காரைக்கால் அரசு கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஒருங்கிணைந்த கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
காரைக்காலில் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலையில் மாணவ, மாணவியரை சேர்க்கும் விதமாக, இரு கல்லூரிகளுக்கும் ஒருங்கிணைந்த கலந்தாய்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
கல்லூரிகள் மாணவர் சேர்க்கை ஒருங்கிணைந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் தலைமையில் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது. இரு கல்லூரிகளில் 2,872 இடங்களுக்கு 1,215 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கலந்தாய்வு ஜூலை 19 தொடங்கி 27-ஆம் தேதி வரை நடத்தும் வகையில் திட்டமிடப்பட்டு, நாள்தோறும் 100 மாணவ, மாணவியரை கலந்தாய்வில் பங்கேற்கச் செய்யும் வகையில் மதிப்பெண்கள் வாரியாக தரம் பிரித்து அழைப்பாணை தரப்பட்டுள்ளது.
முதல் நாள் கலந்தாய்வு காலை 10 மணிக்குத் தொடங்கியது. இதில் விளையாட்டு வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் கலந்துகொண்டனர். கலந்தாய்வுக் குழுவினர் மாணவ, மாணவியரின் சான்றிதழை பரிசோதித்து, அவர்கள் கோரிய பாடப் பிரிவு, மதிப்பெண்கள் விவரங்களை சரிபார்த்து தகுதியானவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கினர். மாணவ, மாணவியர் தங்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டுள்ளனர். அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட இரு கல்லூரி நிர்வாகத்தினரும் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.