

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) 5,12,18,28 சதவீதம் என நான்கு அடுக்காக விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் வியாழக்கிழமை இறுதி முடிவு எடுத்துள்ளது.
இதன்படி அத்தியாவசியப் பொருள்களுக்கு குறைந்தபட்சமாகவும், ஆடம்பரப் பொருள்களுக்கும், புகையிலை உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பொருள்களுக்கும் அதிகபட்சமாகவும் வரி விதிப்பு இருக்கும். ஜிஎஸ்டி வரி அடுத்த ஆண்டு (2017) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நுகர்வோர் விலைக் குறியீட்டை நிர்ணயிக்கும் பொருள்களில் 50 சதவீதப் பொருள்களுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது. இதில் உணவு தானியங்களும் அடங்கும். மக்களால் தினசரி அதிகம் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கு குறைந்தபட்சமாக 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். பொதுவாக பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகள் மீது 12 முதல் 18 சதவீதம் என இரு அடுக்குகளில் வரி விதிக்கப்படும்.
வரி இழப்பை ஈடு செய்வோம்:
சொகுசு கார்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருள்கள், புகையிலைப் பொருள்கள், பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கு 28 சதவீதம் என அதிகபட்ச வரியும், சுத்தமான எரிசக்திக்கான கூடுதல் வரியும் விதிக்கப்படும். இந்த கூடுதல் வரி மூலம் மாநிலங்களுக்கு முதல் 5 ஆண்டுகளில் ஏற்படும் வரி இழப்பு சரி செய்யப்படும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதல் வரி விலக்கிக் கொள்ளப்படும். மாநிலங்களுக்கு ஏற்படும் வரி இழப்பை ஈடு செய்ய ரூ.50,000 கோடி தேவைப்படுகிறது.
ஆடம்பரப் பொருள்களில் இருந்து கிடைக்கும் கூடுதல் வரி வருவாய் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் மீதான வரியை குறைவாக நிர்ணயிக்க முடியும். தங்கத்தின் மீது 4 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய அரசு உத்தேசித்துள்லது. எனினும், இது தொடர்பாக இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றார் ஜேட்லி.
நாடு முழுவதும் ஒரே விகிதத்தில் வரி:
பொருள்கள், சேவைகள் மீது மத்திய, மாநில அரசுகள் உற்பத்தி வரி, விற்பனை வரி, கூடுதல் வரி என பல்வேறு வரிகளை இப்போது விதித்து வருகின்றன. இந்த வரி விகிதம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். இவற்றுக்கு மாற்றாக நாடு முழுவதும் ஒரே சீரான ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு முடிவெடுத்து, அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல்வேறு வளர்ந்த நாடுகளில் ஜிஎஸ்டிதான் அமலில் உள்ளது.
நீண்ட இழுபறிக்குப் பிறகு...
எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக ஜிஎஸ்டி மசோதா நாடாளுமன்றத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. தங்களுக்கான வரி வருவாய் குறையும் என்பதால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் ஜிஎஸ்டி-க்கு எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டியை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டது. மக்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் அங்கு நிறைவேற்றப்படாமல் இருந்தது.
இதையடுத்து காங்கிரஸிடம் பாஜக ஆதரவு கோரியது. எனினும், தாங்கள் கூறியபடி ஜிஎஸ்டி மசோதாவில் சில திருத்தங்களைக் கொண்டுவர வேண்டுமென்று காங்கிரஸ் வலியுறுத்தியது. இதனால் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. ஜிஎஸ்டி தொடர்பான காங்கிரஸ் கட்சியின் 4 நிபந்தனைகளை மத்திய அரசு ஏற்றதை அடுத்து மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது. அதிமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டியை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஜிஎஸ்டி வரி விகிதங்களை நிர்ணயிப்பது, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வது உள்பட ஜிஎஸ்டியை முழுமையாக அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, நான்கு அடுக்குகளாக வரி விதிப்பது என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
"பணவீக்கம் குறையும்':
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் பணவீக்கம் குறையும் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ-க்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது:
மக்கள் அதிகம் வாங்கிப் பயன்படுத்தும் பொருள்களுக்கு இப்போது 6 சதவீத வரி உள்ளது. ஜிஎஸ்டி-யில் இது 5 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. எனவே, அப்பொருள்களின் விலை குறையும். வெகுசில பொருள்களுக்கு மட்டுமே வரி 26 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாகக் அதிகரிக்கும். அதேநேரத்தில் பல பொருள்களுக்கு வரி தற்போதுள்ள 26 சதவீதத்தில் இருந்து 18 சதவீதத்துக்கு குறைய வாய்ப்பு உள்ளது. எனவே நாட்டின் பணவீக்கம் குறையும் என்றார் அவர்.
ஜிஎஸ்டி எதிர்பார்ப்புகள்
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு தாற்காலிகமாக பணவீக்கம் அதிகரித்தாலும், அதன்பிறகு பொருள்களின் விலை குறைந்து பணவீக்கம் கட்டுக்குள் வரும். ஜிஎஸ்டி வரி விதிப்பில் உற்பத்திப் பொருள்களுக்கான விலை குறைந்தாலும், சேவைகளுக்காக அதிகம் பணம் செலவிட வேண்டியது இருக்கும். ஏனெனில், இப்போது சேவை வரி 14.5 சதவீதமாக உள்ளது. ஜிஎஸ்டி-யில் இது 18 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஜிஎஸ்டி வரியால் பொருள்களின் உற்பத்திச் செலவு குறையும். இதனால் மக்கள் அதிகப் பொருள்களை வாங்கிப் பயனடைய முடியும். இதனால் நிறுவனங்களின் லாபம் அதிகரித்து அது முதலீடாக மாறும். நாட்டின் பொருளதாரம் வளர்ச்சி வேகமெடுக்கும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.