சூரியகாந்தியில் புகையிலைப் புழு கட்டுப்பாடு!

சூரியகாந்தி பயிரில் தலைத்துளைப்பான், புகையிலைப் புழு கட்டுப்பாடு முறைகளைப் பின்பற்றி மகசூல் இழப்பைத் தடுத்து அதிக லாபம் பெறலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
சூரியகாந்தியில் புகையிலைப் புழு கட்டுப்பாடு!

திருநெல்வேலி: சூரியகாந்தி பயிரில் தலைத்துளைப்பான், புகையிலைப் புழு கட்டுப்பாடு முறைகளைப் பின்பற்றி மகசூல் இழப்பைத் தடுத்து அதிக லாபம் பெறலாம் என, வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
தலைத் துளைப்பான்: பயிரின் தலைப் பகுதியில் மட்டும் துளையிடும் புழு என்பதால் தலைத் துளைப்பான் எனப்படுகிறது.
அறிகுறி: பயிரில் தலைப் பகுதியின் உள்ளே துளைகள் காணப்படும். நன்றாக வளர்ந்த விதைகளின் மீது புழுக்கள் உண்டதற்கான அறிகுறி காணப்படும். பூஞ்சான் உருவாகி, தலைப்பகுதி அழுகத் தொடங்கும். வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் புழுக்கள் இலைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்து பின்னர் தலைப் பகுதியைத் துளைக்கும்.
பூச்சி விவரம்: முட்டைகள் உருளை வடிவத்தில், பால் வெள்ளை நிறத்தில் காணப்படும். தனித்தனியே முட்டை இடும். புழு பச்சை நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக தோற்றமளிக்கும். உடலின் மீது அடர் பழுப்பு சாம்பல் நிற வரிகளும், அடர், மங்கிய நிற வளையங்களும் காணப்படும். கூட்டுப்புழு பழுப்பு நிறத்தில் மண், இலை, காய், பயிர், குப்பைகளில் காணப்படும். பூச்சியின் இறக்கைகள் இளம் புகை வெள்ளை நிறத்துடன், அகலமான கருப்பு நிற வெளி விளிம்புடன் காணப்படும். இளம் பழுப்பு கலந்த மஞ்சள் நிறத்தில், தடித்து காணப்படும். முன் இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறத்திலிருந்து இளம் பழுப்பு நிறத்துடன், அடர் பழுப்பு நிற வட்ட வடிவ புள்ளி நடுவிலும் காணப்படும்.
கட்டுப்பாடு: சூரியகாந்தியில் ஊடு பயிராக பச்சைப் பயிறு, உளுந்து, கடலை, சோயாபீன் பயிரிடுவதன் மூலம் தலைத்துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம். 3-க்கு 4 வரிசை என்ற அளவில் மக்காச்சோளத்தை பயிரைச் சுற்றி விதைக்கலாம். பொறிப் பயிர்களாக ஏக்கருக்கு துலக்கமல்லி 50 செடிகள் என்ற அளவில் விதைக்கலாம். ஏக்கருக்கு 4 இனக் கவர்ச்சிப் பொறிகள் வைத்தும் கட்டுப்படுத்தலாம். விளக்குப்பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
இரை விழுங்கிகளான காக்சி நெல்லி டிஸ், கிரைசோபெர்லா கார்னியா 1 புழு என்ற அளவில் வயலில் வெளியிடலாம்.
ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிராமா பிரக்கான் வகைகள், கேம்போலெட்டிஸ் வகைகளை வயலில் வெளியிடலாம். தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை மாலை நேரங்களில் தெளிக்கலாம். 5 சதவீத வேப்பெண்ணெய் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டைச் சாற்றை முட்டை இடும் முன் தெளிக்க வேண்டும்.
புகையிலைப் புழு அறிகுறி: இவ்வகை பூச்சிகள் இளம் இலைகள், கிளைகள், இதழ்களை உண்ணும். பின்னர் வயல் முழுவதும் பரவி, இலைகள் உதிரும். வளர்ந்த விதைகளை புழுக்கள் உண்ணும்.
பூச்சியின் விவரம்: இதன் முட்டை கூட்டமாக காணப்படும். தங்க நிறம் கலந்த பழுப்பு நிறத்தில் தோற்றமளிக்கும். புழு இளம் பச்சை நிறத்துடன் அடர் குறிகளுடன் காணப்படும். இளம் நிலையில் தீவிரமாக உண்ணும்.
பூச்சியின் முன் இறக்கைகள்: பழுப்பு நிறத்தில், அலை போன்ற வெள்ளை நிற குறிகளுடன் காணப்படும். பின் இறக்கைகள் வெள்ளை நிறத்தில், விளிம்புகளில் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும்
கட்டுப்பாடு: புகையிலைப் புழு தாக்கிய முட்டைகளை சேகரித்து, அழிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மாலை 4 மணிக்குப் பிறகு தெளிக்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தேனீக்கள் வரவு குறைவாக இருக்கும். பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்க மருந்து தெளித்த நாளில் பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டும். இத்தகைய தொழில்நுட்பமுறைகளைப் பின்பற்றி மகசூல் இழப்பைத் தடுக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com