11,000 என்.ஜி.ஓ.க்களின் அங்கீகாரம் ரத்து: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

நாடு முழுவதும் பதிவைப் புதுப்பிக்காத 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் (என்.ஜி.ஓ) அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் பதிவைப் புதுப்பிக்காத 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சாரா தன்னார்வ அமைப்புகளின் (என்.ஜி.ஓ) அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
அந்தப் பட்டியலில் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களும், நூற்றுக்கணக்கான பள்ளிகளும், சில கல்வி நிறுவனங்களும், சாலையோரக் குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் பிரபலமான சில தன்னார்வ அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
2010-ஆம் ஆண்டைய வெளிநாட்டு நன்கொடை கட்டுப்பாட்டுச் சட்டத்தின் படி, வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகள், தங்களது பதிவை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், நாடு முழுவதும் 11,319 தன்னார்வ அமைப்புகள், தங்களது பதிவை கடந்த ஜூன் மாத இறுதிக்குள் புதுப்பிக்கவில்லை. அந்த அமைப்புகளுக்கு அளிக்கப்பட்ட 3 மாத கால அவகாசமும், கடந்த அக்டோபர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.
எனவே, அந்த அமைப்புகள், வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இதேபோல், 3 ஆண்டுகளாக வரவு-செலவு கணக்கைத் தாக்கல் செய்யாத 10,000 தன்னார்வ அமைப்புகளின் பதிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. அவற்றில், பெரும்பாலான அமைப்புகள் செயல்படாதவை அல்லது வெளிநாட்டு நன்கொடையைப் பெற விரும்பாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அவகாசம்: இதனிடையே, உரிய காலத்தில் விண்ணப்பிக்காததாலும் போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யாததாலும் 1,736 தன்னார்வ அமைப்புகளின் விண்ணப்பங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கவில்லை.
அவற்றில், ராமகிருஷ்ணா மிஷன், மாதா அமிர்தானந்தமாயி அறக்கட்டளையின் சில கிளைகள், கிருஷ்ணமூர்த்தி ஃபவுண்டேஷன் போன்ற பிரபலமான அமைப்புகள், ஜூன் 30-க்கு முன்பாகவே இணையதளத்தில் விண்ணப்பித்தபோதிலும், அந்த விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. எனவே, போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு அந்த அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம், வரும் 9-ஆம் தேதி வரை மீண்டும் அவகாசம் அளித்துள்ளது. வெளிநாட்டு நன்கொடை தடுப்புச் சட்டத்தால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 42,500-ஆக இருந்த வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் தன்னார்வ அமைப்புகளின் எண்ணிக்கை, தற்போது 20,500-ஆகக் குறைந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com