கறிவேப்பிலை பயிரில் நச்சுத் தன்மை போக்க உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

புதுமையான தீவிர உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை மேற்கொள்வதன் மூலம் கறிவேப்பிலை பயிரில்
கறிவேப்பிலை பயிரில் நச்சுத் தன்மை போக்க உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை


நாமக்கல்: புதுமையான தீவிர உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை மேற்கொள்வதன் மூலம் கறிவேப்பிலை பயிரில் நச்சுத்தன்மை இல்லாத நிலையை உருவாக்க முடியும். 
இதுகுறித்து நாமக்கல் பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி முதல்வர் சி.ஸ்ரீதரன், வேளாண் விதைச்சான்று அலுவலர் நா.ராமகிருஷ்ணன், கல்லூரி உதவிப் பேராசிரியர்கள் க.ராஜ்குமார், மா.கலைநிலா ஆகியோர் தெரிவித்தது: 
கறிவேப்பிலை சாகுபடி கோவை, சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய ஏற்றுமதி நறுமணப் பணப் பயிராக அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கறிவேப்பிலையில் அதிக அளவு பூச்சிகொல்லிகளின் எஞ்சிய நஞ்சு இருப்பது கண்டறியப்பட்டு, ஏற்றுமதி ரத்து செய்யப்பட்டது. 
எனவே, கறிவேப்பிலையில் பூச்சி மேலாண்மை குறித்த கள ஆய்வுகள் 2012-ஆம் முதல் 2014-ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டன. கோவை, தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கறிவேப்பிலை சாகுபடியாளர்களின் கருத்துகள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. 
வீரியமான மருந்துகள்: இதன் முடிவில் கறிவேப்பிலையில் காணப்படும் முக்கியப் பூச்சிகளான சில்லிடு (சாறு உறிஞ்சும் துள்ளும்பேன் பூச்சி) மற்றும் இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வீரியமான பூச்சிக்கொல்லி கலவைகள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது. 
மேலும், கறிவேப்பிலையைத் தாக்கும் முக்கியப் பூச்சிகளின் வாழ்க்கைப் பருவம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இலை சுருட்டுப்புழு மீது நடத்தப்பட்ட வாழ்நாள் ஆய்வின் முடிவில் முட்டைப் பருவம் 5-6 நாள்கள் வரையும், புழு பருவமானது 13-17 நாள்கள் வரையும் மற்றும் கூட்டுப்புழு பருவம் 5-6 நாள்கள் வரையும் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், பெண் அந்துப் பூச்சியின் வாழ்நாள் (25 முதல் 37 நாள்கள் வரை) ஆண் அந்துப்பூச்சியின் வாழ்நாளை விட அதிகம் என்பது கண்டறியப்பட்டது. 
கறிவேப்பிலையைத் தாக்கும் முக்கியப் பூச்சிகளின் தோன்றுதல் நிகழ்வு குறித்த ஆய்வு ஓர் ஆண்டு காலம் மேற்கொள்ளப்பட்டது. அதில் கறிவேப்பிலையைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சியான சில்லிடின் எண்ணிக்கை மார்ச் மாதத்தில் அதிகமாகவும், ஜூலை மாதத்தில் குறைவாகவும் இருந்தது என்று கணக்கிடப்பட்டது. 
கோடை, மழைக் காலங்களில் அதிக பாதிப்பு: சில்லிடு நடமாட்டம் மற்றும் தட்பவெப்ப நிலைகளின் உறவுகள் பற்றிய ஆய்வில், சில்லிடின் தாக்கம் அதிக வெப்பமுள்ள கோடைகாலங்களில் (மார்ச்) அதிகமாகவும், மழைக் காலங்களில் குறைந்தும் (அக்டோபர்) காணப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. மற்றொரு முக்கியப் பூச்சியான இலை சுருட்டுப் புழுவின் தாக்கம் அக்டோபர் மாதத்தில் அதிகமாகவும் ஜனவரி மாதத்தில் குறைந்தும் காணப்பட்டது. இந்த இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் பொதுவாக மழைக் காலங்களில் (அக்டோபர்) அதிக அளவிலும், கோடை காலங்களில் (மார்ச்) குறைந்த அளவிலும் காணப்பட்டது. 
உயிரியல் முறையிலான பூச்சி மேலாண்மை: கறிவேப்பிலையைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த பல்வேறு மேலாண்மை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் சிறப்பான மேலாண்மை முறைகளைக் கொண்டு தீவிர உயிரியல் முறைகள் சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உருவாக்கப்பட்டது. 
சில்லிடு பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டறிய மஞ்சள் நிற ஒட்டும் பொறி ஒரு ஹெக்டேருக்கு 50 எண்ணிக்கை பயன்படுத்துதல், இலை சுருட்டுப் புழுவின் அந்துப் பூச்சியினைக் கண்காணிக்க விளக்குப் பொறி ஹெக்டேருக்கு ஒன்று என்ற அளவில் அமைத்தல், இலை சுருட்டுப் புழுவின் முட்டைகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிராமா கைலோனிஸ் ஹெக்டேருக்கு 5 சிசி என்ற அளவில் வெளியிடுதல், புழு ஒட்டுண்ணியான கோனியோஸா நிபான்ட்டிடிஸ் குளவியை ஹெக்டேருக்கு 250 பூச்சிகள் என்ற அளவில் வெளியிடுதல். 
சில்லிடு பூச்சிகளைக் கட்டுப்படுத்த கிரைசோபார்லா சாஸ்டிரோவி சில்லமி என்ற இறை விழுங்கியின் முட்டைகளை ஹெக்டேருக்கு 1 என்றளவில் கட்டுதல், சில்லிடு மற்றும் இலை சுருட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைச் சாறு 2.5 சதம், தாது எண்ணெய் 0.25 சதம் பயன்படுத்துதல், மேலும் தேவைப்பட்டால் சில்லிடு பூச்சிகளின் தாக்கத்திற்கேற்ப பூச்சிகொல்லி மருந்து தயாமீத்தாக்ஸாம், இலை சுருட்டுப் புழுக்களுக்கு குளோரான்டிரானி லிபிப்பிரோல் பயன்படுத்துதல். மேலும், பூச்சிகளின் எதிரிகளான பொறி வண்டு கிரைசோபார்லா மற்றும் பிற எதிரிப் பூச்சிகளின் இனத்தைப் பெருக்க கறிவேப்பிலை தோட்ட வரப்புகளில் சோளம் மற்றும் தட்டைப்பயறு வரிசை நடவு செய்தல், மேற்கூறிய தீவிர உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை உத்திகளை சாகுபடியில் உள்ள கறிவேப்பிலையில் 0.4 ஹெக்டேர்(ஓர் ஏக்கர்) பரப்பில் பரிசோதனை செய்யப்பட்டது. 
இதன் முடிவில், கறிவேப்பிலையில் தோன்றும் முக்கியப் பூச்சிகளான சில்லிடு மற்றும் இலை சுருட்டுப் புழுக்களின் தாக்குதல் கணிசமாகக் குறைந்துள்ளது. மேலும், உயிரியல் முறை சார்ந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செய்த வயலில் நன்மை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் அதிக எண்ணிக்கையில் உள்ளதும், பயிர் வளர்ச்சி அதிகமாக உள்ளதும் கண்டறியப்பட்டடுள்ளது. முக்கியமாக, அறுவடை செய்யும் கறிவேப்பிலையில் பூச்சிக்கொல்லியின் நச்சுத்தன்மை கண்டறிய இயலாத அளவில் குறைந்து இருப்பதும் அறியப்பட்டது. இதன் பயனாக செலவினங்கள் குறைந்தும், வருவாய் அதிகமாகவும் கிடைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com