உரிய ஆதாரங்களின்றி பணம் டெபாசிட்: வருமான வரித் தாக்கலுக்குமுன்பே நடவடிக்கை?

உரிய ஆதாரங்கள் இன்றி வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டால், அவற்றுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு முன்பே கூட 200 சதவீத அபராதம்
Published on
Updated on
1 min read

உரிய ஆதாரங்கள் இன்றி வங்கிக் கணக்குகளில் பணம் டெபாசிட் செய்யப்பட்டால், அவற்றுக்கான வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கு முன்பே கூட 200 சதவீத அபராதம் மற்றும் வரி விதிக்கப்படலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம், கணக்கில் வராத பணத்தை தற்போது டெபாசிட் செய்து விட்டு அடுத்த மார்ச் மாதத்துக்குள் போலி ஆவணங்கள் தயாரித்து வருமான வரியைத் தாக்கல் செய்து எவரும் தப்பிக்க முடியாது. ஏழை மக்களுக்கு மத்திய அரசு தொடங்கிக் கொடுத்த வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி கருப்புப் பணத்தை எவரும் வெள்ளையாக்க முடியாத வகையில் இத்தகைய கடிவாளத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, அந்தப் பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் நவம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 30-ஆம் தேதி வரை செலுத்தலாம் என்று மத்திய அரசு 50 நாள்கள் அவகாசம் அளித்துள்ளது.
ரூ.2.5 லட்சம் வரை வீடுகளில் பணம் வைத்துள்ள இல்லத்தரசிகள், சிறு வர்த்தகர்கள் எந்தவிதமான ஆதாரத்தையும் சமர்ப்பிக்காமல், தங்களது சேமிப்புத் தொகையை வங்கிக் கணக்குகளில் செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. அவ்வாறு ரூ. 2.5 லட்சத்துக்குக் குறைவாக டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வரி விதிப்போ, அபராதமோ இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
அதேவேளையில், ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், அந்தப் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்பட்டு, அதற்கு வரி விதிக்கப்படும் என்று தெரிவித்த மத்திய அரசு, அந்தத் தொகை, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் இருந்தால், வரி விதிப்பில் இருந்து 200 சதவீத அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவித்தது.
இதற்கு நடுவே, கணக்கில் வராத பணத்தை தற்போது வங்கிக் கணக்குகளில் செலுத்தி விட்டு, வருமான வரித் தாக்கல் செய்வதற்குள் அதற்கான போலி ஆவணங்களைத் தயாரிக்க வாய்ப்புள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல், ஏழை மக்களுக்கு தொடங்கிக் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்குகளிலும் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்யலாம் என்றும் கூறப்பட்டது.
இதற்கு கடிவாளம் அமைக்கும் வகையில் சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கப் போவதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்குரிய ஆதாரங்களை தேவைப்படும்பட்சத்தில் வருமான வரித் தாக்கல் செய்வதற்கு முன்னரே வழங்க வேண்டும் என்றும், பொருந்தாத வகையில் அந்தப் பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் வரியுடன் 200 சதவீதம் அபராதம் விதிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் நிதித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளை கண்காணித்து, வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் பணம் டெபாசிட் செய்திருப்பது கண்டறியப்பட்டால், அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com