நெற்பயிரில் களை கட்டுப்பாடு அவசியம்: வேளாண்மைத் துறை

நெற்பயிரில் களை கட்டுப்பாடு அவசியம் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

நெற்பயிரில் களை கட்டுப்பாடு அவசியம் என வேளாண்மைத் துறை அறிவுறுத்தியுள்ளது.

 இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பெ.ஹரிதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: களைகள் என்பவை பயிருக்கு தேவை இல்லாதது. இடத்துக்காகவும், சத்துக்கள், சூரிய ஒளி மற்றும் நீர்த் தேவைகளுக்காகவும் பயிருடன் போட்டியிட்டு மகசூலை பெருமளவில் குறைக்கிறது. களைகள், பூச்சி மற்றும் நோய்களின் மாற்று இருப்பிடமாக உள்ளதால் பயிரில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு முக்கிய காரணியாக விளங்குகின்றன.

 நெற்பயிரில் பிரதான களைகளாக புல் வகைகளைச் சேர்ந்த குதிரைவாலி, மயில் கொண்டை, அருகம்புல் போன்ற களைகளும், கோரை வகைகளைச் சேர்ந்த ஊசி கோரை மற்றும் வட்டக் கோரை வகைகளும் மற்றும் அகன்ற இலை களைகளான நீர்முள்ளி, வல்லாரை, ஆராகீரை போன்றவைகளும் காணப்படுகின்றன.

 களைகள் உள்ள பயிர்களின் மகசூல் பெருமளவில் குறைகிறது. மேலும், பூச்சி மற்றும் நோய் தொற்றுவதற்கு மூல ஆதாரமாக உள்ளதால், களைகளை அகற்றி பயிரினை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியமாகிறது. களைகளை கட்டுப்படுத்தவில்லை என்றால் 35 முதல் 45 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

 நெல் நடவுப் பயிரில் ஒரு ஏக்கருக்கு களை முளைப்பதற்கு முந்தைய களைக்கொல்லிகளான பிரிட்டிலாகுளோர் 50 சதம், இ.சி. 400 மி.லி. அல்லது பூட்டாகுளோர் 50 சதம், இ.சி. 1000 மி.லி. ஆகியவற்றை 50 கிலோ உலர்ந்த மணலுடன் கலந்து நடவு செய்த 3-4 நாள்களில் வயலில் நீர் நிறுத்தி தூவ வேண்டும்.

 நேரடி நெல் விதைப்பில் பிரிபைரிபாக்சோடியம் 10 சதவீத மருந்தினை பயிர் முளைத்ததிலிருந்து 15 நாள்களுக்குப் பின்னர், வயலில் ஈரம் இருக்கும் நிலையில் ஏக்கருக்கு 80 மில்லி மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். களைக்கொல்லி தெளித்து 3 நாள்கள் வரை வயலில் மண் மறையும் அளவுக்கு நீர் நிறுத்தப்பட வேண்டும்.

 டெல்டா பகுதி விவசாயிகளுக்கு சம்பா சிறப்பு தொகுப்புத் திட்டத்தின் கீழ் நெற்பயிர் களைக்கொல்லி உபயோகத்துக்கு பின்னேற்பு மானியமாக ஒரு ஏக்கருக்கு ரூ.280 வீதம் வழங்கப்படுகின்றது. களைக்கொல்லி வாங்கியதற்கான பட்டியல் மற்றும் உரிய விவரங்களுடன் அந்தந்தப் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகினால், வங்கிக் கணக்கில் உரிய மானியத் தொகையை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com