

தேசப் பிதா மகாத்மா காந்தியின் பேரன் கனு காந்தி (87) உடல்நலக் குறைவால் குஜராத்தில் திங்கள்கிழமை காலமானார். மாரடைப்பு மற்றும் மூளையில் ரத்தக் கசிவு காரணமாக சூரத் நகரில் உள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
வயோதிகம் காரணமாக மருத்துவக் கண்காணிப்புகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால், அவரது உடல் நலம் நாளுக்கு நாள் மோசமடைந்து வந்தது. மேலும், கனு காந்தி சுயநினைவின்றி இருந்ததும் அவரது உடல்நிலையில் பின்னடவை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவரது உயிர் பிரிந்தது.
பொது மக்கள் அஞ்சலிக்காக கனு காந்தியின் உடல், குஜராத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. "நாசா' விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானியாகப் பணியாற்றியவர் கனு காந்தி.
விடுதலை வேள்வியின் மைல்கல்லாகக் கருதப்படும் "தண்டி யாத்திரை' போராட்டத்தின்போது மகாத்மாவின் கைத்தடியைப் பிடித்து அழைத்துச் சென்ற பெருமையும் அவருக்கு உண்டு.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனு காந்தியின் உடல் நிலை குறித்து விசாரித்த பிரதமர் மோடி, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், மோடியின் அறிவுறுத்தலின்படி, அண்மையில் மருத்துவமனைக்குச் சென்று கனு காந்தியிடம் நலம் விசாரித்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, அவரது சிகிச்சைக்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.