சிவகங்கை அருகே 60 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத 12 கிராமங்கள்!

வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சிவகங்கை அருகே உள்ள எஸ்.மாம்பட்டி கிராமம் உள்ளிட்ட 12 கிராம மக்கள்

வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சிவகங்கை அருகே உள்ள எஸ்.மாம்பட்டி கிராமம் உள்ளிட்ட 12 கிராம மக்கள் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மிக முக்கிய விழாக்களில் முதன்மையான தீபாவளி பண்டிகையை அனைத்துத் தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும்.
இந்தப் பருவ காலத்தில்தான் தமிழகம் முழுவதும் வேளாண்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவது வழக்கம். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம், எஸ்.மாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சத்திரப்பட்டி, ஒப்பிலான்பட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சபட்டி, கழுங்குபட்டி, தோப்புபட்டி, இந்திரா நகர் ஆகிய 12 கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வாழும் மக்கள் வேளாண்மையையும், வேளாண் சார்ந்த கால்நடை வளர்ப்பை மட்டுமே பிரதானத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், 60 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, எஸ்.மாம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் வேளாண் பணி முடங்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும், வேளாண்மை பணியை துறக்க முடியாத நிலையில் இருந்த கிராம மக்கள், நிலச்சுவான்தாரர்களிடமிருந்து பொருள்களைக் கடனாகப் பெற்று, விவசாயம் மேற்கொண்டனர்.
    விவசாயிகள் கடும் வறட்சியாலும், கடன் சுமையாலும் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தீபாவளி பண்டிகை வந்துள்ளது. அந்த கிராமங்களில் ஒருபுறம் வேளாண் பணி மும்முரமாக நடைபெற்ற நிலையில், அடுத்தடுத்த செலவுகளுக்கு கையில் பணமில்லாமல், அதற்கும் கடன் வாங்க வேண்டியிருந்த சூழல்நிலையில் விவசாயிகள் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.    
எனவே, வேளாண் பணி பாதிக்கப்படாமலும், கிராம மக்களிடம் ஒற்றுமையை பேணவேண்டும் என்ற நோக்கோடும், கிராமத்தின் பெரிய அம்பலகாரர் பெரி. சேவுகன் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் 12 கிராம மக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதில்லை என முடிவு செய்துள்ளனர்.
60 ஆண்டுகளை கடந்த பின்னரும், எஸ்.மாம்பட்டி உள்ளிட்ட 12 கிராமப் பொதுமக்கள் இன்றுவரை தீபாவளி கொண்டாடாமல் தவிர்த்து வருகின்றனர்.
     இதுகுறித்து எஸ்.மாம்பட்டி கிராமத்தின் தற்போதைய பெரிய அம்பலகாரர் சே. சபாபதி (83) கூறியதாவது: 60 ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு காரணங்களால் எஸ்.மாம்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களில் வாழ்ந்த பொதுமக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதை தவிர்த்தனர். அதனை இன்றுவரை பின்பற்றி வருகிறோம். இந்த பண்டிகைக்குப் பதிலாக, அறுவடை காலம் நிறைவடைந்த பின்னர் வரும் பொங்கல் (தமிழர் திருநாளாம்) விழாவை அனைத்து கிராம மக்களும் ஒன்றுகூடி, 3 நாள்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம்.
      மேலும், திருமணமான புதுமணத் தம்பதியினரை தீபாவளி விருந்துக்கு அழைப்பதும், அனுப்புவதும் இல்லை. இதேபோன்று, எங்கள் ஊரிலிருந்து வேலை தேடி வெளியூருக்கு சென்றவர்களும், இதனை இன்னும் பின்பற்றுவர் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது.
அது மட்டுமின்றி, இதுவரை சிறுவர்கள் கூட தீபாவளி பண்டிகையின் போது புத்தாடை கேட்டும், பட்டாசுகள் கேட்டும் அடம்பிடிப்பது இல்லை. அவர்களும் எங்களோடு இணைந்து தீபாவளி பண்டிகையை தியாகம் செய்து வருகின்றனர் என்றார்.
     இதேபோன்று, திருப்பத்தூர் அருகே உள்ள வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள கொள்ளுகுடிபட்டி  கிராம மக்கள், பறவைகள் வெளியேறி விடாமல் இருக்கவும், அவற்றின் நலன் கருதியும், அப்பகுதியில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com