நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தை எதிர்த்து கட்ஜு மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குறித்து விமர்சித்ததற்காக தமக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும்

மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் குறித்து விமர்சித்ததற்காக தமக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்ஜு வெளியிட்ட முகநூல் பதிவில், காந்திஜியை ஆங்கிலேயர்களின் ஏஜெண்ட் என்றும் நேதாஜியை ஜப்பானின் ஏஜெண்ட் என்றும் விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி மாநிலங்களவையிலும் 12-ஆம் தேதி மக்களவையிலும் கட்ஜுவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
அதை எதிர்த்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் கட்ஜு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: எனது முகநூல் பதிவில் "காந்திஜியை மதிக்கிறேன்; ஆனால், ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்களைப் பிரித்துப் பார்த்தார்' என்றுதான் கூறினேன். அதேபோல், "நேதாஜியின் நடவடிக்கைகளின் காரணமாக அவருக்குத் தெரிந்தோ தெரியாமலோ இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்தும் ஜப்பானின் விருப்பத்துக்குப் பலியாகி விட்டார்' என்றும் கூறியிருந்தேன்.
தனிநபரான என் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வர, நாடாளுமன்றத்துக்கு அதிகாரமில்லை.
மேலும், கண்டனத் தீர்மானம் தொடர்பாக எனது கருத்தையோ அல்லது எனது வழக்குரைஞரின் வாதத்தையோ கேட்க வேண்டும் என்று மக்களவைத் தலைவருக்கும் மாநிலங்களவைத் தலைவருக்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வின் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்க்கண்டேய கட்ஜுவின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com