பறவைகளைப் போல போக்குவரத்து ஒழுங்கை மனிதர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று விழுப்புரம் டி.ஐ.ஜி. தெரிவித்தார்.
விழுப்புரம் நகரில் உள்ள 5 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் "போக்குவரத்து பறவைகள்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில், மாவட்ட காவல் துறை, ஊர்க்காவல் படையுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் தொடக்க விழா, விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளியில், புதன்கிழமை நடைபெற்றது. ஊர்க்காவல் படை மண்டலத் தளபதி ஸ்ரீதர் வரவேற்றார். விழுப்புரம் டி.எஸ்.பி. சங்கர், ஏ.டி.எஸ்.பி. ஜோஸ் தங்கையா, மாவட்ட கல்வி அலுவலர்(பொ) சுந்தரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்வுக்கு டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது: இந்த அமைப்புக்கு "போக்குவரத்துப் பறவைகள்' என்று பெயர் வைக்கக் காரணம், பறவைகள் போக்குவரத்து ஒழுங்கை மீறி பறப்பதில்லை. தனியாகப் பறந்தாலும், ஆயிரம் பறவைகள் சேர்ந்து பறந்தாலும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளாமல், விமானப்படை விமானங்கள் போன்று தனக்கென ஒழுங்குடன் பறப்பவை. அந்த வகையில், பறவைகளைப் பார்த்து நாம் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும்.
மாணவர்கள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வை தொடங்கியுள்ளோம். மாணவர்களாகிய நீங்கள் உள்ள பெற்றோரிடம், உங்கள் தெருவில் உள்ளவர்களிடம் இதனை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த, போக்குவரத்துப் பறவைகள் அமைப்பில் இருக்கும் மாணவர்களுக்கு முகவரி மட்டும் எழுதப்பட்ட தபால்கள் கொடுக்கப்படும். அதில், விதிகளை மீறிச் செல்லும் வாகனங்களின் எண்ணை எழுதி, காவல்துறைக்கு அனுப்பி வைக்கலாம். அதன்பிறகு, காவல் துறை நடவடிக்கை எடுக்கும். தற்போது, 5 பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, மாவட்டம் முழுவதும் விரைவில் விரிவுபடுத்தப்படும்.
அதேபோல, கல்வியில் பின்தங்கியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இளம் வயது பெண்கள் ஆசை வார்த்தைகளில் சிக்கி ஏமாறுகின்றனர். எனவே, பள்ளிகளிலேயே அதுகுறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். ஒருவர் கூறும் ஆசை வார்த்தைகளை மாணவிகள் நம்பக் கூடாது. அதில் நடைமுறைக்கு உகந்தது எது என்பதை பகுத்தறிபவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்றார்.
முன்னதாக எஸ்.பி. ஜெயக்குமார் பேசுகையில்: தமிழகத்தில் காஞ்சிபுரத்துக்கு அடுத்து அதிக விபத்து நிகழும் மாவட்டமாக விழுப்புரம் உள்ளது. வாகன ஓட்டிகள் கவனக் குறைவைத் தவிர்த்து, போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றினால் விபத்துகளையுயும் தவிர்க்க இயலும் என்றார்.
நிகழ்ச்சியில், விழுப்புரம் கம்பன் கழகச் செயலாளர் சங்கரன், பள்ளித் தாளாளர் சோழன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் 40 மாணவ, மாணவிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில் உள்ள மாணவர்களுக்கென பிரத்யேக பிரதிபலிப்புச் சீருடைகள், தொப்பி போன்றவை வழங்கப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலை வேளைகளில் 6 மாணவ, மாணவிகள் வீதம் பள்ளிப் பகுதி, அவர்கள் வசிக்கும் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுவர். குறிப்பாக, பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகளை பத்திரமாக சாலையை கடக்க உதவுவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.