கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு மத்திய அரசு உதவி: ராகுல் குற்றச்சாட்டு

வருமான வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டிருப்பதன் மூலம் கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு மத்திய அரசு உதவி செய்வதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு மத்திய அரசு உதவி: ராகுல் குற்றச்சாட்டு

வருமான வரிச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டிருப்பதன் மூலம் கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு மத்திய அரசு உதவி செய்வதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
வருமான வரிச் சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. கருப்புப் பணம் பதுக்கியிருப்பவர்களுக்கு 50 சதவீதம் பணத்தை திருப்பி வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இதன் மூலம் கருப்புப் பணத்தை சட்டப்பூர்வமாக்குவது மட்டுமல்லாமல் அதனைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்கும் அரசு உதவுகிறது. இது கண்டிக்கத்தக்கது என்றார் ராகுல் காந்தி.
வெளிநடப்பு ஏன்? முன்னதாக, நாடாளுமன்றத்திலிருந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்து ராகுல் காந்தி கூறியதாவது:
ஜம்முவில் உள்ள நக்ரோட்டா ராணுவ முகாம் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பலியான இந்திய ராணுவத்தினருக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவரிடம் எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அவர் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. பலியான ராணுவ வீரர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்படாதது இதுவே முதன்முறையாகும். இதனைக் கண்டிக்கும் வகையில் வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார் அவர்.
காங்கிரஸின் மலிவான அரசியல் - பாஜக பதிலடி: நாடாளுமன்றத்திலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிப்பதிவுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நக்ரோட்டா தாக்குதல் சம்பவம் குறித்து இறுதிகட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை நடவடிக்கைகள் முடிந்தவுடன், பலியான ராணுவ வீரர்களுக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்படும். இதனையே மக்களவைத் தலைவர் தெரிவித்தார். ஆனால், இதனை ஏற்க மறுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபடுவதை காங்கிரஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் வெங்கய்ய நாயுடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com