

மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் நடைபெற்ற விழாவில் தான் கலந்து கொள்வதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போபாலில் கேரள சமாஜத்தால் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்வதாக இருந்தது. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தியதால், போபால் விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கேரள முதல்வரை மத்தியப் பிரதேச போலீஸார் அறிவுறுத்தியதாக கேரள அரசு குற்றம்சாட்டுகிறது.
இதுகுறித்து கொச்சியில் செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: போபால் விழாவில் கலந்து கொள்ளவிருந்தபோது ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எந்தவித காரணமுமின்றி போராட்டம் நடத்தினர். மேலும் அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தியதாலேயே போலீஸார் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என்று என்னை அறிவுறுத்துகின்றனர். இது மத ரீதியிலான பிரச்னையாகும். இந்தச் சம்பவத்திலிருந்து சங்கப் பரிவார் அமைப்புகளின் மதஉணர்வு பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
டிஐஜி விளக்கம்: இதுகுறித்து போபால் காவல் துறை டிஐஜி ரமண் சிங் சிகர்வார் கூறுகையில், "கேரள முதல்வருக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம். சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக விழா நடைபெறும் இடத்துக்கு தாமதமாக செல்லலாம் என்றுதான் அறிவுறுத்தினோம்' என்றார் அவர்.
மார்க்சிஸ்ட் கண்டனம்: இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சி திருவனந்தபுரத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கேரள முதல்வரை போபால் விழாவில் கலந்து கொள்ள விடாமல் தடுத்தது நாகரிகமற்ற செயலாகும். பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில், வேறு மாநில முதல்வரை பாதுகாக்க முடியவில்லை என்றால் அங்கு சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு எவ்வாறு உள்ளது என்பதை மேற்கண்ட சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆணைகளுக்குத் தகுந்தபடி மாநில அரசு செயலாற்றுகிறது என்பதையும் இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.
விழா நடைபெற்ற இடத்தில் போராட்டம் நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை அந்த மாநில போலீஸார் கைது செய்யாமல், முதல்வரை அங்குச் செல்லவிடாமல் தடுப்பது கண்டனத்துக்குரியது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.