னத்தில் பாக்கியாதிபதியும் பாக்கியத்தில் லக்னாதிபதியும் பரிவர்த்தனைப் பெற்று அமர்ந்திருக்கிறார்கள். தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் பேச்சு சம்பந்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டு வருவாய் ஈட்டலாம். பூர்வபுண்ணிய விரயாதிபதி தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து விபரீத ராஜயோகத்தைப் பெறுகிறார். மேலும் அவர் நவாம்சத்திலும் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியை அடைகிறார். அதோடு  பாக்கிய ஸ்தானத்திலிருந்து குருபகவான் செவ்வாய்பகவானைப் பார்வை செய்வதால் குருமங்கள யோகம் உண்டாகிறது. அதனால் வருமானத்திற்கு எந்தக் குறைவும் இறுதிவரை ஏற்படாது என்றும் கூறலாம். ஆரோக்கிய ஸ்தானாதிபதி விபரீத ராஜயோகம் பெற்று இருந்து லக்னாதிபதியை விட சற்று கூடுதல் பலம் பெற்று இருக்கிறார். சுக ஸ்தானத்தில் அசுபக்கிரகம் அமர்ந்திருப்பதால் அடிவயிறு சம்பந்தப்பட்ட உபாதை ஏற்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியவுடன் உங்கள் உடல் உபாதை, பொருளாதார முன்னேற்றம், அரசியல் வாழ்வில்  ஓரளவு வெற்றி ஆகியவைகள் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில்துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். 

 • என் மகளுக்கு எப்போது திருமணமாகும்? 8 இல் ராகு இருப்பது குறை.  தாலிபாக்கியம் எவ்வாறு உள்ளது? களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் நீசம். இதனால் கணவர் நலம் வளமாக அமையுமா? குழந்தை பாக்கியம் தாமதமாகுமா? என்மகளுக்கு நல்ல ஜாதகமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
  - வாசகர், நெல்லை

 • உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி. லக்னம் மற்றும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானங்களுக்கு அதிபதியான சுக்கிரபகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 
  தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் தன ஸ்தானத்திலேயே ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் தனுசுராசியை அடைகிறார். 
  தர்மகர்மாதிபதியான சனிபகவான் தர்ம ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் மேஷ ராசியில் நீசமடைகிறார். 
  மூன்றாமதிபதியான தைரிய ஸ்தானாதிபதி சந்திரபகவான் கன்னி ராசியில் சுய சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். 
  சுக ஸ்தானாதிபதியான சூரியபகவான் குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருக சீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
  களத்திர நட்பு மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் மூன்றாமிடமான தைரிய ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில்( ஆயில்ய நட்சத்திரம்)  அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். 
  அஷ்டம, லாபாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான தனுசு ராசியை அடைகிறார். 
  கேதுபகவான் குடும்ப ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். ராகுபகவான் எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
  உங்கள் மகளுக்கு குடும்ப ஸ்தானம், அஷ்டம ஸ்தானம் ஆகிய வீடுகளில் கேது - ராகுபகவான்கள் அமர்ந்திருக்கிறார்கள். இதற்கு சர்ப்ப தோஷம் என்று பெயர். அஷ்டம ஸ்தானமானது ஆயுள் ஸ்தானம் என்றாலும் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமுமாகும். தாலி பாக்கியம் என்பதை இந்த வீட்டைக் கொண்டே பார்க்க வேண்டும். 
  எட்டாம் வீட்டில் ராகுபகவான் உள்ளதால் தாலி பாக்கியத்தைச் சற்று கவலையுடன் கேட்டுள்ளீர்கள். ராகுபகவான், தான் இருக்கும் வீட்டைத் தனதாக்கிக் கொண்டு பலன் தருவார் என்பது விதி. பொதுவாக, ராகுபகவான் அசுபக்கிரகம் என்பதாலும் சனிபகவானைப் போல் ராகுபகவான் செயல்படுவார் என்பதாலும் ராகுபகவானையும் சனிபகவானையும் கண்டு அனைவருக்கும் சிறு சலனம் ஏற்படுவது இயற்கையே. மற்றபடி ராகுபகவானின் பலத்தையும் அந்த வீட்டிற்கு அதிபதியான குருபகவானின் பலத்தையும் சீர்தூக்கிப் பார்த்து பலன்களை அறிய வேண்டும். 
  பொதுவாக, ராகு - கேது பகவான்களுக்கு இடம் கொடுத்த அதிபதிகள் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருப்பவர்களும் ராகு- கேது பகவான்களுக்கு கேந்திர ராசிகளில் கிரகங்கள் இருப்பவர்களும் பாக்கியவான்களாவார்கள். இத்தகையோர் அவர்கள் சார்ந்த துறையில் சாதனை செய்வார்கள் என்று கூற வேண்டும். 
  அந்த கிரகங்கள் மற்றவர்களின் பலம் பெற்று அதாவது ராகு- கேது பகவான்களை விட கூடுதல் பலம் பெற்றிருந்தால் சர்ப்ப கிரகங்களால் அசுபங்கள் எதுவும் நடக்காது. அவருக்கு ராகுபகவான் தனுசு ராசியில் கோதண்ட  ராகுவாக அமர்ந்திருக்கிறார். அதனால் ராகுபகவான் சுபாவத்தில் குருபகவானின் சுபத்துவத்தைப் பெறுகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். குருபகவான் புதபகவானின் சாரத்தில் உச்சம் பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியில் ஆட்சி பெறுகிறார். ஷட் பலத்தில் குருபகவானுக்கு 1.18 மடங்கு கூடுதல் பலமும்; சுய வர்க்கப் பரல்களின் பலத்தைப் பார்க்க வேண்டியது அவசியம். 
  சுய வர்க்கத்தில் அதிகபட்சமாக 8 பரல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5 அல்லது அதற்கு மேல் பரல்கள் நல்ல பலம் என்றும் 2 அல்லது அதற்குக் கீழ் அமைந்தால் பலன் இல்லை என்றும் கொள்ள வேண்டும். அதிகமான பரல்கள் கொண்ட வீடுகளில் அந்த கிரகங்கள் கோசாரத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் கூடுதலான பலன்கள் கிடைக்கும். அதேபோல் கோசாரத்தில் அந்த கிரகம் நல்ல இடத்தில் சஞ்சாரம் செய்தாலும் அந்த கிரகத்திற்கு அந்த குறிப்பிட்ட ராசியில் சுய வர்க்கப் பலன்கள் குறைந்து காணப்பட்டால் முழுமையான நன்மைகள் கிடைக்காமல் போகின்றது. அதனால் உங்கள் மகளுக்கு தீர்க்கமாங்கல்யம் உண்டு. 
  களத்திர மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் நீச்சம் பெற்றிருப்பது குறையா?  பாதிப்பு உண்டாகுமா? என்று கேட்டுள்ளீர்கள். கடக ராசியில் குருபகவான் உச்சம் பெற்றிருப்பதாலும் நவாம்சத்தில் செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருப்பதாலும் இரண்டு வகைகளில் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். 
  ஷட் பலத்தில் செவ்வாய்பகவானுக்கு 1.06 மடங்கு கூடுதல் ரூப பலமும் சுயவர்க்கத்தில் கடக ராசியில் 4 பரல்களும் அமைகின்றன.  இதன் அடிப்படையில் பார்த்தால் படித்த நல்ல சிறப்பான உத்தியோகத்திலுள்ள வரன் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு அமைந்து ஓராண்டுக்குள் திருமணம் கைகூடும். கணவரின் வாழ்வு வளமாகவும் மணவாழ்க்கை சிறப்பாகவும் அமையும். 
  தன புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து ஷட்வர்க்கத்தில் 1.17 மடங்கு கூடுதல் ரூப பலமும் சுயவர்க்கத்தில் மிதுன ராசியில் 4 பரல்களுடன் அமர்ந்து இருப்பதால் குழந்தை பாக்கியத்திற்குக் குறைவு வராது. அதேநேரம் அவர், கேதுபகவானுடன் இணைந்திருப்பதால் காலதாமதமாகுமா என்று பார்த்தால் லக்னாதிபதியான சுக்கிரபகவான் விபரீத ராஜயோகம் பெற்று தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும் புதபகவானுக்கு ரிஷப ராசியில் 6 சுய வர்க்கப் பரல்கள் அமைந்திருப்பதாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகாது. 
  தர்மகர்மாபதி ஆட்சி பெற்றிருப்பதால் உத்தியோகம் பார்ப்பார். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

ராசி பலன்கள்

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை