குறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் தரும்: திருந்திய நெல் சாகுபடி!

தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் குறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் பெறலாம் என்கிறார்
குறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் தரும்: திருந்திய நெல் சாகுபடி!


நாமக்கல்: தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் குறைவான தண்ணீரில் நிறைவான மகசூல் பெறலாம் என்கிறார் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் வேளாண் தொழில்நுட்ப ஆலோசகரும், ஓய்வுபெற்ற வேளாண் துணை இயக்குநருமான மதனகோபால்.
பருவம் மற்றும் ரகங்கள்:
குறுவை: ஆண்டுதோறும் ஜூன்-ஜூலை மாதத்தில் பயிரிடப்படும் குறுவை பருத்திக்கு, ஆடுதுறை 36, 37, 43, 45, 47, கோ 47 மற்றும் மதுரை 5 ஆகியவை ஏற்ற ரகங்களாகும். 
சம்பா: ஆகஸ்ட்-செம்ப்டம்பர் மாதத்தில் தொடங்கும் சம்பா பருவத்துக்கு, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி, சி.ஆர்.1009 (பொன்மணி), ஆடுதுறை 44, 49, 50, பி.பி.டி.5204, சம்பா மசூரி, கோ 50, திருச்சி 1, கோ 43, ஐ.ஆர்.20 மற்றும் கோ 52 ஆகியவை ஏற்ற ரகங்களாகும். 
தாளடி: செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் தொடங்கும் தாளடி பருவத்துக்கு, ஆடுதுறை 39, கோ 43, பி.பி.டி.5204, சம்பா மசூரி, கோ 50, ஆடுதுறை 49, அம்பை 19, திருச்சி 1 மற்றும் கோ 52 ஆகியவை ஏற்ற ரகங்களாகும்.
நாற்றங்கால் தயார் செய்தல்: ஓர் ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை போதுமானதாகும். ஓர் ஏக்கர் நடவுக்கு ஒரு சென்ட் (40 சதுர மீட்டர்) நாற்று மேடை அமைக்க வேண்டும்.
நடவு வயலின் ஓரத்தில் 1-5 மீட்டர் அளவுள்ள 8 மேடைகளை அருகிலிருக்கும் மண்ணை எடுத்து உருவாக்க வேண்டும். நன்கு மக்கிய தொழு உரத்தை வழக்கமான அளவு இடுதல் அவசியம். நாற்று மேடை ஒன்றுக்கு 95 கிராம் வீதம் 8 நாற்று மேடைகளுக்குத் தேவையான 760 கிராம் டி.ஏ.பி. உரத்தை நன்கு பொடி செய்து மண்ணுடன் கலந்து நாற்று மேடைகளில் நிரப்பி விட வேண்டும். 
நிலப் பரப்புக்கு மேல் 5 செ.மீ. உயரம் மேடை அமைத்த பின், மேடை மேல் பாலிதீன் தாளையோ அல்லது பிரித்த உரச் சாக்கு பைகளையோ பரப்பி விட வேண்டும். அதன் மீது 4 செ.மீ. உயரத்துக்கு மண்ணைப் பரப்பி விட வேண்டும். இதனுடன் நன்கு மக்கிய தொழு உரம் கலப்பது மிகவும் சிறந்தது. மரச் சட்டத்தைப் பயன்படுத்தியும் நாற்று மேடையை உருவாக்கலாம். 
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் எதிர் உயிர் பூஞ்சாணத்தை கலந்து விதை நேர்த்தி செய்யவும். இவ் விதைகளை தண்ணீரில் ஊற வைத்து பின் வடிகட்டி இருட்டறையில் 24 மணி நேரம் வைத்திருந்து முளைகட்ட வேண்டும். 
முளை கட்டிய (இரண்டாம் கொம்பு) விதைகளை ஒவ்வொரு 5 சதுர மீட்டர் மேடையிலும் 375 கிராம் விதையினை பரவலாக விதைக்க வேண்டும். பூவாளி கொண்டு நீர் தெளிக்கலாம். அல்லது சுற்றி இருக்கும் பள்ளங்களில் நீர் நிரப்பலாம். 
விதைத்த ஒரு வாரத்துக்கு பின் நாற்றின் வளர்ச்சி குறைவாக இருந்தால், 0.5 சதவீதம் யூரியா கரைசலை (50 கிராம் யூரியாவை 10 லிட்டர் நீரில் கரைக்கவும்) பூவாளி கொண்டு தெளிக்கலாம்.
நாற்றுகளைக் கையாளுதல்: நாற்றுகளை மேடை மண்ணோடு பெயர்த்து எடுத்து நடவு வயலுக்குக் கொண்டு செல்வது சிறந்தது. இதனால் நாற்றுகளில் வேர்சூழ்நிலை மாறாமல் நடவு செய்வதற்கு வாய்ப்பிருந்தால் செடிகள் பச்சை பிடிப்பதுடன் தொடங்கும். 
நடவு வயல் தயார் செய்தல்: நடவுக்கு பத்து நாள்களுக்கு முன் நடவு வயலில் ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்ட் உரத்தை சீராகப் பரப்பி தண்ணீர் பாய்ச்சி சேற்று உழவு செய்ய வேண்டும். பின் வயலை 2 அல்லது 3 முறை உழவு செய்து தேவையான அளவுக்கு தொழி கிடைக்குமாறு செய்யவும். 
மண் ஆய்வு முடிவுப்படி உரமிடுதல் அவசியம். குறுகிய கால ரகங்களுக்கு, ஓர் ஏக்கருக்கு அடியுரமாக 26 கிலோ யூரியா, 100 கிலோ சூப்பர் பாஸ்பேட், 6 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இட வேண்டும்.
பின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் மேலுரமாக ஓர் ஏக்கருக்கு 26 கிலோ யூரியா மற்றும் 6 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இட வேண்டும்.
மத்திய, நீண்ட கால ரகங்களுக்கு, ஓர் ஏக்கருக்கு அடியுரமாக 33 கிலோ யூரியா, 125 கிலோ சூப்பர் பாஸ்பேட், 8 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இடவேண்டும்.
பின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் மேலுரமாக ஓர் ஏக்கருக்கு 33 கிலோ யூரியா மற்றும் 8 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் இடவேண்டும்.
நடவு வயலில் ஏக்கருக்கு பத்து பொட்டலம் (2 கிலோ )அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் (2 கிலோ) பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை 50 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து நடவு வயலில் சீராகத் தூவ வேண்டும்.
சூடோமோனஸ் புளோரசன்ஸ் என்ற இயற்கை எதிர் உயிரி பூஞ்சான மருந்தினை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் 20 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் தூவ வேண்டும்.
நடவு முறைகள்:10 முதல் 14 நாள்கள் வயதுடைய இளம் நாற்றுகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். 22.5 செ.மீ-22.5 செ.மீ. இடைவெளியில் சதுர நடவு செய்ய வேண்டும். நடவு செய்யும் போது வேர்கள் மேல்நோக்கி இல்லாமல் 3 செ.மீ. ஆழத்துக்கு மிகாமல் மேலாக நடவு செய்ய வேண்டும்.
களை நிர்வாகம்: உருளும் களைக் கருவியினை (கோனோவீடர்) கொண்டு நடவு செய்த 10, 20, 30 மற்றும் 40-ஆம் நாள்களில் (மொத்தம் நான்கு முறை) குறுக்கும் நெடுக்குமாக நெற்பயிர்களுக்கு ஊடாக பயன்படுத்த வேண்டும்.
களைக் கருவியைப் பயன்படுத்தும் போது களைகள் மண்ணில் அமிழ்த்தி விடப்படுவதால், இயற்கை உரமாக்கப்படுவதுடன், களைச் செடிகளால் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் ஊட்டச் சத்துகள் மண்ணுக்கே திரும்புகின்றன.
நீர் நிர்வாகம்: நடவு முதல் தண்டு உருளும் பருவம் வரை நடவு வயலில் 2.5 செ.மீ. உயரம் நீர்கட்டி பின்னர் கட்டிய நீர் மறைந்து மண்ணின் மேற்பரப்பில் லேசான கீறல் வெடிப்புகள் தோன்றியவுடன், மறுபடியும் 2.5 செ.மீ. உயரத்துக்கு நீர் கட்ட வேண்டும்.
பஞ்சு கட்டும் பருவம் முதல் அறுவடைக்கு முன்பு வரை 2.5 செ.மீ. உரத்துக்கு நீரை கட்டி பின் மண்ணின் மேற்பரப்பிலிருந்து நீர் மறைந்தவுடன் மறுபடியும் 2.5 செ.மீ. உயரத்துக்கு நீர் கட்ட வேண்டும்.
சாதகமான அம்சங்கள்: குறைந்த விதை அளவு, நாற்றங்கால் பராமரிப்பு செலவு குறைவு, களைகொல்லி தேவையில்லை. 30 முதல் 40 சதவீதம் வரை நீர் சேமிப்பு, பூச்சி, நோய் தாக்குதல் குறைவு, எலித் தொல்லை குறைவு. மேலும் கூடுதல் மகசூல், அதிக வைக்கோல் மகசூலைப் பெறலாம். 
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்தினால், ஓர் ஏக்கரில் வழக்கமான சாகுபடி முறையில் கிடைக்கும் 2.5 டன் சராசரி நெல் மகசூலைக் காட்டிலும் 3 முதல் 3.5 டன் வரை கூடுதல் மகசூல் பெறலாம்.
கூடுதல் தகவல்களுக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி தொலைபேசி எண்18004198800-இல் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com