

பெங்களூரில் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.4.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிறகு, பலர் வங்கியாளர்களின் உதவியுடன் கருப்புப் பணத்தை மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாள்களாக அதிரடி சோதனை நடத்தினர்.
பெங்களூரில் நவ.30-ஆம் தேதி நீர்ப் பாசனத் துறையைச் சேர்ந்த உயரதிகாரி, முதல்வர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
மேலும், காவிரி நீர்ப்பாசன நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சிக்கராயப்பா, ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் சக்ரவர்த்தி, மாநில நெடுஞ்சாலை கழகத்தின் மேலாண் இயக்குநர் ஜெயசந்திரா, கொலம்பியா ஏசியா மருத்துவர் நோவல் அகர்வால் உள்ளிட்டோர் வீடுகளில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இதேபோல, பெங்களூரில் பொறியாளர் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
பெங்களூரில் 2 பொறியாளர்கள் மற்றும் 2 ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 4.7 கோடி மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பழைய ரூபாய் நோட்டுகளாக 1.3 கோடி மற்றும் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வளவு மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளது இதுவே முதல்முறையாகும். பறிமுதல் செய்த நோட்டுகளில் ரூ.4.7 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்கள், மீதமுள்ளவை ரூ.100 மற்றும் பழைய ரூ.500 பணத்தாள்களாக இருந்தன.
இந்த விவகாரத்தில் வங்கியாளர் மற்றும் கணினி இயக்குநரையும் கண்காணித்து வருகிறோம்.
சோதனையின்போது பலரது அடையாள அட்டைகளும் கிடைத்துள்ளன. பழைய ரூபாய் நோட்டுகளை சட்ட விரோதமாக புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்கு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.