இதில் என்ன சர்ச்சை?

நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, அதன் பிறகுதான் 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய குற்றவாளி அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்டு, அதன் பிறகுதான் 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய குற்றவாளி அப்சல் குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுகள் தள்ளிப் போடப்பட்ட தண்டனையை திடீரென்று ஏன் நிறைவேற்ற வேண்டும் என்று கேள்வி எழுப்புவதும், தூக்கு தண்டனை மனிதாபிமானமற்ற செயல் என்று வாதம் செய்வதும், உடலை உறவினர்களிடம் தராமல் சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்திருக்கக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவிப்பதும் தேவையற்றவை என்பது நமது கருத்து.

2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் நாள், நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும்போது, ஐந்து தீவிரவாதிகள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து தாக்கியதில் ஒன்பது பாதுகாப்பு வீரர்கள் உயிரிழக்கிறார்கள். 16 பேர் காயமடைகிறார்கள். ஐந்து தீவிரவாதிகளும் கொல்லப்படுகிறார்கள்.

நாடாளுமன்றத் தாக்குதலுக்கு சில நொடிகளுக்கு முன்னால், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவரான முகம்மது என்பவர் காலை 10.43, 11, 11.25 என்று மூன்று முறை அப்சல் குருவைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ""திட்டமிட்டபடி பணியை நிறைவேற்றுகிறோம்'' என்று அந்தத் தீவிரவாதி, அப்சல் குருவிடம் பேசியதன் ஒலிப்பதிவு சாட்சியம் ஆக்கப்பட்டிருக்கிறது.

அது மட்டுமல்ல, நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புள்ள அந்த ஐந்து தீவிரவாதிகளுக்கும் வட தில்லியில் உள்ள காந்தி விகார், இந்திரா விகார் பகுதிகளில் மறைந்திருப்பதற்கு அப்சல் குரு இடவசதி செய்து கொடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபடத் தேவையான வெடிமருந்து கிடைக்க வழி செய்து கொடுத்ததும், நாடாளுமன்ற வளாகத்திற்குச் செல்ல வாகன வசதி செய்து கொடுத்ததும் அப்சல் குருதான் என்பதும் நீதிமன்றத்தில் தெளிவாக்கப்பட்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, நாடாளுமன்ற வளாகத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளான முகம்மது, ஹைதர், ஹம்சா, ராணா, ராஜா ஆகியோரது உடலை அடையாளம் காட்டியது அப்சல் குருதான். மேலே குறிப்பிட்ட ஐந்து தீவிரவாதிகளுடனும், ஏனைய எதிரிகளான தில்லி பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.ஏ.ஆர். கிலானி, அவரது உறவினர் ஷெளகத் ஹுசைன் குரு, அப்சான் குரு ஆகியோருடன் அப்சல் குருவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது.

மேலே குறிப்பிட்ட விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டு, அதை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, தீர்ப்பு வழங்கி இருக்கிறது. நேரடி சாட்சியம் இருக்கிறதா, அப்சல் குருவுக்கு நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்பு உண்டு என்பது சந்தேகத்துக்கு இடமின்றி சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறதா என்கிற கேள்விக்கு, நீதிபதிகளே தங்கள் தீர்ப்பில் தெளிவாக பதிலளித்திருக்கிறார்கள்.

""இதுபோன்ற சதித் திட்டங்களிலும், தீவிரவாதத் தாக்குதல்களிலும் நேரடி சாட்சியங்களும், சதித் திட்டம் தீட்டியதை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் கிடைப்பது என்பது இயலாத ஒன்று. தரப்பட்டிருக்கும் சாட்சியங்களும், கிடைத்திருக்கும் சூழ்நிலை சாட்சியங்களும் அப்சல் குருவுக்கும், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்ததும், இந்த சதித் திட்டத்தில் அவருக்கு நேரடித் தொடர்பும், பங்கும் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது'' என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டபோது, இப்படிப்பட்ட ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்காவிட்டால், மக்களின் மனச்சான்று அமைதியுறாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்துவோரை வழக்கமான அரசியல் அமைப்பு சட்டத்தில் விசாரணை நடத்தும்போது, அதற்குக் கட்டுப்பட்டே தண்டனைகள் வழங்க வேண்டும். ஆனால் ஆதாரங்களை இன்றைய சட்டங்கள் கோரும் அளவில் அளிப்பதென்பது பெரும்பாலும் சாத்தியப்படுவதில்லை. ஆகவேதான், தீவிரவாதத்தின் தன்மை கருதி கடுமையான தண்டனை அளிக்கும் கட்டாயத்துக்கு நீதிமன்றங்கள் இலக்காகின்றன.

தீவிரவாதிகள் நேரடியாகக் களத்தில் இறங்குவதில்லை. "மூளைச்சலவை செய்யப்பட்ட' மனித அடிமைகளையே தாக்குதலுக்கும், தற்கொலைப் படைக்கும் பயன்படுத்துகிறார்கள். இவர்களைப் பின்னின்று இயக்கியவர்கள் குறித்த ஆதாரங்கள் வெறும் தொலைபேசித் தொடர்புகள் மட்டுமாகவே எஞ்சுகின்றன. பணம், பயிற்சி எல்லாமும் வேறு நாடுகளில் கொடுக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இவர்கள் மீதான குற்றத்தை வலுவான சாட்சியமாக மாற்ற முடிவதில்லை. இந்த ஒரு காரணத்தால், தீவிரவாதத்தைத் தொடர்ந்து விதைத்துக் கொண்டிருப்பவர்களை, "ஆதாரம் இல்லை' என்று விடுவித்து விடுவது சரியாக இருக்காது.

பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு சட்டத் திருத்தம் கொண்டுவந்ததைப் போல, இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் நடத்துவதை ஒரு போர்க் குற்றமாகக் கருதவும், இவர்கள் மீதான வலுவற்ற ஆதாரத்தையும் ஏற்று கடும் தண்டனை விதிக்கவும் புதிய சட்டத்திருத்தம் தேவை.

தீவிரவாதச் செயலில் ஈடுபட்ட ஒருவனுக்காகப் பரிந்து பேசுவதும், அவன் தரப்பு நியாயங்களை முன்வைத்து வாதிடுவதும் மனிதாபிமானம் என்று கருதி செயல்படுபவர்கள், தீவிரவாதிகளால்

ஏற்படும் அழிவுகளை மனிதாபிமானக் கண்ணோடு அணுக மறுப்பதுதான் வேடிக்கை. ரகசியமாக அப்சல் குருவைத் தூக்கில் போடுவானேன் என்பதை சர்ச்சையாக்கி ஒரு தீவிரவாதியைத் தியாகியாக்கிவிட வேண்டாம். அது தேசத் துரோகம் என்பதை அப்சல் குருவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் உணர்ந்தால் நல்லது.

தீர்ப்பு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அத்துடன் நிறுத்திக் கொள்வோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com