பருத்தியைத் தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த யோசனை

பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிரை தாக்கியுள்ள நோய்களைக் கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி பயிரை தாக்கியுள்ள நோய்களைக் கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண் துறை) கல்யாணி. 

பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 33,492 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பருத்தி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதாலும், காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும் பருத்தி பயிரை நோய்கள் தாக்குவதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. பருத்தி பயிரை தாக்கும் நோய்களின் அறிகுறிகளை கண்டு, விவசாயிகள் கட்டுப்படுத்த வேண்டும். 

சாம்பல் அல்லது தயிர்ப்புள்ளி நோய்: இந்நோயானது, இலையின் அடிப்புறத்தில் ஒழுங்கற்ற, கசியும் புண்களுடன் சாம்பல் நிற புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும். இந்நோய் தீவிரமடைந்த நிலையில், சாம்பல் நிற நுண் துகள்கள் இலையின் மேற்பரப்பிலும் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து உள்நோக்கி காயத் தொடங்கும். 

பின்னர், மஞ்சள் நிறமாகி இளம் இலைகள் உதிர்ந்துவிடும். இந்நோயைக் கட்டுப்படுத்த, தாவர குப்பைகளை அகற்றி தீயிடவும். அதிகப்படியான நைட்ரஜன் உரங்களை தவிர்க்கவும். 

கார்பென்டசிம் 250 கிராம், ஹெக்டேர் அல்லது வெட்டபுள் சல்பர் 1.25 -2.0 கிலோ ஹெக்டேர் என்ற அளவில் தெளிக்கவும். அல்லது, நேட்டிவோ 1 மி.லி அல்லது ஹெக்சாகோனோசால் 1.5 மி.லி அல்லது புரபிகோனோசோல் 1.5 மி.லி அல்லது குளோரோதானில் 2 கிராம் லிட்டர் என்ற அளவில் தெளிக்கவும். 

ஆல்டர்நேரியா இலைக்கருகல் நோய்: இந்நோயானது, அனைத்துப் பருவத்திலும் பாதிக்கக்கூடியது. ஆனால், 45- 60-ஆம் நாளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட இலைகளில் வெளிர் பழுப்பு நிறத்தில் வட்ட வடிவத்தையோ, ஒழுங்கற்ற வடிவத்தையோ கொண்ட சிறு, சிறு புள்ளிகள் காணப்படும். ஒவ்வொரு புள்ளியின் நடுவிலும், அழுக்காக வளையங்கள் காணப்படும்.   

புள்ளிகள் ஒன்றோடொன்று இணைந்து, இலை முழுவதும் பாதிக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் நொறுங்கி உதிர்ந்து விடும். சில நேரங்களில் தண்டுகளிலும் நோயின் அறிகுறி காணப்படும். தீவிர நிலையில் புள்ளிகள் பூவடிச் செதில்களிலும், காய்களிலும் காணப்படும். 

இந்நோயைக் கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளை அகற்றவும். 
ஆரம்ப நிலையில் மான்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிலோ ஹெக்டேர் தெளிக்கவும். 15 நாள் இடைவெளியில், மீண்டும் ஒருமுறை தெளிக்கவும். நேட்டிவோ 1 மி.லி அல்லது ஹெக்சாகோனோசால் 1.5 மி.லி அல்லது புரபிகோனோசோல் 1.5 மி.லி அல்லது குளோரோதானில் 2 கிராம் என்ற அளவில் தெளிக்கவும்.

பாக்ட்டீரியா கருகல் நோய்: இந்நோயானது, நீர்க்கசிவுடன் கூடிய கருமை நிற புள்ளிகள் இலையின் நரம்புகளுக்கிடையில் தோன்றி கோண வடிவத்தில் இருக்கும். 

இந்நோயைக் கட்டுப்படுத்த, 10 லிட்டர் தண்ணீரில் காப்பர் ஆக்ஸி குளோரைடு 20 கிராம் மற்றும் ஸ்ட்ரப்டோசைக்ளின் 1 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவும். மேற்கண்ட முறைகளை பயன்படுத்தினால், நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com