நிலக்கடலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க...

நிலக்கடலை சாகுபடியில் உற்பத்தித் திறனை அதிகரிக்க விவசாயிகள் கையாள வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. 
நிலக்கடலையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க...

பெரியகுளம்: நிலக்கடலை சாகுபடியில் உற்பத்தித் திறனை அதிகரிக்க விவசாயிகள் கையாள வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. 
சோயா மற்றும் கடுகுப்பயிருக்கு அடுத்து நிலக்கடலை அதிக பரப்பளவில் நம்நாட்டில் பயிரிடப்படுகிறது. நல்ல வளமான மணற்பாங்கான கற்றோட்டமும், நல்ல வடிகால் வசதியுமுடைய செம்மண் நிலத்தில் நிலக்கடலை பயிரிடப்படுகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தாவர எண்ணெய் தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் விவசாயிகள் தரமான விதைகளை உபயோகித்து, உற்பத்தி திறனைக் கூட்டலாம்.
இதுகுறித்து வைகை அணை வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் ம.மதன்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நிலக்கடலை உற்பத்தியில் சராசரியாக ஹெக்டேருக்கு 1.1 டன்னாக இந்திய அளவிலும், தமிழக அளவில் 2.2 டன்னாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கூடுதல் மகசூல் பெற தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். 
பருவம்: நிலக்கடலை விதைப்புக்கு ஆடிப்பட்டம் (ஜூலை- ஆகஸ்ட்) மற்றும் மார்கழி பட்டம் (டிசம்பர், ஜனவரி) மிகவும் சிறந்த மாதங்களாகும். அறுவடை சமயத்தில் அதிக மழையை தவிர்த்திடவும், வறட்சி மற்றும் பூச்சி நோய்த் தாக்குதலைக் குறைத்திடவும், மகசூலை அதிகரிக்க பருவத்தில் விதைப்பது நல்லது.
ரகங்கள்: பருவத்துக்கு ஏற்ற உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்து அவற்றை உற்பத்தி செய்வது மிகவும் நன்று. டிஎம்வி-7, விஆர்ஐ- 6, டிஎம்வி-13 போன்ற ரகங்கள் மிகவும் பிரபலம். விஆர்ஐ-5,7 மற்றும் கோ,6,7 ஆகிய ரகங்களும் சிறந்த மகசூல் தரவல்லது.
விதைத் தேர்வு: நல்ல பருமனுள்ள, நோய் தாக்காத விதைகளையே பயன்படுத்த வேண்டும். ஏக்கருக்கு சராசரியாக 55 கிலோ விதை போதுமானதாகும். அதிக இனத்தூய்மையும், பூச்சி நோய் தாக்காத , நல்ல முளைப்பு திறனுள்ள விதைகளையும் தேர்வு செய்ய வேண்டும்.
விதை நேர்த்தி: விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்க, பயிர் நன்கு வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளை நாம் உருவாக்க வேண்டும். விதை மூலமும், மண் மூலமும் பரவும் வேர் அழுகல், தண்டு அழுகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களை கட்டுப்படுத்த ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் பயன்படுத்த வேண்டும். 24 மணி நேரம் வைத்திருந்து விதைப்பது நல்லது. அல்லது விதையை ஈரப்படுத்தி உடனே பயன்படுத்தலாம்.
விதை விதைப்பு: நிலத்தை நான்கைந்து முறை உழவு செய்து, புழுதிபட தயார் செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஒரு ஏக்கருக்கு 10 வண்டி மக்கிய தொழு உரம் இடவேண்டும். மண்ணின் தன்மை மற்றும் நீர்ப்பாசன வசதிகேற்ப சிறிய பாத்திகளாகவோ அல்லது பெரிய பாத்திகளாகவோ அமைத்துக் கொள்ள வேண்டும். விதைக்கப்படும் விதை 4 செ.மீ. ஆழத்துக்கு கிழே சென்று விடக்கூடாது. கொத்து ரகத்துக்கு ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கொடி ரகம் மற்றும் அடர் கொடி ரகத்துக்கு 25 செடிகள் இருக்க வேண்டும். கொத்து ரக விதை விதைக்கும் போது வரிசைக்கு, வரிசை ஒரு அடியும், செடிக்குச் செடி 10 செ.மீ. இடைவெளியும் இருக்குமாறு விதைக்க வேண்டும்.
உரநிர்வாகம்: பேரூட்ட சத்துக்கள் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடியுரங்களாக இட வேண்டும். ஏக்கருக்கு 35 கிலோ யூரியா, 100 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 40 கிலோ பொட்டாஷ் தேவைப்படுகிறது. மேலும் நுண்ணூட்டச் சத்துக்களான போராக்ஸ் 4 கிலோ மற்றும் ஜிங்க் சல்பேட் 10 கிலோ விதைப்பு முடிந்தவுடன் நிலத்தின் மேல் இடவேண்டும். விதைத்த 40- 45ஆம் நாள் ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்பஸத்தை இட்டு செடிகளை சுற்றி மண் அணைக்க வேண்டும். பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு டிஎன்ஏயூ நிலக்கடலை ரிச்சை 2.2 கிலோவை 200 லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். காய்கள் முதிர்ச்சியடைந்த தருணத்தில் அறுவடை செய்து சேதாரத்தை கட்டுப்படுத்துவது மிக முக்கியப் பணியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com