

நாட்டின் பொதுப் பணவீக்கம் சென்ற ஜனவரி மாதத்தில் 5.25 சதவீதமாக அதிகரித்தது.
இதுகுறித்து மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:
மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான பொதுப் பணவீக்கம் சென்ற ஜனவரியில் 5.25 சதவீதமாக உயர்ந்தது. இப்பணவீக்கம், கடந்த ஆண்டு ஜனவரியில் (-) 1.07 சதவீதமாகவும், டிசம்பரில் 3.39 சதவீதமாகவும் காணப்பட்டது.
இதற்கு முன்பு பொதுப் பணவீக்கம் சென்ற ஜூலையில் தான் 5.41 சதவீதமாக மிகவும் அதிகரித்திருந்தது.
சென்ற ஜனவரியில் பொதுப் பணவீக்கம் அதிகரித்துள்ளதற்கு எரிபொருள்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து 18.14 சதவீதமாக காணப்பட்டதே முக்கிய காரணமாகும். டிசம்பரில் இது 8.65 சதவீதமாக காணப்பட்டது.
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான பணவீக்கம் முறையே 31.10% மற்றும் 15.66% உயர்ந்தது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சென்ற டிசம்பரிலிருந்து கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க அதன் உற்பத்தி நாடுகள் முடிவெடுத்ததையடுத்து சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருள்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் சென்ற ஜனவரியில் (-) 0.56% பின்னடைந்துள்ளது. டிசம்பரில் இப்பணவீக்கம் (-) 0.70 சதவீதமாகக் காணப்பட்டது.
சென்ற ஜனவரியில் காய்கறிகளுக்கான பணவீக்கம் (-) 32.32% இருந்தது. தொடர்ந்து ஐந்து மாதங்களாக காய்கறிகளின் விலை சரிவடைந்துள்ளது. இதற்கு, வெங்காயத்தின் விலை (-) 28.86 சதவீதம் என்ற அளவில் குறைந்ததே முக்கிய காரணம்.
பருப்பு வகைகளுக்கான பணவீக்கம் சென்ற ஜனவரியில் 18.12 சதவீதத்திலிருந்து சரிவடைந்து 6.21 சதவீதமாக காணப்பட்டது. உருளைக்கிழங்கின் விலை வரலாறு காணாத அளவில் 26.42 சதவீதத்திலிருந்து வீழ்ச்சி கண்டு (-) 0.20 சதவீதமாக இருந்தது.
நவம்பர் மாதத்துக்கான பணவீக்கம் மறுமதிப்பீட்டில் 3.38% அதிகரித்துள்ளது. தாற்காலிக மதிப்பீட்டில் இது 3.15 சதவீதமாக காணப்பட்டது என்று அந்த புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஜனவரியில் பொதுப் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் சில்லறை பணவீக்கம் ஐந்து ஆண்டுகளில் காணப்படாத அளவில் 3.17 சதவீதமாக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.