மீனுக்கு தண்டனை தண்ணீரிலா? 

ஒரு நாடு. ஒரு திருடன். அவன் பலே கெட்டிக்காரன். எந்த தவறை செய்தாலும் ஆதாரமில்லாமல் செய்வான். மாட்டிக் கொள்ள மாட்டான். அவனுக்கு எதிராக எந்த ஆதாரங்களும், சாட்சிகளும் இது நாள்வரை இல்லை. அதனால் ஊரில் பெரிய
மீனுக்கு தண்டனை தண்ணீரிலா? 

ஒருவழியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தாச்சு. இனி அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வரும் என்று கணித்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. புதிய குழப்பங்களும், அராஜகங்களும் முளைத்திருக்கிறது.

நம்மைச் சுற்றி வட்டமிடும் விஷயங்களைப் பார்க்கும் போது சட்டம் தவறு செய்பவர்களுக்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

ஒரு குற்றவாளி, நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் தண்டிக்கப்படுகிறார். அவர் தண்டனைக் காலமாகிய நான்கு ஆண்டுகளும், அதன் பிறகு ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. மொத்தமாக பத்து ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இது சட்டம். ஆஹா! அருமையான சட்டம் என்று பாராட்ட முடியவில்லை. காரணம், அதே நபர் அரசை ஆட்டிப்படைக்கும் கட்சிப் பொறுப்பில் தொடர்வதற்கு எந்த தடையும் சட்டத்தில் இல்லை. குற்றவாளி நேரடியாக அரசில் ஈடுபடமுடியாது. ஆனால், அவரின் எண்ணங்களை அவரின் அடிப்பொடியார்கள் மூலம் சிறையிலிருந்தபடியே நிறைவேற்றிக் கொள்ளலாம். இது எந்த விதத்தில் நியாயம்? திருட்டும் புரட்டும் அரசுக்கு ஆகாது, ஆனால் அரசை வழி நடத்தும் கட்சிக்கு ஆகுமா?

நமக்கெல்லாம் மகாகவி பாரதியாரைத் தெரியும். பாடல் வரிகளால் சுதந்திர வேட்கையை ஊட்டியவர். அவருடைய இறுதி ஊர்வலத்தில் பதினான்கு நபர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள் என்பது நாம் வெட்கப்பட வேண்டிய விஷயம். இதையெல்லாம் விட சமீபத்தில் ஊடகங்களில் மகாகவி பாரதியாரின் மனைவி திருமதி செல்லம்மாள் எழுதிய கடிதம் ஒன்றை பிரசுரித்திருந்தார்கள். அதன் வரிகள் படிப்பவர் மனத்தில் கனத்தை ஏற்படுத்தும். அந்தக் கடிதம் திரு. காமு ரெட்டியாருக்கு முகவரியிடப்பட்டிருந்தது.

மகாகவி பாரதியாரின் மறைவிற்கு பிறகு அவரின் குடும்பம் வறுமையில் வாடிக்கொண்டிருந்தது. கொஞ்சநஞ்ச கஷ்டமல்ல. ஒவ்வொரு வேளை சோற்றுக்கும் பிறரை எதிர்பார்க்கும் நிலை. அவர்களின் கஷ்டத்தை தெரிந்து கொண்ட திரு. காமு ரெட்டியார் மளிகைப் பொருட்களும், விறகும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தார். பல வருடங்கள் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார். திடீரென்று பொருட்கள் வருவது நின்று போனது. பட்டினியால் வாடிய செல்லம்மாள் அவர்கள் காமு ரெட்டியாருக்கு ஒரு நினைவூட்டல் கடிதம் எழுதினார். காமு ரெட்டியார் அளித்த வாக்குறுதியை சுட்டிக்காட்டி தனக்கு மளிகைப் பொருட்களும், விறகும் அனுப்பும்படி கேட்டிருந்தார். காமு ரெட்டியாரின் பதிலுக்காக காத்திருந்தார். நீண்ட நாட்களாகியும் பதில் இல்லை. காரணம், காமு ரெட்டியார் இறந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. இது செல்லமாளுக்கு தெரியாது. பிள்ளைகளே பெற்றோர்களை காப்பாற்றாத இன்றைய உலகில் காமு ரெட்டியாரின் பெருத்தன்மையை பாராட்டுவதா? சுதந்திர போராட்ட சிந்தனையிலே குடும்பத்தை கவனிக்காமல் போன பாரதியாரின் தியாகத்தை பாராட்டுவதா? தேசத்துக்கு உழைத்த குடும்பங்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டது என்பதை இந்த ஒரு சிறு சம்பவம் நமக்கு உணர்த்தும். அப்படி கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரம் இன்று அதர்மத்தின் பிடியில் சிரிப்பாய் சிரிப்பதை பார்க்க முடிகிறது.

தொலைக்காட்சியில் மரியாதைக்குறிய கழகத்தின் பொதுச்செயலாளர் வேலு நாச்சியார் மாண்புமிகு சின்னம்மா வி.கே. சசிகலா அவர்கள் சிறைக்குச் செல்லும் காட்சியை காண்பித்தார்கள். வழி நெடுக தொண்டர்கள் நின்று கதறினார்கள். முன்னும், பின்னும் கார்கள் புடைசூழ பெங்களூரு சிறைச்சாலையை நோக்கி வண்டிகள் சீறிப்பாய்ந்தது. இவர்களோடு மக்கள் பிரதிநிதிகளும் அவரை பின்தொடர்ந்து வழியனுப்பியதை பார்க்க முடிந்தது. இந்த சம்பவங்களுக்கிடையில் சமாதியில் ஒன்றரை டன் எடையில் ஓங்கியடித்து சபதம் வேறு. இதுபற்றி தொடர்ந்து எழுதுவதற்கு எனக்கு மனமில்லை. அப்படியே விடுகிறேன்.

சுதந்திரத்திற்கு போராடியவரின் குடும்பங்கள் சோற்றுக்கு திண்டாடியது. பாரதியாரின் இறுதி ஊர்வலத்தில் பதினான்கு நபர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த இரண்டு நிகழ்வுகளை தற்போதைய நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். என் சிந்தனை எவ்வளவு கேவலமானது என்பதை இந்த ஒப்பீடு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

சிறைச்சாலையின் வாயிலுக்கு சென்றவுடன் திருமதி வி.கே சசிகலா இறங்கிக்கொள்ள அதற்காகவே காத்திருந்தது போல ஒரு கூட்டம் அவருடன் வந்த கார்களை அடித்து நொறுக்குகிறது. யார் யாரை தாக்குகிறார்கள்? அவர்களின் உள்நோக்கம் என்ன? என்பது யாருக்கும் புரியவில்லை. அந்தப் பிரச்னை அத்தோடு முடிந்தது. தாக்கியவர்களின் நோக்கத்தைப் பற்றி யாரும் வாய் திறக்கவேயில்லை. ஆனால், சில மணி நேரங்களுக்கு பிறகு பாஜக மாநிலங்களவை உறுப்பினர் திரு. சுப்ரமணியன் சுவாமி பேட்டி அளித்தார். ‘திருமதி சசிகலாவிற்கு பெங்களூரு சிறையில் பாதுகாப்பில்லை அவரை தமிழ் நாட்டு சிறைக்கு மாற்ற வேண்டும்', என்று கோரிக்கை விடுத்தார்'.

திரு.சுப்ரமணியன் சுவாமி அவர்களே உங்களுக்கு திருமதி சசிகலாவின் பாதுகாப்பு முக்கியமா? அல்லது தமிழ் நாட்டு சிறைக்கு அவரை பத்திரமாக கொண்டு வந்து சேர்ப்பது முக்கியமா? இந்த வழக்கைப் பொறுத்தவரை செல்வி. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நீங்கள் அடித்த அந்தர் பல்டிக்கான காரணம் எங்களுக்கு புரியவில்லை. திருமதி சசிகலாவின் பாதுகாப்பில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அவரை திகார் ஜெயிலுக்கு மாற்றும்படி அறிவுரை வழங்குங்கள். திகார் ஜெயிலின் பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், பக்கத்தில் இருக்கும் புதுவை துணை நிலை ஆளுனரை கேளுங்கள். அவருக்கு திகாரின் அனுபவம் அதிகம். இந்த அறப்பணி உங்களுக்கும் நீங்கள் சார்ந்த கட்சிக்கும் நிச்சயமாக பெருமை சேர்க்கும்.

எவ்வளவோ அரும்பாடுபட்டு தலைவர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரம் இன்றைய அரசியல்வாதிகளிடம் சிக்கித் தவிக்கிறது. “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஊழல்வாதிகளுக்கு கிடைத்த சவுக்கடி. ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இதுதான் தண்டனை” என்று பேசி வரும் பல அரசியல்வாதிகள் இதுவரை சட்டத்தின் பிடியில் மாட்டிக்கொள்ளாதவர்களே தவிர, பரிசுத்தமானவர்கள் அல்ல. இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. ‘திருடுவது குற்றமில்லை. மாட்டிக்கொண்டால்தான் குற்றம்'. அதாவது நியாயப்படி குற்றம். சட்டப்படி குற்றமல்ல. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நியாயத்திற்கும், சட்டத்திற்கும் இடைவெளியில் பலே திருடர்கள் ஒய்யாரமாக வாழ்க்கையை ஓட்டுகின்றனர். முடிசூடா மன்னர்களாக வலம் வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சட்ட அணுகுமுறை நமக்கு பயன் தராது. நம்முடைய சட்டத்திற்கு வயதாகிவிட்டது. அது தள்ளாடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த நேரத்தில் அதற்கு வலுவூட்ட வேண்டும். இதற்காக சட்டங்களை கடுமையாக்க வேண்டிய அவசியமில்லை. சட்டத்தின் ஓட்டைகளை தற்போதுள்ள சூழலுக்கு ஏற்றார் போல அடைக்க வேண்டும். இந்த தருணத்தில் ஒரு குட்டிக்கதையை பார்ப்போம்.

ஒரு நாடு. ஒரு திருடன். அவன் பலே கெட்டிக்காரன். எந்த தவறை செய்தாலும் ஆதாரமில்லாமல் செய்வான். மாட்டிக் கொள்ள மாட்டான். அவனுக்கு எதிராக எந்த ஆதாரங்களும், சாட்சிகளும் இது நாள்வரை இல்லை. அதனால் ஊரில் பெரிய மனிதராக வலம் வந்து கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து ஆதாயங்களை அனுபவிக்க ஒரு கூட்டமும் இருந்தது.

‘இவ்வளவு தைரியமாக உலவி வருகிறாயே! உனக்கு பயமாக இல்லையா?' என்று எல்லோரும் கேட்பார்கள்.

‘நான் தவறு செய்வதை நிரூபிக்கும் ஆதாரம் இருந்தால் காண்பியுங்கள். பிறகு தண்டியுங்கள்', என்பான் திருடன்.

அந்த நாட்டு அரசனும் எதுவும் செய்ய முடியாமல் அமைதியாக இருந்தான்.

அந்த நாட்டிற்கு ஒரு சாது வந்தார். அவரிடம் திருடனை பற்றியும், அரசனின் அமைதியை பற்றியும் மக்கள் முறையிட்டனர்.

ஒலை ஒன்றை எடுத்தார் சாது. அதில் ஏதோ எழுதினார். அதை அரசனிடம் கொடுத்தனுப்பினார்.

அன்று மாலை, திருடனை விருந்திற்கு அழைத்தார் அரசர். விருந்திற்கு சென்ற திருடன் வீடு திரும்பவில்லை. அன்று இரவே திருடன் தூக்கிலிடப்பட்டான்.

அவனுடைய ஆதரவாளர்கள் நேராக அரசனிடம் சென்றனர். திருடனை தூக்கிலிட்டதற்கான காரணத்தை கேட்டனர். அரசர் அமைதியாக பதிலளித்தார்.

‘மக்களே உங்கள் நண்பரை நேற்று விருந்திற்கு அழைத்தேன். அப்போது அவன் ராஜ ரகசியத்தை திருடிவிட்டான். அதனால் அவன் தூக்கிலிடப்பட்டான்', என்றார் அரசர்.

‘அப்படி என்ன பொல்லாத ரகசியம்?' என்று கேட்டார்கள் ஆதரவாளர்கள்.

‘அது ராஜ ரகசியம். அதை தெரிந்து கொண்டவர்கள் யாரும் உயிருடன் இருக்க முடியாது. நீங்கள் யாராவது தெரிந்து கொள்ள வேண்டுமா?', என்று கேட்டார் அரசர்.

அவ்வளவுதான். அனைவரும் ஓட்டம் பிடித்தனர். நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அரசி பேசினார்.

‘அரசே! அதென்ன ராஜ ரகசியம்? என்னிடமாவது சொல்லுங்கள்', என்று கேட்டார் அரசி.

சாது தனக்கு அனுப்பிய ஓலைச் சுவடியை காண்பித்தார் அரசர். அதில் பின்வரும் வரிகள் எழுதப்பட்டிருந்தது.

“நியாயத்தை கடைபிடித்து, சட்டத்தின் விதிகளையும் மேற்கோள் காட்டி பிறகு தண்டிக்க வேண்டும் என்பது நியாயத்தின் மீதும், தர்மத்தின் மீதும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அநியாயக்காரர்களுக்கு பொருந்தாது. அநியாயக்காரர்களுக்கு முதலில் தண்டனையை கொடுங்கள். பிறகு அதை நியாயப்படுத்தும் விதிகளை தேடுங்கள். தண்ணீரில் வாழும் மீன்களுக்கு தண்டனையை தண்ணீரிலேயே தேடுவது புத்திசாலித்தனமல்ல.” என்று எழுதியிருந்தது.

அரசிக்கு உண்மை புரிந்தது. அரசிக்கு மட்டுமல்ல. நமக்கும்தான்.

திருமதி சசிகலாவை வழி நெடுக நின்று வழியனுப்பியவர்களை பார்க்கும் போதும், அவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடலாம் என்று அனுமதித்த சிறை நிர்வாகத்தையும் பார்க்கும் போதும், ஜனநாயகம் அரசியல்வாதிகளுக்கு மட்டும் முழுச் சுதந்திரம் அளித்திருப்பது புரிகிறது. இதையெல்லாம் விட ஒன்பது நாட்களுக்கும் மேலாக மேல் ஒரு ரிசார்ட்டில் உட்கார்ந்து கொண்டு பத்திரிக்கையாளர்களையும், ஆயிரக்கணக்கான காவல்துறையினரையும், மக்களையும் பிச்சைக்காரர்கள் போல் ரிசார்ட் வெளியே நிற்கவைத்த பெருமை நம்முடைய எம்.எல்.ஏ க்களைச் சாரும்.

எது எப்படி போனால் என்ன. இது மரியாதைக்குறிய மாண்புமிகு சின்னம்மா” வின் அரசு என்று பெருமையாக கூறும் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது.

தொடர்புக்கு:
saadhusriram@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com